Published:Updated:

"வாழ்வியல் சினிமாக்களை அப்படித்தான் பண்ண முடியும்!" - சசிகுமார் 'ஷார்ப்' பேட்டி

சாதி இருக்கக்கூடாதுன்னுதான் நாங்க எல்லோரும் போராடுறோம். என்மேலயே சாதிப் படங்கள்ல நடிக்கிறேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு

சசிகுமார்
சசிகுமார்

"சுசீந்திரனுக்குக் கபடி பற்றி ரொம்ப நல்லா தெரியும்; அவரே ஒரு கபடி வீரர்தான். முக்கியமா இது பெண்கள் கபடி பற்றிய கதை என்பதால், உடனே ஓகே சொல்லிட்டேன். 'முருகானந்தம்' கேரக்டர்ல நானும், 'சவடமுத்து' கேரக்டர்ல பாரதிராஜா சாரும் நடிச்சிருக்கோம். சவடமுத்து கேரக்டர், சுசீந்திரனின் அப்பாவைப் பிரதிபலிக்கும் கேரக்டர். நான், பாரதிராஜா சார், ஹீரோயின் மீனாட்சி தவிர, நிஜக் கபடி வீராங்கனைகள் பலபேர் நடிச்சிருக்காங்க.'' - 'கென்னடி க்ளப்' குறித்து உற்சாகமாகப் பேசுகிறார் சசிகுமார்.

"பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம்?"

"மறக்கவே முடியாத பசுமையான நினைவு அது. ஏன்னா, அவர் படங்களைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனா, அவர்கூட எனக்கு அவ்வளவா பழக்கமில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப எனர்ஜியா இருப்பார். வசனங்களை எப்படிப் பேசணும், நடிக்கணும்னு கவனமா இருப்பார். என் படங்களைப் பற்றியும் ஸ்பாட்ல பேசுவார். படத்துல நான் அவரை ஐயான்னு கூப்பிடுவேன். படத்துல எனக்கு அவர் கபடி சொல்லிக்கொடுக்கிற ஒரு காட்சி இருக்கும். அதைத் திரையில பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும்."

"வாழ்வியல் சினிமாக்களை அப்படித்தான் பண்ண முடியும்!" - சசிகுமார் 'ஷார்ப்' பேட்டி

" 'நாடோடிகள் 2' படம் பற்றி?"

" 'நாடோடிகள்' படத்துக்குக் கிடைச்ச அதே வரவேற்பு, இந்தப் படத்துக்கும் கிடைக்கும். இதுல காதலையும் சொல்லியிருக்கோம்; சமூகப் பிரச்னைகளையும் பேசியிருக்கோம். படத்துல என் கேரக்டர் பெயர், ஜீவானந்தம். அஞ்சலி பெயர், செங்கொடி. இதைக் கேட்கும்போதே, படம் எந்த அளவுக்கு சமூகப் பிரச்னைகளைப் பேசியிருக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்."

"சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கிற சினிமாக்களை எப்படிப் பார்க்கிறீங்க?"

"கேள்வி கேட்குற நீங்கதான் சினிமாவில் சாதி இருக்குன்னு சொல்றீங்க. சினிமாவுல இருக்கிற நாங்க யாரும் சொல்றதில்லை. சாதி இருக்கக்கூடாதுன்னுதான் நாங்க எல்லோரும் போராடுறோம். என்மேலயே சாதிப் படங்கள்ல நடிக்கிறேன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. ஒவ்வொரு இயக்குநரும் கதை சொல்ல வர்றப்போ, அவங்களோட கலாசாரம், அவங்க வாழ்ந்த வாழ்வியலைத்தான் எடுத்துக்கிட்டு வர்றாங்க. அப்படித்தான் வாழ்வியல் சினிமாக்களைப் பண்ணவும் முடியும். பா.இரஞ்சித் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார். அதேபோல் முத்தையாவும் அவருடைய வாழ்வியல் பற்றித்தான் படங்கள்ல பேசுறார்.

என்கிட்ட கதை சொல்ல வர்ற இயக்குநர்களிடம் 'நீங்க என்ன சாதி'ன்னு நான் கேட்டதில்லை; நானும் இந்த சாதின்னு அவங்ககிட்ட சொன்னதில்லை. கதையைக் கேட்டுட்டு, அவர் யார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கார்னு மட்டும்தான் கேட்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்ககூட பழகும்போது தான், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்னு தெரியவரும். வேற எதையும் நான் கேட்கவும் மாட்டேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால, சாதி பார்த்துப் பழகுற ஆளா நான் வளரல. சினிமாவுக்கு வெளியே இருக்கிறவங்கதான் இதைப் பெருசுபடுத்திப் பேசுறாங்க. உள்ளே இருக்கிறவங்க கண்டுக்கிறதில்ல. மத்தபடி, சாதி சார்ந்த விஷயங்களைத் தவிர்த்துட்டுப் போறதுதான் நல்லது."

"வாழ்வியல் சினிமாக்களை அப்படித்தான் பண்ண முடியும்!" - சசிகுமார் 'ஷார்ப்' பேட்டி

"விஜய் சேதுபதியின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"

" 'சுந்தரபாண்டியன்'ல அவர் நடிக்கும்போது ஹீரோவா அவர் நடிச்ச ரெண்டு படம் ரிலீஸாகியிருந்தது. அவருடைய 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் ரிலீஸுக்காகக் காத்திருந்தது. அதனால, படத்துல வில்லனா நடிக்க ஆட்சேபனை ஏதும் இருக்கான்னு கேட்டேன். 'அதெல்லாம் இல்லை; எல்லா கேரக்டரும் பண்ண ஆசை'ன்னு சொன்னார். தன்னை ஒரு இமேஜுக்குள்ள அடக்கிக்க விஜய் சேதுபதி என்னைக்கும் ஆசைப்பட்டதில்லை."

" 'சுப்ரமணியபுரம்' படம் பாலிவுட் வரைக்கும் ரீச் ஆனது. பாலிவுட்ல நடிக்க, படம் இயக்க வாய்ப்புகள் ஏதும் வந்ததுண்டா?"

" 'சுப்ரமணியபுரம்' படம் ரிலீஸான சமயத்துல எனக்கு பாலிவுட்டில் படம் இயக்குற வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துல அனுராக் காஷ்யப் என்னோட 'சுப்ரமணியபுரம்' பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான், 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்' எடுத்தார். இதை அவரே பல இடங்கள்ல சொல்லியிருக்கார். 'பேட்ட' ஷூட்டிங்ல நவாஜுதீன் சித்திக் 'ஓ... நீங்கதானா அவர்! அனுராக் உங்க படத்தைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். அந்தக் கழுத்தறுக்கிற காட்சியை நான் மறக்கவே மாட்டேன். 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்'ல நடிக்கும்போது, உங்க படத்தின் டிவிடி-யைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்'னு சொல்லி, 'சுப்ரமணியபுரம்' பற்றி ரொம்ப நேரம் பேசினார்."

> முழுமையான பேட்டிக்கு ஆனந்த விகடன் இதழை நாடுங்கள். ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/