Published:Updated:

தியேட்டர் வசூல்... ஆன்லைன் வசூல்... சவால் விடும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ்! #VikatanInfographics

ர.முகமது இல்யாஸ்

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் முதலான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓராண்டு முழுவதும் இந்தியத் திரையரங்குகள் ஈட்டிய லாபத்தை, ஆன்லைன் ஸ்ட்ரீங் தளங்கள் அதே ஆண்டில் தொட்டுள்ளன.

ஆன்லைன் சினிமா
ஆன்லைன் சினிமா

சில வருடங்களுக்கு முன்பு திரைப்படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். வெளியாகும் படத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து அது தியேட்டர்களில் எத்தனை நாள்கள் ஓடும் எனக் கணக்கிடப்படும். இது வழக்கமாக இருந்தது.

தொலைக்காட்சிகள் பெருகிய பிறகு, தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை சில மாதங்களில் டிவி சேனல்களில் பார்க்கும் வாய்ப்பு உருவானது. திருட்டு விசிடி கலாசாரம் உருவானது, திரைப்படத்துறைக்குப் பெரும் தலைவலியாக மாறியது.

நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ்
Netflix

இணையம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்குப் பிறகு, தியேட்டர்களில் வெளியாகும் சினிமாவுக்கு, இணையம் சவாலாக மாறியது. ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு முன், இன்டர்நெட் டேட்டா விலை குறைந்தது பெரும்பாலானோர் கைகளில் இணையத்தைக் கொண்டு சேர்த்தது.

தொலைக்காட்சிகளில் திரைப்படம் ஒளிபரப்புவதற்காகப் பெரும் தொகை கொடுத்து உரிமம் வாங்கப்பட்டது. அதே பாணியை இணையதளங்களும் கையாண்டன. தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள், சில நாள்களில் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியிடப்பட்டன.

தற்போது, இணையத்திற்கென்றே பிரத்யேகமாக திரைப்படங்கள், தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு; மற்ற நாட்டு மக்களைவிட, இணையத்தில் இந்தியர்களின் பங்கேற்பு, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் முதலான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓராண்டு முழுவதும் இந்திய தியேட்டர்கள் ஈட்டிய லாபத்தை, ஆன்லைன் ஸ்ட்ரீங் தளங்கள் அதே ஆண்டில் தொட்டுள்ளன.

9.8 GB - ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஓர் இந்தியர் சராசரியாக ஒரு மாதத்தில் நுகரும் டேட்டா.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் ஏறத்தாழ 75% பேர் இணையத்தில் வீடியோ பார்க்கும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர்.

EY என்ற வர்த்தக நிறுவனம், இந்தியாவில் மீடியா மற்றும் பொழுதுபோக்குத்துறையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களைப் பற்றி ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2017-ஆம் ஆண்டு, தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் ஈட்டிய லாபம் 15.6 ஆயிரம் கோடி ரூபாய். அதே ஆண்டு ஆன்லைன் தளங்களில் வெளியான டிஜிட்டல் சினிமா லாபம், 11.9 ஆயிரம் கோடி ரூபாய். ஓராண்டு முடிவடைந்த பிறகு, 2018-ஆம் ஆண்டில் தியேட்டர்கள் 17.5 ஆயிரம் கோடி லாபத்தையும், ஆன்லைன் தளங்கள் 16.9 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளன.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்
Vikatan Infographics

தியேட்டர்கள் லாபத்தில் இயங்கினாலும், முன்பைவிட தற்போது தியேட்டர்களுக்கு வந்து திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

2019-ம் ஆண்டு முடிவில், ஆன்லைன் சினிமாவின் வர்த்தகம் தியேட்டர்களை முறியடித்துவிடும் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

28% - 2018-ல் ஆன்லைன் தளங்களின் லாபத்தில் ஏற்பட்ட வளர்ச்சி.

ஆன்லைன் தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும், தொடர்களும் தியேட்டரில் வெளியாவது போன்ற தரத்தில் எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன. பெரும்பாலும், பார்வையாளர்களால் தனியாகப் பார்க்கப்படுவதால், அதற்கேற்றவாறு கதைகள் உருவாக்கப்படுகின்றன.

Sacred Games
Sacred Games
Netflix

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலான தளங்கள் இந்திய ரசிகர்களைக் கவர்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களே தயாரிக்கும் படைப்புகள் 'ஒரிஜினல்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தளங்களில் பணம் கட்டி, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்தியாவின் கதைகளுக்கு வெளிநாட்டிலும் மிகப்பெரிய சந்தை உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளியான 'சேக்ரெட் கேம்ஸ்' தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 'கௌல்', 'டெல்லி க்ரைம்' முதலான தொடர்களும் வெளிநாட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளன.

தமிழிலும் 'கள்ளச்சிரிப்பு', 'வெள்ளை ராஜா' முதலான தொடர்களும், 'சில சமயங்களில்', 'சிகை' போன்ற திரைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், இந்திய ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தளமாக 'ஹாட் ஸ்டார்' கண்டறியப்பட்டுள்ளது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', ஐ.பி.எல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதலானவை 'ஹாட் ஸ்டார்' வெற்றி பெறுவதற்கான காரணங்கள்.

தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கான வணிக சமரசங்கள், சென்சார் பிரச்னைகள் ஆகியவற்றைத் தவிர்க்க ஆன்லைன் தளங்கள் பெரிதும் உதவுவதாக இயக்குநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், வழக்கமான சினிமா டெம்ப்ளேட்களாக இருக்கும் தொடக்கம் - இடைவேளை - முடிவு என்ற ஃபார்முலாவில் இருந்து விலகி, இணையத்திற்கு ஏற்றவாறு சீஸன்களாக, எபிசோடுகளாகத் திரைக்கதைகள் எழுதப்பட வேண்டும் எனவும் இயக்குநர்கள் கருதுகின்றனர்.

அடுத்து வரும் ஆண்டுகளில், இந்திய ஆன்லைன் சினிமா வர்த்தகத்தில் ஆப்பிள், டிஸ்னி முதலான நிறுவனங்கள் நுழைவது, மற்ற நிறுவனங்களால் கடும் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகவிருக்கும் படைப்புகளைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்திய சினிமாவின் வர்த்தகம் தியேட்டர்களிடமிருந்து, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் பக்கம் திரும்பும் நேரமாக நிகழ்காலம் நிலவுகிறது.