சினிமா
Published:Updated:

திருச்சிற்றம்பலம் - சினிமா விமர்சனம்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

‘இப்படியொரு தாத்தா இருந்தா...' என எல்லோரையும் ஏங்க வைக்கிறார் பாரதிராஜா. அவரின் நடிப்பாற்றலில் தெரிகிறது 45 ஆண்டுக்கால சினிமா அனுபவம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்தாற்போல் ஒரு ஜனரஞ்சகப் படம் வெளியாகும். அப்படியொரு நெகிழ்ச்சி அனுபவம்தான் ‘திருச்சிற்றம்பலம்.'

பழம் என்கிற திருச்சிற்றம்பலம் - நாம் எல்லாரும் தினமும் கடந்துவரும் எளிமையான அடுத்த வீட்டுப் பையன். கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டு, தாத்தாவோடு பார்ட்டி செய்துகொண்டு அப்பாவோடு முறைத்துக்கொண்டு திரியும் அக்மார்க் நடுத்தர வர்க்க ஜீவன். ஆண்கள் மட்டுமே உலவும் அவன் உலகின் ஒரே இளைப்பாறுதல் தோழி ஷோபனா. இந்த நால்வரின் வாழ்க்கை, அவர்களுக்குள் நிலவும் முரண்கள், பாசம், இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பழம் சந்திக்கும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கங்கள் ஆகியவற்றின் மொத்தத் தொகுப்பே இந்த ‘திருச்சிற்றம்பலம்.'

திருச்சிற்றம்பலம் - சினிமா விமர்சனம்

தனுஷை பலருக்கும் பிடிக்கக் காரணமே அவர் ஏற்கும் வேடங்களில் சராசரி இளைஞர்கள் தன்னைப் பொருத்திப் பார்க்க முடிவதுதான். இதிலும் அப்படியொரு கதாபாத்திரம் ஏற்று நம்மை சிரிக்கவும் நெகிழவும் ரசிக்கவும் வைக்கிறார். பெஞ்சில் அமர்ந்து காதலைக் கொண்டாடும்/ அதன் ஏமாற்றத்தால் மருகும் காட்சிகளில் ஒரு பரிமாணம் என்றால், பிரகாஷ்ராஜ் நிலையைக்கண்டு தயங்கி நிற்கும் காட்சியில் வேறொரு பரிமாணம். பார்த்துச் சலிக்காதவை பட்டியலில் தனுஷின் நடிப்பையும் சேர்க்கலாம்.

‘இப்படியொரு தாத்தா இருந்தா...' என எல்லோரையும் ஏங்க வைக்கிறார் பாரதிராஜா. அவரின் நடிப்பாற்றலில் தெரிகிறது 45 ஆண்டுக்கால சினிமா அனுபவம். ‘வில்லன்' வரையறைக்குள்ளேயே பெரும்பாலும் சிக்கிவிட்ட பிரகாஷ்ராஜ் என்கிற அசத்தல் கலைஞனின் கனிவும் கண்ணீரும் கொண்ட இன்னொரு முகத்தை வெளிக்கொணர்கிறது ‘நீலகண்டன்' வேடம். இயல்பிலிருந்து ரொம்பவே விலகிவிட்ட தமிழ்சினிமா பெண் கதாபாத்திரங்களில் புதுப் புத்துணர்ச்சி நித்யா மேனனின் ‘ஷோபனா.' பால்யத்தில் ஆண்கள் கொண்டாடிய நட்பின், பேசத் தயங்கிய க்ரஷின் உயிராய், உருவமாய் உலவுகிறார். இந்த நான்கு கலைஞர்களின் நடிப்புப் போட்டியில் மிளிர்கிறது மொத்தப்படமும். அதனாலேயே ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர், முனீஸ்காந்த் என மற்றவர்களுக்கான வெளி குறைவுதான்.

திருச்சிற்றம்பலம் - சினிமா விமர்சனம்

படம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் அனிருத். கதைக்கு மேலும் யதார்த்தமளிக்கிறது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் ஜாக்கியின் கலை இயக்கமும். தாத்தா - மகன் - பேரன் என்கிற கதைக்களத்தில் நல்லுணர்வுத் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களையும் மனம் கனக்கக் கோத்தவகையில் இயக்குநர் மித்ரன் ஜவஹருக்கு வெற்றியே. ஆண் - பெண் நட்பைக் காட்சிப்படுத்தியதிலும் அவரின் முதிர்ச்சி தெரிகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கி நகர நகர வழக்கமான சினிமாவாகிப் போவதுதான் குறை.

‘நிஜமாகவே' குடும்பங்களுக்கான கதைகள் அரிதாகிவிட்ட சூழலில் அந்தக் குறையைப் போக்குகிறது ‘திருச்சிற்றம்பலம்.'