கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வெள்ளித்திரையா, இல்லத்திரையா? ஒரு யுத்தம்

ஒரு யுத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு யுத்தம்

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி தாணு.

‘கொரோனா’ சினிமா உலகுக்குப் புதிய பாதையை அமைத்துக்கொடுத்திருப்பதாக ஒருபக்கம் உற்சாகக் குரல்களும் இன்னொருபக்கம் தியேட்டர்கள் அழிந்துவிடும் என்கிற புலம்பல்களும் ஒருசேரக் கேட்கின்றன.

கொரோனாவால் முடங்கிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்குள் திடீர் பரபரப்பைக் கிளப்பிவிட்டது ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, ஜோதிகா நடித்திருக்கும் இந்தப்படம் மார்ச் கடைசி வார ரிலீஸுக்குத் திட்டமிட்டப் பட்டிருந்தது. ஆனால், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்திலேயே தியேட்டர்கள் மூடப்பட்டு, லாக் டெளன் அறிவிக்கப்பட்டதால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. ரிலீஸுக்கு முன்பாகவே இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிவைத்திருந்தது அமேசான் ப்ரைம். படம் தியேட்டர்களில் வெளியாகி 28 நாள்களுக்குப்பிறகு ஓடிடியில் ஒளிபரப்பலாம் என்பதுதான் தயாரிப்பாளர்களுக்கும் - ஓடிடி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம். ஆனால், தியேட்டர் ரிலீஸ் செப்டம்பர் வரை தள்ளிப்போகலாம் என்கிற சூழலில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாகவே அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டது 2டி நிறுவனம். இந்தச் செய்திதான் தூங்கிக்கொண்டிருந்த சினிமா உலகைத் தட்டி எழுப்பிவிட்டது.

இந்தப் போக்கு தியேட்டர்களை அழிக்கும் செயல் எனக் குரல் எழுந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் 40% தியேட்டர்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல நூறு கோடிகள் தியேட்டர் அதிபர்களால் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சிறு கிராமங்களிலிருக்கும் அரங்குகள்கூட புதிய தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில் தியேட்டர்களுக்கு அச்சம் தரும் செயல்களை அவர்கள் எதிர்ப்பது இயல்பானதுதான்.

வெள்ளித்திரையா, இல்லத்திரையா?
வெள்ளித்திரையா, இல்லத்திரையா?

“தயாரிப்பாளர்கள் சேட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி, டப்பிங் ரைட்ஸ் எனப் பல வழிகளில் ஒரு படத்தில் போட்ட முதலீட்டை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தியேட்டர்காரர்களுக்கு அப்படியில்லை. தயாரிப்பாளர்கள் கொடுக்கும் படங்களை நம்பித்தான் பல கோடி ரூபாய் முதலீட்டில் தியேட்டர்களைக் கட்டி, பராமரித்துவருகிறோம். திடீரென ஓடிடி-யில் படங்கள் ரிலீஸானால் தியேட்டர்களுக்கு யாரும் வரமாட்டார்கள். தியேட்டர் தொழிலை நம்பி 25,000 குடும்பங்கள் இருக்கின்றன. இதை மனதில்வைத்து முடிவுகளை எடுக்கவேண்டும்’’ என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்.

மாஸ்டர்
மாஸ்டர்

ஆனால் ‘`இன்றைய சூழலில் ஓடிடி ரிலீஸ் சரி என்பதுதான் என்னுடைய கருத்து. தொலைக்காட்சி உட்பட பல மாற்றங்கள் வரும்போதும் அது சினிமாவை அழித்துவிடுமோ என்ற பயம் வருவது இயற்கைதான். நான் உட்பட பல பெரிய தயாரிப்பாளர்கள் தியேட்டரில்தான் படங்களை முதலில் ரிலீஸ் செய்வோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸுக்குத் தயாராகியிருந்த படம். மார்ச் கடைசி வாரத்தில் ரிலீஸ், மே முதல் ஓடிடி ரிலீஸ் என்பதெல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யபட்ட விஷயம். இச்சூழலில்தான் கொரோனாவால் பிரச்னை. அதனால் இந்த நேரத்தில் எல்லாம் முடிந்து ரிலீஸாகாமல் முடங்கிப்போயிருக்கும் சிறிய படங்களுக்கு ஓடிடி ரிலீஸ் என்பதுதான் சரியான வழி. அதனால் அதை யாரும் தடுக்கவேண்டாம் என்பது என் வேண்டுகோள்’’ என்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி தாணு.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘இயக்குநர்களாக எங்களுடைய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அப்படியே அரசு லாக்டெளனைத் தளர்த்தினாலும் தியேட்டர்கள் திறக்க செப்டம்பர், அக்டோபர் ஆகலாம். 2021கூட ஆகலாம் என்கிறார்கள். 2019-ல் எடுக்கப்பட்ட படம் 2021-ல் ரிலீஸ் ஆனால் அந்தப் படம் அப்டேட்டடாக இருக்குமா? படத்தில் இருக்கும் நிறைய விஷயங்கள் அப்போதைய டிரெண்டுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும். இதனால் படங்கள் சரியாக ஓடாது. இதனால் இயக்குநர்களும் தங்களின் அடுத்த பட வாய்ப்புகளை இழப்பார்கள். அதனால் எடுத்து முடித்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களை ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதுதான் சரியாக இருக்கும்’ என்றார்கள்.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

ஓடிடி நிறுவனங்களைப் பொறுத்தவரை சிறிய படங்களை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பெரிய படங்கள்தான் அவர்களின் டார்கெட். அப்படி பெரிய படங்களுக்கான ஒப்பந்தம் போடும்போது சில சிறிய படங்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் ஓராண்டில் தமிழில் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. அத்தனை படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்க வாய்ப்பில்லை.

தனுஷ் நடிப்பில் ஏப்ரல் - மே மாதத்தில் ரிலீஸாகியிருக்க வேண்டிய ‘ஜகமே தந்திரம்’ படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டித் தயாரிப்பாளரை அணுகியிருக்கின்றன. ஆனால், தனுஷ் தியேட்டர் ரிலீஸ்தான் எனச் சொல்ல அந்தப் பேச்சுவார்த்தை அப்படியே நின்றிருக்கிறது. ‘மாஸ்டர்’ படத்துக்கும் பல கோடிகள் தருவதாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. ஆனால், விஜய் அந்தப் பேச்சுகளில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். பெரிய ஹீரோக்கள் திரையரங்குகளுக்கே முன்னுரிமை தருவார்கள்.

பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்

பொதுமக்களைப் பொறுத்தவரை தியேட்டர்களில் படம் பார்ப்பது பெரும் செலவுவைக்கும் பொழுதுபோக்காகிவிட்டதால் ஓடிடிக்கு ஆதரவு தருகிறார்கள். மேலும், லாக்டௌன் முடிந்தபிறகும் கொரோனா அச்சம் முழுமையாக நீங்கப்போவதில்லை. எனவே ஷாப்பிங் மாலில் இருக்கும் தியேட்டரோ, தனியாக இருக்கும் தியேட்டரோ, கூட்டத்துக்குள் வந்து படம் பார்க்க மக்களுக்கு அச்சமும் தயக்கமும் இருக்கும். எனவே ஓடிடிக்கான ஆதரவு அதிகரிக்கவே செய்யும். ஆனால் இப்போது சந்தாத்தொகையை மலிவாக வைத்திருக்கும் ஓடிடி நிறுவனங்கள், சந்தாதாரர்கள் அதிகரிக்கும்போது தொகையை உயர்த்தவே செய்யும். மேலும், பிரபல நடிகர்களின் ரசிகர்களுக்குத் திரையரங்கில் சினிமா பார்ப்பதுதான் கொண்டாட்டமான அனுபவம்.

கலைப்புலி தாணு
கலைப்புலி தாணு

இன்னொரு புறம் ஓடிடி பார்வையாளர்கள் அதிகரித்தால் தியேட்டர் விலை தொடங்கி நடிகர்களின் சம்பளம் வரை பல மாற்றங்கள் வரும்.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமா பல மாற்றங்களையும் பிரச்னைகளையும் கடந்தே வந்திருக்கிறது. இதையும் கடக்கும்.