Published:Updated:

தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, சுதீப் நடிக்கும் படம் மீண்டும் தொடங்குகிறதா... உண்மை என்ன?!

தனுஷ், நாகார்ஜுனா, சுதீப்
தனுஷ், நாகார்ஜுனா, சுதீப்

தெலுங்கில் தனுஷுடன் நாகார்ஜுனா, கன்னடத்தில் சுதீப் எனப் பெரிய ஸ்டார்காஸ்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தவிர சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா, ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைத்ரி எனப் பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தனர்.

'பவர் பாண்டி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் மாறிய நடிகர் தனுஷ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இயக்கத்தில் இரண்டாவது படத்தை ஆரம்பித்தார்.

'மெர்சல்' படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்த 'தேனான்டாள் பிக்சர்ஸ்'தான் தனுஷின் இந்தப் படத்துக்கும் தயாரிப்பாளர். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் தயாராகும் வகையில் இந்தப்படம் உருவானது. தெலுங்கில் தனுஷுடன் நாகார்ஜுனா, கன்னடத்தில் சுதீப் எனப் பெரிய ஸ்டார்காஸ்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தவிர சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா, ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைத்ரி எனப் பெரிய நடிகர்கள் படத்தில் இருந்தனர். மேலும், முன்னாள் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் படத்தில் நடிக்கயிருந்தார். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

தனுஷின் கனவுப்படம் இது. இந்தப் படம் இரண்டு கதைக்களங்களைக் கொண்டது. ஒன்று, தற்போது நடக்கும் வகையிலும் மற்றொன்று 600 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இதில், பீரியட் போர்ஷனைத்தவிர லைவ் போர்ஷனை குற்றாலத்தில் ஷுட்டிங் எடுத்துமுடித்துவிட்டார் தனுஷ். இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பட்ஜெட் மிகவும் பெரியது என்பதால், முதலில் நாகார்ஜுனா கேரக்டரில் சூப்பர் ஸ்டாரும், மாமனாருமான ரஜினிகாந்த்தைத்தான் தனுஷ் நடிக்க விரும்பிக்கேட்டிருக்கிறார். ஆனால், ரஜினி அப்போது வேறு சில கமிட்மென்ட்களில் இருந்ததால், நாகார்ஜுனாவிடம் கதையைச் சொல்லியிருக்கிறார் தனுஷ். பீரியட் போர்ஷன் நாகார்ஜுனாவுக்கு மிகவும் பிடித்துப்போக, உடனே ஓகே சொல்லி டேட்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார்.

நாகார்ஜுனா
நாகார்ஜுனா
" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள்
ஆசை!"

லைவ் போர்ஷன் ஷூட் நடந்துகொண்டிருந்தபோது வரலாற்று போர்ஷனை ஷூட் செய்வதற்காக கலை இயக்குநர் முத்துராஜைவைத்து செட் எல்லாம் போட்டு, தயாராக இருந்தார் தனுஷ். இந்த நிலையில்தான் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டது தேனான்டாள் பிக்சர்ஸ். இதனால் இந்தப் படம் எடுத்த வரையிலும் அப்படியே நிறுத்தப்பட்டது. 2 மாதம் வரையிலும் தயாரிப்பாளரின் பதிலுக்காகக் காத்திருந்த தனுஷ், அதன்பிறகு மற்ற படங்களில் நடிக்கச்சென்றுவிட்டார். நிதிச் சிக்கலால் கனவுப் படம் அப்படியே கைவிடப்பட்டது.

இந்தப் படத்தின் செலவுகளுக்காக நடிகரும், இயக்குநருமான தனுஷ் 2 கோடி ரூபாய் வரை தன் சொந்தப்பணத்தை எடுத்துக்கொடுத்திருந்தாக முன்னர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் வொண்டர்பார் நிர்வாகி.

கிட்டத்தட்ட படம் கைவிடப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், நாகார்ஜுனா இந்தப் படம் பற்றி ஆந்திர மீடியா ஒன்றில் பேட்டிகொடுக்க, தனுஷ் மீண்டும் தான் இயக்கிய படத்தை ஆரம்பிக்கப்போகிறார் என செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன. இந்தச் செய்திகள் தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.

''இன்னும் 2 வருடத்துக்கு தனுஷின் டேட்ஸ் ஃபுல். 'கர்ணன்', கார்த்திக் நரேன் படம், ராம்குமார் படம், மித்ரன் ஜவஹர் படம், செல்வராகவன் படம், இந்திப்படம் என தனுஷுக்கு பல புராஜெக்ட்டுகள் இருக்கின்றன. அதனால் தனுஷ் இயக்கும் படம் இப்போதைக்கு ஆரம்பிக்காது. தவறான தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன'' என்றார்கள்.

தனுஷ்
தனுஷ்

'பவர் பாண்டி'யில் தன்னுடைய டைரக்‌ஷன் திறமையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். சீனியர் சிட்டிசன்களுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் குறைந்துவந்த சூழலில், தனுஷின் 'பவர் பாண்டி'தான் முதியவர்களுக்கான படங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்தியது. இதன் பிறகுதான் முதியவர்களின் உணர்வுகளை, அவர்களின் காதலை, அவர்களின் உறவுச் சிக்கல்களைச் சொல்லும் படங்கள் உருவாக ஆரம்பித்தன.

'பவர் பாண்டி'யின் வெற்றி தந்த உற்சாகத்தில்தான் தன்னுடைய கனவுப்படத்தை ஆரம்பித்தார் தனுஷ். நிதிச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து, மீண்டும் தனுஷ் இயக்கிய படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு வரவேண்டும் என்பதுதான் சினிமா ஆர்வலர்களின் விருப்பம்.

அடுத்த கட்டுரைக்கு