
போலிக் கணக்கர்களின் புது முயற்சியாக செலிபிரிட்டிகளின் குடும்பத்தினர் பெயர்களில் போலிக் கணக்கை ஆரம்பித்துவருகின்றனர்.
ட்விட்டர்களில் போலிக் கணக்குகளுக்குப் பஞ்சமே இருக்காது. வெவ்வேறு பெயர்களிலும், காமெடியான பெயர்களிலும் பலர் தங்களது உண்மையான அடையாளங்களை வெளிக்காட்டாமல் ட்விட்டரில் வாழ்ந்துவருகிறார்கள். இந்தப் போலிக் கணக்குகளில் பல செலிபிரிட்டிகளும் மாட்டிக்கொள்வது வழக்கம். அதிலும், சில செலிபிரிட்டிகளின் ஒரிஜினல் ஐடியில் இருக்கும் ஃபாலோயர்களைவிட, போலி ஐடிக்கு அதிக ஃபாலோயர்கள் இருக்கும் அவலமும் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில், இந்தப் போலிக் கணக்கர்களின் புது முயற்சியாக செலிபிரிட்டிகளின் குடும்பத்தினர் பெயர்களில் போலிக் கணக்கை ஆரம்பித்து வருகின்றனர். அதில், தற்போது சிக்கியிருப்பது நடிகர் விஜய்யின் குடும்பம்.
விஜய்யின் மனைவி சங்கீதாவின் பெயரிலும் அவர்கள் மகன் மற்றும் மகளான ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோரின் பெயர்களிலும் தற்போது போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் அவர்களது பர்சனல் புகைப்படங்களைப் பதிவிட்டும், சில நடிகர்களின் ஐடியை மென்ஷன் செய்து அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்வதையும் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இந்தப் போலிக் கணக்குகளில் நாளுக்கு நாள் ஃபாலோயர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
இந்தப் போலிக் கணக்குகள் குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் கேட்டேன். ''நடிகர் விஜய் அவர்களின் பெயரில் இருப்பது மட்டும்தான் ஒரிஜினல் ஐடி. விஜய்யைத் தவிர அவர் குடும்பத்தினர் யாரும் ட்விட்டரில் இல்லை. அவர்களின் பெயர்களில் இருக்கும் அனைத்து ஐடிக்களும் போலிகள்தான். இதுகுறித்து ட்விட்டரில் புகார் செய்தால், ‘இது அத்துமீறல் இல்லை’ எனப் பதில் சொல்கிறார்கள். மீண்டும் புகார் செய்திருக்கிறோம். விரைவில் அந்தப் போலிக்கணக்குகளை முடக்குவோம்" என்றார்கள்.