Published:Updated:

தமிழ் சினிமாவில் பெருகும் விவசாயப் படங்கள், உண்மையில் விவசாயத்தைப் பேசுகிறதா?!

துரை.நாகராஜன்

இது விவசாயம் சார்ந்த திரைப்படம் என்றும், விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் சமீபகாலமாக திரைப்பட விளம்பரங்கள் அதிகம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

விவசாயம்
விவசாயம்

தமிழ் சினிமாவில், ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. சமீபகாலமாக, வரிசையாக பேய் படங்கள் களைகட்டின. அவற்றில் பெரும்பாலான படங்கள், பேய்களை காமெடியாக சித்திரித்தன. எப்போதுமே புதிய முயற்சிகளைக் கொண்டு வெளியான படங்களுக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், தங்களின் கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்ப ஆரம்பித்திருக்கிறார்கள், கோலிவுட் இயக்குநர்கள். விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள் பிரச்னைகளையும் மையமாகக் கொண்டும் படங்கள் தற்போது அதிகமாகத் தயாராகிவருகின்றன. ஆனால், அந்த வரிசையில் தனது படத்தில் விவசாயத்தைப் பற்றிய வசனங்கள் இருந்தாலே போதும்; அது வெற்றிபெறும் என்ற அதீத நம்பிக்கையிலும் சில இயக்குநர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அது, விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெறுமா, விவசாயிகள் மத்தியில் கவனம் பெறுமா என்றால், நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனம்.

"100 ஆண்டுகள் இந்திய சினிமா வரலாற்றில், முழுமையாக விவசாயிகள் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே பேசிய படங்களை எடுத்துக்கொண்டால், அவை இன்னும் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கின்றன."
விவசாயம்
விவசாயம்

விவசாயிகள் மத்தியில் நிலவும் பிரச்னைகள், சமீபகாலமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முன்னர், இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளியில், விவசாயம் பற்றி முழுமையாகப் பேசும் சினிமா வெளியாகும். அவை கோலிவுட் விதிகளான காதல், ஆக்‌ஷனுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றில், சிறிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட விவசாயப் படங்கள் மக்களிடம் அதிகமான வரவேற்பைப் பெறாமலும் போயின. ஆனால், பெரிய நடிகர்களும் கமர்ஷியல் இயக்குநர்களும் விவசாயத்தை கையில் எடுத்தார்கள். அதைப் பார்த்து, வளர்ந்து வரும் ஹீரோக்களும் விவசாய கருத்துகளைப் பேச ஆரம்பித்தனர். விவசாயிகள் பற்றிய சினிமாக்கள் அதிகம் வரவேண்டும். ஆனால், விவசாயிகளின் பிரச்னை பற்றி ஆழமாகப் பேசும் சினிமாக்களாக அவை இருக்க வேண்டும்.

'இந்த இடத்துல கைத்தட்டல் வேணுமா, அங்கே விவசாயத்தைப் பற்றிப் பேசுங்க' என்ற நிலைதான் இன்று இருக்கிறது. விவசாயம் சார்ந்த சினிமா என்றால் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என்றால், ஹீரோ அந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி, ஏதோ ஒரு புறக்கணிப்பால் வெளியேற்றப்பட்டு, மீண்டும் அந்த விளையாட்டில் ஜெயிப்பதாகத்தானே இருக்கும். இதை அப்படியே விவசாயத்துக்கு பொருத்திப்பார்க்கலாம். இப்படி முழுமையாக எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்றால், இல்லைதான். இது விவசாயம் சார்ந்த திரைப்படம் என்றும், விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் சொல்லி, சமீபகாலமாக திரைப்பட விளம்பரங்கள் அதிகமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே விவசாயத்தைப் பற்றி பேசியதில்லை. அங்கு கதாநாயகன் ஒரு விவசாயியாக காட்டப்பட்டிருப்பான். அவ்வளவே!

விவசாயம்
விவசாயம்
"சந்தர்ப்பத்துக்காகவும் விளம்பரத்துக்காகவும் விவசாயம் பற்றிப் பேசுவது மக்களை எரிச்சலடையச் செய்திருக்கிறது."

விதைப்பது முதல் விளைபொருள்களை விற்பனை செய்வது வரை... நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விஷயங்களில் அதிகமான இடர்பாடுகளைச் சந்திக்கிறார், ஒரு விவசாயி. இவற்றை காட்டுவதை விட்டுவிட்டு, ஹீரோ நிலத்தில் இறங்கி டிராக்டர் ஓட்டும் காட்சி, வேட்டியை மடித்துகொண்டு விதைகளை தூவும் காட்சி போன்றவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு விவசாயம் பேசும் சினிமா என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சினிமாவை வெற்றிபெறவைப்பது பி மற்றும் சி சென்டர்கள்தான். அவர்கள், பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்திருக்கிற மக்கள்தான். விவசாயத்தைப் பற்றி முழுமையாகப் பேசினால், அவர்கள் ரசிப்பார்கள். தன் வாழ்வோடு பொறுத்திப் பார்த்துகொள்வார்கள். அப்படி ஏதும் நடக்காவிட்டால், அந்தப் படம் அவர்களுக்கு அந்த உணர்வைத் தராமல்விட்டால் அது விவசாயப் படமே இல்லை. ஒரு சாதாரண கமர்ஷியல் படம் மட்டுமே!

விவசாயிகள் என்றாலே கடன் பிரச்னை என்பதாகத்தான் பல இயக்குநர்கள் நினைக்கிறார்கள். விளைபொருளுக்கு விலை கிடைக்காதது, தண்ணீர்ப் பிரச்னை, அரசு உதவிகள் கிடைக்காதது, இடைத்தரகர்கள், இடுபொருள் விலையேற்றம், ரியல் எஸ்டேட்... எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்னைகளையும் முழுமையாகச் சொல்ல, நிச்சயமாக ஒரு சினிமா போதாது. ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு, அதை ஆழமாகப் பேசும் படங்கள் வரவேண்டும். மக்களிடம் கைத்தட்டல் பெறுவதற்காக மட்டுமே விவசாயக் காட்சிகளையோ விவசாய வசனங்களையோ வைக்கக்கூடாது.

சொட்டு நீர் பாசனம்
சொட்டு நீர் பாசனம்

ஹீரோ கலப்பையைத் தோளில் போட்டுக்கொண்டு வருவது, ஹீரோ இயற்கை விவசாயத்தில் ஆர்வமாக இருப்பது, ஹீரோ விவசாயிகள் குறித்து பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவது, விவசாயிகள் கடன் பிரச்னை குறித்த வசனங்கள் இடம்பெறுவது, விவசாயக் குடும்பமாக ஹீரோவின் குடும்பத்தைக் காட்டுவது... எனப் பல படங்கள் விவசாயத்தைக் கைத்தட்டலுக்காக மட்டுமே தொட்டுக்கொண்டு வெளிவந்தன எனலாம்.

இந்தப் படங்கள் முழுமையாக விவசாயத்தைப் பற்றி பேசியதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கமர்ஷியல் குடும்பப் படங்களில் விவசாயி ஒரு பாத்திரம் மட்டுமே. இப்படங்கள் தவிர்த்து, விவசாயிகளின் பிரச்னைகளைச் சொல்லும் நிதர்சனமான படங்களும் வரவேண்டும். மிகப்பெரிய அலைகளை ஏற்படுத்தும் கருவியான சினிமா விவசாயப் பிரச்னைகளுக்கும் பயன்படவேண்டும்.

Vikatan

விவசாயத்தைத் தவிர்க்காமல் இனி சினிமா எடுக்க முடியாது என்ற நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால், முடிந்தவரை விவசாயத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லலாம். விவசாயத்தைச் சார்ந்து எடுக்கப்படும் சினிமாக்கள் பெயரளவில் விவசாயம் பேசாமல், உணர்வுபூர்வமாக இருக்கட்டும். இனி வரும் காலங்களில் இயக்குநர்கள் அதைப் பின்பற்றினால் நல்லது.