Published:Updated:

`ஆத்மார்த்தமான பாடல்; வேற லெவல்!’ - ரெக்கார்டிங்கில் திருமூர்த்தியை நெகிழவைத்த இமான்

திருமூர்த்தி
திருமூர்த்தி

அந்தப் பாடலை எனக்கு அனுப்பியிருந்தார். நான் திருமூர்த்திக்கு அனுப்பினேன். தம்பி திருமூர்த்தியும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, `அண்ணா நான் ரெடியாகிட்டேன்’ என்றார்.

`கண்ணானக் கண்ணே’ பாடலைப் பாடி பலரின் மனதை வருடியவர் திருமூர்த்தி. பார்வையற்ற மாற்றுதிறனாளியான இவர், தடைகளைத்தாண்டி தன் குரல் வளத்தால் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் பாடிய பாடல் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, `திருமூர்த்திக்கு பாட வாய்ப்பு கொடுப்பேன்’ என்று இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருந்தார். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். ஆம்! இமான் இசையமைக்கும் புதிய படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் திருமூர்த்தி.

திருமூர்த்தி
திருமூர்த்தி

இது தொடர்பாக இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``நொச்சிப்பட்டியைச்சேர்ந்த திருமூர்த்தியை பிண்ணனிப்பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. இயக்குநர் ரத்தினசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் `சீறு’ படத்தில் பாடியுள்ளார். பார்வதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த ஆத்மார்த்தமான பாடல் விரைவில் சோனி மியூசிக்கில் வெளியாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருடைய அண்ணன் அஜித்மதன் என்பவரிடம் பேசினோம், ``நடிகர் ஜீவா நடிப்பில் சீறு என்ற படம் உருவாகி வருகிறது. பார்வதி என்பவர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் படத்தில் வரும் காதல் பாடல் ஒன்றை திருமூர்த்தி பாடியுள்ளார். பாடல் கேட்கும்போது புல்லரித்துவிட்டது. மனதில் ஏதோ ஒருவித காதல் வசமான உணர்வுகள் ஏற்படுகின்றன.

பாடலை ஒருவாரத்துக்கு முன்பே இமான் அனுப்பிவிட்டார். `ஒரு வாரம் முழுவதும் ஹெட்செட் போட்டு கேட்கச் சொல்லுங்க’ என்றார். ஏனென்றால் பார்வையற்றோர் பாட்டைக் கேட்டு மனப்பாடம் செய்துதான் பாட வேண்டும், அதுதான் நடைமுறை. டம்மியான அந்தப் பாடலை எனக்கு அனுப்பியிருந்தார். நான் திருமூர்த்திக்கு அனுப்பினேன். தம்பி திருமூர்த்தியும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, `அண்ணா நான் ரெடியாகிட்டேன்’ என்றார். அப்போது இமான் தொடர்புகொண்டு, `திருமூர்த்தி இப்போ ப்ரீயா இருப்பாரா, கூப்பிடலாமா?’ என்றார். `உங்க போனுக்காகத்தான் வெயிட் பண்றேன்’ என்று சொல்லிவிட்டு ஸ்டுடியோவுக்குச்சென்று திருமூர்த்தி பாடினார்.

இமான்
இமான்

4 முறை பாடவைத்தார். திருமூர்த்தியைப்பொறுத்தவரை, அவருக்கு `ஹைபிட்ச்’ நன்றாக வரும். அதை சோதனை செய்வதற்காக இன்னும் `ஹைபிட்ச்’ ஏற்றி பாடவைத்து, `வேற லெவல்’ என்று பாராட்டினார். `இனி அடுத்தடுத்த பாடல்களை என்னுடன் பாடப் போற’ எனவும் உறுதிகொடுத்தார். `செவ்வந்தி’ என தொடங்கும் பாடல் அது. ரொம்பவே நல்லா வந்துருக்கு” என்றவரிடம், `முதல்பாடல் ஸ்டுடியோவில் பாடியிருக்கிறார், தயக்கமோ, பயமோ இருந்ததா?’ என்று கேட்டோம்.

``இல்ல அவருக்கு அந்த பயம் எதுவும் இல்லை. காரணம் திருமூர்த்தியைப் பொறுத்தவரை அவருடைய உலகம் தனி. நேரில் பார்ப்பதால் தான் நமக்கு அந்த பயம் கூச்சம் எல்லாம் ஏற்படும். திருமூர்த்திக்கு அப்படியில்லை. சகஜமாகவே அவர் பாடினார்” என்றார்.

``காசு வேண்டாம்... க்ரெடிட் கொடுத்தாலே போதும்’’ - `விஸ்வாசம்’ தீம் மியூசிக் சர்ச்சை குறித்து இமான்!

தொடர்ந்து பேசியவர், ``ஏழுவருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்போது திருமூர்த்தி தொட்டாங்குச்சியைத் தட்டிக்கொண்டு பாடிக்கொண்டிருப்பார். சிவராமன் என்ற இளைஞர் `நீ நல்லா பாட்றடா’ என்று கூறி, அவர் கோவையிலிருக்கும் அஞ்சலி, தஸ்லீமா என்ற இரண்டு திருநங்கைகளிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர்கள், இசைக்கலைஞர் மோகன் வைத்தியாவிடம் சேர்த்துவிட்டனர். அவரிடம் 5 மாதம் அடிப்படை இசையை கற்றுக்கொண்டார். பிறகு ஊருக்குத் திரும்பிய திருமூர்த்தி 1 வருடம் சும்மா தான் இருந்தார். தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பயனில்லை. இதனிடையே, 2014-ம் ஆண்டு திருமூர்த்தி எனக்கு அறிமுகமானார். அப்போது அவரை பாடச்சொல்லி மொபைலில் வீடியோ எடுத்து வைத்திருந்தேன். 5 வருடமாக அந்தப் பாட்டு என் மொபைலில் இருந்ததை நான் அண்மையில் பார்த்து என் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்.

அஜித்மதன்
அஜித்மதன்

அந்தப் பாட்டு செம்ம வைரலாகிவிட்டது. 7 மணிநேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதைப் பார்த்ததும், திருமூர்த்தியை தொடர்புகொண்டு, இதைச்சொன்னேன். `ரொம்ப சந்தோஷம்னா’ என்றார். திருமூர்த்தி `கண்ணாண கண்ணே’ பாடலை அருமையாக பாடுவான். நான் அந்தப் பாட்டை பாடச்சொல்லி அதை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். 3 மணிநேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்தனர். இதையடுத்து, மலேசியாவில் வசிக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஜியா என்றவர், இந்தப் பாட்டைப் பார்த்து, `அண்ணா திருமூர்த்தி பாடிய கண்ணான கண்ணே பாடல் வைரலாகப் போகிறது. இதை பிரபலப்படுத்த வேண்டும்' என்று கூறி, பாலாஜி என்றவருக்கு டேக் செய்தோம்.

அவர் இசையமைப்பாளர் இமானுக்கு டேக் செய்தார். இதைப் பார்த்ததும் இமான் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார். வாய்ப்பு தருவதாக ட்விட்டரில் அவர் பதிவிட்ட பதிவு எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியாகத் தொடங்கிய பயணம் இன்று முதல் பாடலை எட்டியுள்ளது. இசையமைப்பாளர் இமானுக்கும் விகடனுக்கும் நொச்சிப்பட்டி கிராம மக்கள் சார்பாக கோடி நன்றிகள்” என்றார் உற்சாகப் பெருக்குடன்.

வைரல் சிங்கர்  முழு கதை..! - `கண்ணான கண்ணே' டூ `தள்ளிப்போகாதே'
அடுத்த கட்டுரைக்கு