Published:Updated:

சூரரைப் போற்று: ``தியேட்டர் ஓனர்களுக்கு சாதா வட்டி; ஆனால் எங்களுக்கு?''

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

`சூரரைப் போற்று' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள்,`இனி நடிகர் சூர்யா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வது குறித்து நாங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும்’ என்று கொதிக்கிறார்கள்.

`கடையை எப்ப சார் திறப்பீங்க...’ என்று வடிவேலு பாணியில் தியேட்டர் திறக்கப்படுவது குறித்து கேள்வி மேல் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்... `ஓ.டி.டி’ எனப்படும் தளம் வழியே தங்கள் படங்களை வெளியிடத் தயாராகிவிட்டனர்.

கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. எனவே, பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிட்டு, வருமானம் பார்க்க முடியாத சூழல் நிலவிவருகிறது. கடன் வாங்கி சினிமா தயாரிப்பில் ஈடுபட்டவர்கள், `போட்ட காசை எடுக்க முடியாமலும், வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியாமலும் திண்டாடிவருவதாகச் சொல்கின்றன திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள்.

சூர்யா
சூர்யா

இந்தநிலையில், `ஓ.டி.டி’ எனப்படும் வளர்ந்துவரும் இணையதள தொழில்நுட்பம் வழியே தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்த சில தயாரிப்பாளர்கள்.

கொரோனா ஊரடங்கின் ஆரம்பகட்டத்திலேயே `பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஓ.டி.டி-யில் ரிலீஸானபோது, `தியேட்டர்களை நிரந்தரமாக மூடிவிடுவதற்கே இது வழிவகுக்கும்' என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது `திரையரங்க உரிமையாளர் சங்கம்.’

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் நடிப்பு - தயாரிப்பில் உருவாகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த `சூரரைப் போற்று' திரைப்படமும், வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, தியேட்டர் அதிபர்களை உச்சகட்ட கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ``கடந்த ஐந்து மாதங்களாக மூடிக்கிடக்கும் தியேட்டர்களைத் திறப்பதற்கான உத்தரவை அரசு எந்த நேரத்திலும் வழங்கலாம். அப்போது மக்களை தியேட்டர் நோக்கி வரவழைப்பதற்கு ஸ்டார் வேல்யூ உள்ள திரைப்படங்கள் அவசியமாகின்றன.

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்

ஆனால், 'போட்ட பணத்தை எடுக்க முடியாமல் வட்டிக்கு கட்டி சிரமப்படுகிறோம்' என்று சொல்லி, தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓ.டி.டி-யில் வெளியிடுகிறார்கள். 50 கோடி ரூபாய் செலவில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் கட்டிவைத்தும் வருமானம் இல்லாததால், வங்கிக் கடனைக் கட்டவே வழியின்றி நாங்களும்தான் சிரமப்படுகிறோம்.

கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக திரைப்பட ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. `தியேட்டர்களைத் திறக்கலாம்' என்ற அரசின் உத்தரவு கிடைக்கும்போது, மக்களிடையே எதிர்பார்ப்பு இருக்கும் திரைப்படங்களைத் திரையிட்டுத்தான் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க முடியும். சிறிய பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்களின் படங்களைத் திரையிட்டால், மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்காது.

ஆனால், ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இது போன்ற பெரிய படங்களைத் தயாரிப்பாளர்கள் அவசரப்பட்டு இப்படி இணையதளத்தில் வெளியிட்டுவிட்டால், தியேட்டர்களைத் திறந்த பிறகு நாங்கள் எந்தப் படத்தைத் திரையிடுவது... முதலில் தியேட்டர் ரிலீஸ் செய்துவிட்டு, பின்னர் ஓ.டி.டி-யில் படங்களைத் திரையிடுவதில் தவறு இல்லை.

இன்றைக்கு முன்னணி நடிகர்களாக 50 கோடி, 100 கோடி ரூபாய் என்று சம்பளம் வாங்கும் நடிகர்கள் எல்லோருமே இந்த தியேட்டர்களின் வழியேதானே பெயரும் புகழும் பெற்று வளர்ந்தார்கள். ஆனால், இப்போது தங்கள் சுயநலத்துக்காக ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது என்ன நியாயம்?

திரையரங்கம்
திரையரங்கம்
Representational Image

`சினிமா எங்களுக்குக் கடவுள் மாதிரி...' என்றுதான் எல்லா நடிகர்களுமே சொல்கிறார்கள். அப்படியென்றால், அந்தக் கடவுள் இருக்கும் தியேட்டர்களைக் கோயிலாக அல்லவா மதிக்க வேண்டும்... அதைவிடுத்து, சோதனையான இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு சப்போர்ட் செய்யாமல் ஓடிப்போவது நியாயம்தானா?

'பாப்கார்ன்’, `பார்க்கிங்' என்று தியேட்டர்கள் கொள்ளையடிப்பதாக எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். பாப்கார்ன் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எங்களைக் குறை சொல்பவர்களேகூட, `தரம் இருக்கிறது' என்ற காரணத்தைச் சொல்லி, கட்டணம் அதிகம் வசூலிக்கும் தியேட்டர்களுக்குச் சென்றுதான் படமும் பார்க்கிறார்கள்.

``நஷ்டமானாலும் பரவாயில்லை!'' - ஓடிடி-க்கு ஏன் வந்தது சூர்யாவின் `சூரரைப் போற்று'?

அதுமட்டுமல்ல... இந்தியாவிலேயே தியேட்டர் டிக்கெட் விலை, தமிழ்நாட்டில்தான் குறைவு. அடுத்து, அதிக கட்டணம் என்று எங்களைக் குற்றம் சொல்லும் ஹீரோக்கள், தாங்கள் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை சம்பளமாகப் பெறுவது மட்டும் நியாயமா?

80-களில் இருந்ததுபோல், `ஒரு படத் தயாரிப்பில் 20 சதவிகிதத் தொகையை மட்டும் சம்பளமாகப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று நியாயமாக நடந்துகொள்கிறார்களா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 200 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்றால், அதில் நடிக்கும் முன்னணி ஹீரோ, டைரக்டர், டெக்னீஷியன்களின் சம்பளமே 150-லிருந்து 170 கோடி ரூபாய் ஆகிவிடுகிறது. மீதமுள்ள 30 கோடியில் படம் எடுக்கிறார்கள். அப்புறம் எப்படி தமிழ் சினிமா வாழும்?

தமிழ் திரைப்படக் கலைஞர்கள்
தமிழ் திரைப்படக் கலைஞர்கள்

`எங்கள் படத்தை எந்தத் தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்ற சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது' என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவர்கள் சொல்லும் அதே சுதந்திரம், பணம் போட்டு தியேட்டர்களைக் கட்டிவைத்திருக்கும் எங்களுக்கும் இருக்கிறது... எனவே, யாருடைய படத்தைத் திரையிடுவது என்று நாங்களும் முடிவெடுத்துக்கொள்கிறோம்!'' என்கிறார் சூசகமாக.

நடிகர் சூர்யாவின் முடிவுக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவரான எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசினோம்.

ராணிப்பேட்டை: `துரோகம் செய்தான்; கொன்று புதைத்தேன்!’ - அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

``சினிமா தயாரிப்பு, தியேட்டர்கள் என்பது ஒரு கூட்டுத்தொழில். ஒரு சினிமாவுக்கு 70 சதவிகித வருமானத்தை தியேட்டர்கள்தான் நிரந்தரமாகக் கொடுத்துவருகின்றன. எனவே, தியேட்டர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அதேநேரம் சோதனையான இந்தக் காலகட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, விஞ்ஞான வளர்ச்சி வழங்கியிருக்கும் ஓ.டி.டி வசதியைப் பயன்படுத்தி, எங்கள் படங்களைத் திரையிட விரும்புகிறோம். இதில் என்ன தவறு?

ஃபிலிம் புரொஜெக்டர் தியேட்டர்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு டிஜிட்டலாக அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லையா? இந்த மாற்றத்தையும்கூட தயாரிப்பாளர்களின் உதவியோடுதானே செய்துகொண்டார்கள்... ஆக, விஞ்ஞான யுகத்தில், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.

எஸ்.ஆர்.பிரபு
எஸ்.ஆர்.பிரபு

`தியேட்டர்களிலிருந்து வருமானம் வராமல், வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறோம்’ என்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். அவர்கள் கட்டும் வட்டி, வங்கி வட்டி... ஆனால், திரைப்படத் தயாரிப்பாளர்களான நாங்கள் கட்டிக்கொண்டிருப்பதோ மீட்டர் வட்டி... இரண்டுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இணையம்வழியே சினிமா டிக்கெட் புக் செய்யும்போது, அதற்கான கட்டணமாக 100 ரூபாய்க்கு 2 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும். ஆனால், தியேட்டர்களில் 30 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதேபோல், தியேட்டர் மெயின்டனன்ஸ் தொகையையும் அரசிடம் சொல்லி பல மடங்கு உயர்த்திக்கொண்டார்கள். இவையெல்லாம் சுயநலம் இல்லையா?

`ஆம்புலன்ஸ் டிரைவர் பணி மனநிறைவு தருகிறது; சிக்கலோ, பயமோ இல்லை!’-அசத்தும் வீரலட்சுமி

ஒரு படத்தை வெற்றி பெறவைப்பது ரசிகர்கள்தான். எனவே, அவர்கள்தான் எல்லோருக்கும் கடவுள். மற்றபடி, `ஓ.டி.டி-யில் வெளியாகும் ஹீரோ - தயாரிப்பாளர்களின் படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய மாட்டோம்’ என்று அவர்கள் முடிவெடுத்தால், அது அவர்களது சுதந்திரம்'' என்கிறார் கூலாக.

இதற்கிடையே, ஓ.டி.டி தளத்தில் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ள நடிகர் சூர்யாவுக்கு எதிராக, திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலரே மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

பாரதிராஜா
பாரதிராஜா

இதைத் தொடர்ந்து, இயக்குநரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான பாரதிராஜா, சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், `சூரரைப் போற்று திரைப்படம் தமிழனைப் போற்றும். எனவே, சூர்யாவை மட்டுமல்ல... எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு