Published:Updated:

``ஐபோன் திருடுபோனது உண்மைதான்; விவரங்கள் தெரிவிக்கிறேன்''- இயக்குநர் பாரதிராஜா

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீட்டில் ஐபோன் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோயுள்ளன.

பாரதிராஜா
பாரதிராஜா

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தரப்பில் அவரது மேனேஜர் மாம்பலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ``வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முதல்மாடியில் பாரதிராஜா தூங்கிக்கொண்டிருந்தார். வேலைக்காரர்கள் வீட்டின் தரைதளத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டில் புகுந்த சிலர் ஐபோன், 6,10,000 ரூபாய் பணம், வெள்ளி பொருள்கள் சிலவற்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்" எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பும் பாரதிராஜாவின் வீட்டில் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. அவரின் வீட்டில் வேலைபார்த்த முன்னாள் ஊழியர் அந்தத் திருட்டை நடத்தினார் என்பதால் இந்தத் திருட்டுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருட்டு
திருட்டு

இதுதொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொருள்களை திருடியவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவை தொடர்புகொண்டு பேசினோம். ``திருடுபோனது உண்மைதான். தி.நகர் வீட்டில்தான் களவு போகியுள்ளது. மொபைல் உட்பட சின்னச் சின்ன பொருள்கள் தி.நகர் வீட்டில் திருடுபோயுள்ளது. எனினும் நாளை முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும். நான் இப்போது நீலாங்கரை வீட்டில் இருக்கிறேன்" எனக் கூறினார்.

`வாசிப்பு பழக்கம் குறைஞ்சிடுச்சு; யூடியூப் பக்கம் வந்துட்டேன்!’- பாரதிராஜா