Published:Updated:

``விஜய்க்கு பாட்டு எழுத முடியல... அவருக்காக சிலர் குரூப்பா இயங்குறாங்க!'' - கவிஞர் கபிலன்

கபிலன்
கபிலன்

இளையராஜாவின் இசையில், `சைக்கோ' படத்தின் `உன்ன நெனைச்சு' பாடல் செம ஹிட். இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் கபிலனிடம் பேசினேன்.

``இயக்குநர் மிஷ்கின்னுடன் உங்க நட்பைப் பற்றி சொல்லுங்க..."

``பல ஆண்டுகளா நானும் மிஷ்கினும் நல்ல நண்பர்கள். விஜய் நடிச்ச `யூத்' படத்துல மிஷ்கின் உதவி இயக்குநரா வேலை பாத்தார். இந்தப் படத்துல `ஆல்தோட்ட பூபதி' பாட்டை நான் எழுதியிருந்தேன். இந்தப் பாட்டை கேட்டுட்டு பலரும், `இதெல்லாம் என்ன வரிகள்... நல்லா இல்லை'னு தவிர்த்துட்டாங்க. அப்போ மிஷ்கின், `சென்னை ராயப்பேட்டையில் ஆல்தோட்டம்னு ஒரு ஏரியா இருக்கு'னு எல்லார்கிட்டயும் எடுத்துச்சொன்னார். இந்தப் பாட்டு கானா வகையைச் சார்ந்தது. கானா பாடல்கள் பத்தி ஆய்வுகள் பண்ணி நான் எம்.ஃபில் முடிச்சிருக்கேன். பல எதிர்ப்புகள் வந்தப்பவும் மிஷ்கின் எனக்கு உதவினார்.

மிஷ்கினுடன் கபிலன்
மிஷ்கினுடன் கபிலன்

படம் ரிலீஸாகி பாட்டு பெரிய ஹிட் ஆனதுக்கு அப்புறம் நிறைய பேர் புகழ ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கும் மிஷ்கினுக்குமான நட்பு இன்னும் பலமாகிடுச்சு. `ஜித்தன்' படத்தோட இயக்குநர் வின்சென்ட் செல்வாகிட்ட கானா உலகநாதனை அறிமுகப்படுத்தி வெச்சி, `வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்' பாட்டை பத்திச் சொன்னேன். ஆனா, செல்வாவுக்கு பிடிக்கலைனு தவிர்த்துட்டார். அங்கேயும் உதவி இயக்குநரா மிஷ்கின் இருந்தார். அவரோட முதல் படம் `சித்திரம் பேசுதடி'ல இந்தப் பாட்டை பயன்படுத்திக்கிட்டார். அப்படியே தொடர்ந்து மிஷ்கின் படங்களில் பாடல் எழுத ஆரம்பிச்சிட்டேன். "

``இளையராஜா இசையில் பாடல் எழுதிய அனுபவம் சொல்லுங்க?"

இளையராஜாவுடன் கபிலன்
இளையராஜாவுடன் கபிலன்

``சில மாசத்துக்கு முன்னாடி போன் பண்ணி, `பிரசாத் லேபுக்கு வாங்க'ன்னு மிஷ்கின் கூப்பிட்டார். அங்கே எனக்கான ஆச்சர்யம் காத்துக்கிட்டிருந்தது. இளையராஜா சார் இருந்தார். `நந்தலாலா' படத்துக்காகத்தான் முதல் முறையா அவரைப் பார்த்தேன். அதுவரைக்கும் நிறைய பாடல்கள் எழுதியிருந்தாலும் இளையராஜா சார் கூட வேலைபார்த்தது கிடையாது. எனக்குள்ளே இருந்த வருத்தத்தைப் போக்கினது மிஷ்கின்தான். முதல்ல புதுசா ஒரு பையன் வந்திருக்கானேனு இளையராஜா சார் கொஞ்சம் யோசிச்சார். அப்புறம் அவர் ட்யூன் கொடுக்க, நான் பாடல் எழுதிக் கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு ராஜா சாரும் தொடர்ந்து எனக்கு பாடல்கள் கொடுத்தார். எங்க கூட்டணில பெரிய ஹிட் `சைக்கோ' படத்துல வந்த `உன்ன நெனைச்சு' பாட்டுதான். இரண்டு நாள் இரவில் இந்தப் பாட்டை எழுதி முடிச்சிட்டேன். மிஷ்கின் எப்பவும் பாட்டோட சூழல் மட்டும்தான் என்கிட்ட சொல்லி வரிகள் வாங்குவார். கண் தெரியாத ஒருத்தனுடைய காதல் தோல்வியை, அவனோட உணர்வுகளிலிருந்து சொல்லியிருப்பேன். கண் தெரியாதவருக்கு வாசம், ஓசைதான் எல்லாமே. அதனாலதான் `வாசம் ஓசை இவைதான் எந்தன் உறவே'னு எழுதியிருப்பேன். பாட்டு ஹிட்டுக்குக் காரணம் ராஜா சாரோட மென்மையான இசை. அப்புறம் சித் ஶ்ரீராமின் குரல்."

``ஏ.ஆர்.ரஹ்மான்கூட பணியாற்றிய அனுபவம்..."

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கபிலன்
ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கபிலன்

``அவர்கூட நிறைய படங்களில் வேலைபார்த்துட்டேன். அடிக்கடி போன் பண்ணி ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லுவார். `99 songs'னு ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரிக்கிற படம் இந்தியில் ரெடியாகுது. இதுல நான் ரெண்டு பாடல்கள் எழுதியிருக்கேன். பாடகர் வர்ற அரை மணி நேரத்துக்குள்ள நானும், ரஹ்மானும் ஒன்னா உட்கார்ந்து ஒரு பாட்டை எழுதி முடிச்சிட்டோம். எழுதிக்கிட்டு இருக்குறப்போ, அவருக்குத் தோணுற வரிகளையும் நம்மகிட்ட சொல்லுவார். இலக்கியத் தனமான வரிகளை அவர் அதிகம் விரும்புவார்."

``நடிகர் விஜய்யின் அறிமுகப் பாடல்களுக்கு பெயர் போனவர் நீங்கள். சமீபகாலமாக அவருக்கு பாடல்கள் எழுதுறதில்லையே... ஏன்?"

``இந்தக் கேள்வியை, தொடர்ந்து என்கிட்ட பலபேர் கேட்டுட்டாங்க. கடந்த ரெண்டரை வருஷமா அவர் படங்களுக்கு நான் பாடல்கள் எழுதுறதில்லை. விஜய் சாருக்கு என்னால இப்ப பாட்டு எழுத முடியல. விஜய் சாரோட இப்ப வேற ஒரு குரூப் இயங்கிட்டு இருக்காங்க. சிலர் `விஜய்க்கிட்ட போய் சொல்லுங்க'னு சொன்னாங்க. அந்த அளவுக்கெல்லாம் போக வேண்டாம்னு விட்டுட்டேன். `இயக்குநர் விருப்பப்பட்டு ஒருத்தர்கிட்ட கொடுக்குறப்போ நாம இடையில போகக் கூடாது'னு சொல்லிருவேன். மத்தவங்க வாய்ப்பை நாம தட்டிப்பறிக்கிறது சரியில்ல. வர்றப்போ வரட்டும்னு காத்துட்டிருக்கேன். அவருக்குப் பாடல் எழுதும்போது, அதில் எப்போதுமே அவர் தலையிட மாட்டார். `ரொம்பப் புகழ வேண்டாம்'னு மட்டும் ஒருமுறை சொல்லியிருக்கார். முதல்ல அவருக்கு `வாடியம்மா ஜக்கம்மா', `மச்சான் பேர் மதுர'னு இப்படிப்பட்ட பாடல்கள்தான் எழுதிட்டிருந்தேன். சமூக கருத்துகள் இருக்குற மாதிரியான வரிகளும் எழுதலாம்னு தோணுச்சு. `போக்கிரி' படத்தின்போது பிரபுதேவாகிட்ட சொன்னேன். அவரும் ஓகே சொன்னார். அப்போதான்,

`மழைக் காலத்தில் குடிசை எல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்...

வெயில் காலத்தில் குடிசை எல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்...

சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப் புள்ள...

பட்டதெல்லாம் எடுத்துச் சொல்ல பட்டப் படிப்பு தேவ இல்ல...

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து'' னு' வரிகள் எழுத ஆரம்பிச்சேன்.

விஜய்க்கு மாஸ் ஹிட் பாடல்களை எழுதியது கபிலனா, விவேக்கா? - வரிகள் சொல்லும் உண்மை என்ன?!

``சூப்பர் ஸ்டாருக்கு சில பாடல்கள் எழுதியிருக்கீங்க... அந்த அனுபவம் சொல்லுங்க?"

பா.ரஞ்சித் உடன் கபிலன்
பா.ரஞ்சித் உடன் கபிலன்

``இயக்குநர் பா.இரஞ்சித்தான் காரணம். அவரோட `அட்டகத்தி' படத்தின் போதுதான் ரெண்டு பேரும் அறிமுகமானோம். தொடர்ந்து அவரோட படங்களில் எழுத ஆரம்பிச்சேன். `சந்திரமுகி'யில் ரஜினி சாருக்காக `அண்ணணோட பாட்டு' பாடல் எழுதியிருக்கேன். அதுக்குப் பிறகு `கபாலி', `காலா' படங்களில்தான் ரஞ்சித்தால், ரஜினிக்கு பாடல் வரிகள் எழுதும் வாய்ப்பு கிடைச்சது. `சந்திரமுகி' சமயத்துல, இயக்குநர் பி.வாசு ரஜினி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். `கபிலன்னு சொன்னவுடனே பெரிய ஆளா இருப்பீங்கன்னு நினைச்சேன். சின்ன பையனா வந்து நிக்குறீங்க'ன்னார் ரஜினி. போறப்போ `சாப்பிட்டு போங்க'ன்னு சொல்லி அனுப்பினார். அதுக்கு அப்புறம் `கபாலி' சமயத்துலதான் அவரைப் பாத்தேன். `கமல் நண்பரே வாங்க'னு விசாரிச்சிட்டு சாப்பிடக் கூப்பிட்டார். நான் `ரஞ்சித் கூட சாப்பிட்டுக்குறேன் சார்'னு சொன்னேன். உடனே ரஞ்சித்கிட்ட `என்கூட கபிலனை சாப்பிடக் கூட்டிட்டுப் போறேன்'னு சொல்லிட்டு அழைச்சிட்டு போய் சாப்பாடு போட்டார்.

` புதிய கல்விக்கொள்கை குறித்து ரஜினி பேசியிருந்தால், மோடி கேட்டிருப்பார்!’ - பாடலாசிரியர் கபிலன்

``அதிக தமிழ் வரிகள் இல்லாத இன்றைய பாடல் வரிகளைப் பற்றி என்ன நினைக்குறீங்க?"

ரஜினியுடன் கபிலன்
ரஜினியுடன் கபிலன்

``சூழல் இப்படிதான் இருக்கு. ஏதாவது கேட்டா, `ட்ரெண்ட்... மக்கள் இப்படித்தான் விரும்புறாங்க'ன்னு சொல்றாங்க. மக்கள் யாரும் மாநாடு போட்டு இந்த மாதிரியான வரிகள் வேணும்னு கேட்குறதில்லை. இவங்க தப்புக்கு மக்கள் மேல பழியைப் போடுறாங்க. ராப் பாடல்கள்னு சொல்றாங்க. அமெரிக்காவுல யாரும் நம்ம நாட்டு பாடல்களைப் பாடுறதில்லை. வெளிநாட்டு மோகம்தான் எல்லாத்துக்கும் காரணம்."

அடுத்த கட்டுரைக்கு