Published:Updated:

`இரக்கத்தால் கிடைத்ததல்ல; திருமூர்த்தியின் திறமைக்குக் கிடைத்த வாய்ப்பு இது!' - கவிஞர் பார்வதி

'கண்ணான கண்ணே...' பாடலைச் சமூக ஊடகத்தில் பாடி, வைரலான திருமூர்த்தி விரைவில் திரைப்படப் பாடகராக இவ்வுலகில் வலம் வரவிருக்கிறார்.

இமான் மற்றும் திருமூர்த்தியுடன் பார்வதி
இமான் மற்றும் திருமூர்த்தியுடன் பார்வதி

சில மாதங்களுக்கு முன், `விஸ்வாசம்' படத்தின், `கண்ணான கண்ணே...' பாடலைச் சமூக ஊடகத்தில் பாடி வைரலான திருமூர்த்தி இமான் இசையில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். திருமூர்த்தி பாடிய பாடலை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் பார்வதி. அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

`ஆத்மார்த்தமான பாடல்; வேற லெவல்!’ - ரெக்கார்டிங்கில் திருமூர்த்தியை நெகிழவைத்த இமான்

``திருமூர்த்தி பாடிய இந்தப் பாடல், இமான் சார் மியூசிக்கில் இயக்குநர் ரத்னசிவா சார் படத்துக்காக உருவான பாடல். நிச்சயம் இந்தப் பாடல் கொண்டாடப்படும். பாடலின் இன்னொரு வெர்ஷனை வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். இரண்டு வெர்ஷன் ஒலிப்பதிவின்போதும் நான் உடனிருந்தேன். திருமூர்த்தி பாடலைச் சட்டென்று உள்வாங்கிக்கொண்டு நல்ல முறையில் பாடிக்கொடுத்தார். சில உச்சரிப்புகளை மட்டுமே சொல்லிக்கொடுக்க வேண்டியதாயிருந்தது.

சில வரிகளைக் குறிப்பிட்டு, `இந்த வரிகள் நல்லாயிருக்கு' என்றெல்லாம் கூறி பாடினார். இமான் சார் சில பேட்டிகளில் சொல்லியிருந்தார் `பாவம் பார்த்து கொடுத்த வாய்ப்பு கிடையாது இது' என்று. அதை முக்கியமான விஷயமாக நினைக்கிறேன். திருமூர்த்தியின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம். அதை நிரூபிக்கும் விதத்தில் பாடவும் செய்திருக்கிறார்.

பின்னணிப் பாடகர் வைக்கம் விஜயலட்சுமியுடன் கவிஞர் பார்வதி
பின்னணிப் பாடகர் வைக்கம் விஜயலட்சுமியுடன் கவிஞர் பார்வதி

பாடல் என்பது நமது வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்த ஒரு விஷயம். வலிந்து திணிக்கும் விஷயம் அல்ல. திணிக்கப்பட்ட பாடல்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. பாடலைப் பொறுத்தவரை மாஸ் ஹீரோவுக்கான அறிமுகப்பாடலை எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனக்குத் தெரிந்த அளவில் பெண் பாடலாசிரியர்கள் யாரும் விஜய் அல்லது அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு அறிமுகப் பாடல்களை எழுதியதில்லை. அந்த வாய்ப்பு எனக்கு அமையுமென நம்புகிறேன்.

கவிதை வேறு, பாடல் வேறு. கவிதை எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. பாடல் எழுதும்போது கொடுக்கப்பட்டிருக்கும் மெட்டு, கதாபாத்திரம் எல்லாவற்றையும் பொருத்து எழுத வேண்டும். தனிப்பட்ட முறையில் மெட்டுக்குப் பாடல் எழுதுவது எளிமையான ஒன்றாகவே பார்க்கிறேன். அறிவுமதி ஐயாவிடமிருந்து அதற்கான பயிற்சியை எடுத்துள்ளேன்" என நம்பிக்கையுடன் பேசுகிறார் பார்வதி.