Published:Updated:

ரஜினி, அஜித், விஜய் - 60%... சூர்யா, தனுஷ், சிம்பு -55% இது புது கணக்கு

ஒவ்வொரு படத்துக்கும், தயாரிப்பாளருக்கும் குறிப்பாக கதாநாயகர்களுக்கும் ஏற்றதுபோல் மாறும் ஒரு விஷயம் தான் இது.

Kollywood heroes
Kollywood heroes

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைவரின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் படம் சினிமாத் திரையரங்குகளுக்கு வருவதற்குக் காரணமாய் இருப்பவர்கள் விநியோகஸ்தர்கள். அவர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தைப் பெற்று தியேட்டர் திரையரங்க உரிமையாளர்களிடம் விகிதாச்சாரங்கள் பேசித் திரையிடுவார்கள். இந்த விகிதாச்சாரங்கள் ஒவ்வொரு படத்துக்கும், தயாரிப்பாளருக்கும் குறிப்பாக கதாநாயகர்களுக்கும் ஏற்றதுபோல் மாறும்.

ரஜினி | அஜித் | விஜய்
ரஜினி | அஜித் | விஜய்

இந்த விகிதாச்சாரம் ஒரு டிக்கெட் விலையில் கணக்கிடப்படும். முதல் வாரம் அதிகமாக இருக்கும் தயாரிப்பாளரின் பங்கு இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் வரும் ரசிகர்களின் வரத்து குறையும் என்பதால் குறைக்கப்படும். அப்படி திரையரங்க உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் படங்களுக்கு எந்தெந்த நடிகர்களுக்கு எந்தெந்த அளவில் பங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒரு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்.

அந்த அட்டவணைப்படி ரிலீஸான முதல் வாரத்தில் 'A' சென்டர் என வரையறுக்கப்பட்டுள்ள சிட்டி மற்றும் டவுன் ஏரியாக்களிலுள்ள தியேட்டர்களில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு ஒரு டிக்கெட்டில் 60 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்கும் மீதமுள்ள 40 சதவிகிதம் திரையரங்குக்கும், மற்ற இடங்களில் 65 சதவிகிதம் விநியோகஸ்தருக்கும் 35 சதவிகிதம் திரையரங்குகளுக்குள் பிரித்துக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்

மேற்குறிப்பிட்ட நடிகர்களுக்கு இரண்டாவது வாரம் விநியோகஸ்தர்களுக்கு 'A' சென்டர்களில் 55 சதவிகிதமும் மற்ற இடங்களில் 60 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்கு தரப்படும்.

அதேபோல் நடிகர்கள் சூர்யா, 'ஜெயம்' ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு 'A' சென்டரிலுள்ள திரையரங்களுக்கு முதல் வாரத்தில் ஒரு டிக்கேட்டில் 55 சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கும் மீதமுள்ள 45 சதவிகிதம் திரையரங்குக்கும் பிரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வாரம், 'A' சென்டரில் 50 சதவிகிதமும் மற்ற இடங்களிலுள்ள திரையரங்குகளில் 55 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்குப் பிரித்துத் தரப்படும்.

ஹீரோஸ்
ஹீரோஸ்

எஞ்சியுள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் படத்துக்கு, முதல் வாரம் எல்லாத் திரையரங்குகளிலும் ஒரு டிக்கெட்டில் 50 சதவிகிதமும் இரண்டாவது வாரம் 45 சதவீதமும் பிரித்து வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில் " இந்தியா முழுவதும் ஆரம்பத்தில் முதல் வாரம் படங்களுக்கு 60 சதவிகிதம் தான் விநியோகஸ்தர்கள் பங்கு கணக்கிடப்பட்டு வந்தது.

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்

அது படி படியாக வளர்ந்து இன்று விநியோகஸ்தர்கள் 75 சதவிகிதம் வரை பங்கு வாங்குகிறார்கள். இதற்குக் காரணமாகக் கூறப்படுவது நடிகர்கள் சம்பளம்தான். திரையரங்கு பராமரிப்பு மற்றும் ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட படி இந்த வணிகத்தை நடத்தும்படி எங்கள் திரையரங்க உரிமையாளர் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அண்டை மாநிலமான கேரளாவில் உச்சபச்ச நடிகர்களின் படங்களுக்கு 60 சதவிகிதம்தான் முதல் வாரப் பங்காக தரப்படும். நடிகர்கள் வாங்கும் அதிக சம்பளத்தை திரையரங்கு உரிமையாளர்கள் தலையில் கட்டுவது நியாயமில்லை. ஜூன் மாதம் திருச்சியில் நடக்கும் எங்கள் சங்கக் கூட்டத்தில் இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் இதுபற்றி கூறவுள்ளோம்." என்றார்.