Published:Updated:

``ஏப்ரல்,மே-னா கலெக்‌ஷன் 25 பர்சென்ட் எக்ஸ்ட்ரா... ஆனா இப்போ?!'' - தியேட்டர்களின் நிலைமைதான் என்ன?

திரையரங்குகள்
திரையரங்குகள்

''மற்ற மாதங்களில் வெளியாகுற படங்களை ஆறு ஸ்கிரீன்ல 1000 பேர் பார்க்குறாங்கன்னா, அதே படம் ஏப்ரல், மே மாதத்துல வெளியாகும்போது 1500 பேர் பார்ப்பாங்க. மக்கள் வரத்து 50 சதவிகிதம் கூடிடும்.''

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு 50 நாள்கள் கடந்ததையடுத்து, சினிமா தியேட்டர்களின் நிலை என்ன, தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுக்கான பாதிப்பு என்ன என்பது குறித்து விசாரித்தோம்.

Nikilesh Suriya
Nikilesh Suriya

ரோகிணி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யாவிடம் பேசினேன். "இந்த வருஷத்துல பிப்ரவரி மாசமே தமிழ் சினிமாவுக்கான வழக்கமான லாபத்துல 15 சதவிகிதம் குறை இருந்தது. ஒரு ஆண்டுக்கான வருமானத்துல 25 சதவிகிதம் கோடை விடுமுறையில்தான், அதாவது ஏப்ரல்- மே மாதங்களில்தான் கிடைக்கும். ஸ்கூல், காலேஜ் லீவ் விடுவதால் நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்க. இந்த வருஷம் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கிற வழக்கமான வருமானத்துல 40 சதவிகிதம் கிடைச்சாலே பெருசு. எவ்வளவு செலவு பண்ணி படமெடுத்தாலும் , தியேட்டர்ல இருந்துதான் அந்தப் படம் சம்பாதிக்கும். அப்படி இந்த வருஷம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபமே இல்லை; முழுக்க நஷ்டம்தான். மல்ட்டிபிளக்ஸ், சிங்கிள் தியேட்டர் வெச்சிருக்கிறவங்க எல்லோருக்கும் பெரிய பாதிப்பு. உலகத்துல இருக்கிற எல்லா தொழிலும் பாதிச்சிருக்கிறதுனால நாம இதைப் பெரிய புகாரா சொல்லமுடியாது.

மற்ற மாதங்கள்ல வெளியாகுற படத்துக்கு ஆறு ஸ்கிரீன்ல 1000 பேர் பாக்குறாங்கன்னா, அதே படம் ஏப்ரல், மே மாதத்துல வெளியாகும்போது 1500 பேர் பார்ப்பாங்க. மக்கள் வரத்து 50 சதவிகிதம் கூடும். தவிர, பெரிய ஹீரோக்களுடைய படங்கள் வெளியானால் இன்னும் நிறைய பேர் வருவாங்க. அது போனஸ். பெஃப்சியில இருக்கிறவங்களுக்கு எல்லோரும் நிவாரண நிதி கொடுத்து அங்க இருக்கிறவங்களைப் பார்த்துக்குறாங்க. ஆனா, தியேட்டர்ல வேலை செய்றவங்களோட நிலைமை? தமிழ்நாட்டுல 1300 தியேட்டர்கள் இருக்கு. தியேட்டருக்கு 20 பேர்னு வெச்சா கூட 25,000 பேர் இருக்காங்க. அவங்க வருமானத்தை நம்பி 25,000 குடும்பங்கள் இருக்கு. எங்க தியேட்டர்ல வேலை செய்றவங்க பல பேர் கிராமத்தைச் சேர்ந்தவங்கதான். அவங்க எல்லோருக்கும் ரெண்டு மாதம் சம்பளம் கொடுத்து அவங்களை ஊருக்கு அனுப்பிட்டோம். எங்களுக்கு பணப் புழக்கம் இருந்தால்தானே தியேட்டர்ல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியும். நாங்களும் இப்போ அரசாங்கத்தை நம்பித்தான் இருக்கோம்.

திரையரங்குகள்
திரையரங்குகள்

ரோகிணி தியேட்டர்ல ஏற்கெனவே ஆறு ஸ்கிரீன் இருக்கு. இந்த சம்மர்ல புது ஸ்கிரீன் ரெடி பண்ணி அதுல 'மாஸ்டர்', 'சூரரைப் போற்று' படங்களை வெளியிடலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். அந்த ஸ்கிரீனுக்கான சீட்ஸ், ஏசி, சவுண்ட் சிஸ்டம்னு எல்லா எக்யூப்மென்ட்ஸும் மும்பை, பெங்களூருனு வெவ்வேற இடங்கள்ல இருந்து வர்றதா இருந்தது. எல்லா போக்குவரத்தும் நிறுத்திட்டதுனால அதெல்லாம் அப்படியே இருக்கு. சம்மர்ல அந்த ஸ்கிரீனைத் திறந்திருந்தா கொண்டாட்டமா இருந்திருக்கும். என்ன பண்றது கொடுத்து வைக்கலயே? தியேட்டர் ரொம்ப நாளா மூடியிருக்கிறதுனால வொயர்கள், ஸ்பீக்கர்கள், சீட்டுகள் எல்லாம் சரியா இருக்கா, எலி கடிச்சு வெச்சிருக்கானு நாங்க மூணு நாளுக்கு ஒரு முறை போய் எல்லாத்தையும் சரி பார்த்துக்குறோம். மத்த விஷயங்கள் எல்லாம் எப்போ இயல்பு நிலைக்குத் திரும்புதோ அதுல இருந்து நாலு மாசம் கழிச்சுதான் தியேட்டர்கள் இயல்புநிலைக்குத் திரும்பும். இருந்தாலும் மக்கள் மனசுல எந்தளவுக்கு அந்த பயம், தாக்கம் இருக்கும்னு சொல்லமுடியாது" என்றார்.

தமிழ்நாடு திரைப்பட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து 48 நாள் வேலை நிறுத்தம் பண்ணியிருந்தாங்க. ஆனா, இது இயற்கையா நடந்த விஷயம். எல்லாத்தையும் எதிர்கொள்ள வேண்டியதுதான். வேற வழியில்லை. முதல்ல மனிதாபிமான அடிப்படையில்தான் யோசிக்கணும். அப்புறம்தான் வியாபார ரீதியில யோசிக்கணும். எதுக்குமே ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுனு ஒண்ணு இருக்கும். மே வரைக்கும் இதோட தாக்கம் இருக்கும். அப்புறம் படிப்படியா குறைஞ்சுடும்னு எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்கோம். அப்படி எல்லாம் இயல்பு நிலைக்கு வரும்போது கடைசியா திறக்கப்போறது கல்யாண மண்டபமும் சினிமா தியேட்டரும்தான். தியேட்டர் அனுபவம் எப்பவுமே தனிதான். என்னதான் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம்னு படங்கள் பார்த்தாலும் இந்தப் பிரச்னை எல்லாம் முடிஞ்ச பிறகு, மக்கள் தியேட்டருக்குத்தான் வருவாங்க. கொரோனா சூழலால சினிமா துறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது தியேட்டர் உரிமையாளர்கள்தான். எந்த விநியோகஸ்தரும் எந்தப் படத்தையும் வாங்கி வெக்கலை. தயாரிப்பாளர்கள் வட்டி கொடுக்கமாட்டோம், நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கணும்னு சொல்றாங்க. இந்த விஷயத்துல அவங்களுக்கு நாங்க ஆதரவு கொடுப்போம்.

திருப்பூர் சுப்ரமணியன்
திருப்பூர் சுப்ரமணியன்

தியேட்டர்கள் மூடியிருக்கு. ஆனா, மினிமம் கரன்ட் பில் நாங்க கட்டணும், தியேட்டர்ல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். படங்கள் சரியா போகாததுனால ஏற்கெனவே எங்களுக்கு நஷ்டங்கள் இருக்கு. எங்களுக்கான வருமான வரியை மத்திய அரசு குறைக்கலை. வங்கிகளில் வட்டியைத் தள்ளி வாங்கிக்குறேன்னு சொல்றாங்களே தவிர வட்டி வேணாம்னு சொல்லலை. அரசாங்கம் பார்த்து ஏதவாது சலுகைகள் கொடுத்தா நல்லாயிருக்கும். தமிழ்நாட்டுல இருக்கிற 1000 தியேட்டர்கள்ல 600 சிங்கிள் தியேட்டர்கள் இருக்கு. அவங்க நிலைமை ரொம்ப மோசம். அனைத்திந்திய மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அசோசியேஷன்ல இருந்து இந்த லாக் டௌன் முடியறவரைக்கும் நாங்க வாடகை தரமாட்டோம்னு அறிக்கையே கொடுத்துட்டாங்க. அரசாங்கம் எங்களை கூப்பிட்டு பேசி, அவங்களால என்ன பண்ணமுடியுமோ அந்தச் சலுகைகளைப் பண்ணிக்கொடுக்கணும்னு கேட்டுக்குறேன். எல்லா தியேட்டர் உரிமையாளர்கள்கிட்டேயும் அவங்கவங்க தியேட்டர்களை வாரத்துக்கு ரெண்டு முறை போய் எல்லாம் சரியா இருக்கா, சரியா வேலை செய்யுதானு சரிபார்த்துக்கவும் சொல்லியிருக்கோம்" என்றார்.

அனைத்திந்திய மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அசோசியேஷன் (Multiplex Association of India) பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், ''இந்தியா முழுக்க 3500 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்ளன. மொத்தம் ரெண்டு லட்சம் பேர் இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பணியாற்றுகின்றனர். கொரோனாவால் இவர்களின் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்படுள்ளது. கொரோனா பாதிப்பு முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது, மூன்று வருடத்துக்கு வட்டியில்லா கடன் (காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமையுடன்), ஒரு வருடத்திற்கு ஜி.எஸ்.டி, உள்ளாட்சி அமைப்பு வரி, கேளிக்கை வரி என எல்லா வரிகளுக்கும் விலக்கு, ஒரு வருட காலத்திற்கு குறைந்தபட்ச தேவை கட்டணங்கள் மற்றும் மின்சார வரி மீதான தள்ளுபடி போன்ற விஷயங்களை அரசாங்கம் தங்களுக்கு செய்து கொடுக்கவேண்டும்'' எனப் பல கோரிகைக்கைகளை முன்வைத்துள்ளன.

கொரோனா முடிந்தபிறகும் தியேட்டர்களில் பல மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. சீட்டுகளுக்கான இடைவெளி அதிகம் இருக்கவேண்டும், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும் எனப்பல விஷயங்களை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டியிருக்கும்.

தியேட்டர்கள் இயல்பு நிலைக்குத்திரும்பினால்தான் சினிமாவின் எதிர்காலம் சிறக்கும்!

அடுத்த கட்டுரைக்கு