2003-ம் ஆண்டு முதல், இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா, 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்களின் பட்டியலை அறிவித்துள்ளனர். அதில் ஆதார், பிகினிங், கார்கி, இரவின் நிழல், கசடதபற, பபூன், கோட் Goat, இறுதிபக்கம், மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, O2, யுத்த காண்டம் போன்ற 12 படங்கள் சென்னை திரைப்பட விழாவின் போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.