Published:Updated:

`அவர் நடவடிக்கை சரியில்லை!' - `தொரட்டி' ஹீரோயின் சத்யகலா

நான் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடல. அவங்கதான் தேடுறாங்க. அது தப்புங்கிறதாலதான் இங்க நான் வந்திருக்கேன். அவங்க ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தபிறகும் நான் எதுவுமே வாய்திறக்காமல் இருந்தால், சினிமா பப்ளிசிட்டிக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்’னு ஆகிடும்.

தொரட்டி ஹோரோயின் சத்தியகலா
தொரட்டி ஹோரோயின் சத்தியகலா

வெளிவருவதற்கு முன்பே சர்வதேச விழாக்களில் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்பைக் குவித்திருந்த திரைப்படம் `தொரட்டி’. ஆடு மேய்க்கும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பி.மாரிமுத்து என்பவர் இயக்கியுள்ளார். கேமராமேன் ஷமன்மித்ரூ இப்படத்தைத் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார். விரைவில் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ஹீரோயின் சத்யகலா காணாமல்போய் விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் சார்பாக ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

இந்த நிலையில், ``நான் காணாமல் போகவில்லை; தவறான பிஹேவியர் கொண்டவர்கள் நான் காணாமல் போய்விட்டதாக பொய்த் தகவல் பரப்புகிறார்கள்’ என தன் தாய், தந்தையோடு வந்து கோவை பிரஸ் கிளப்பில் அதிரடி கிளப்பியிருக்கிறார் சத்தியகலா. அப்போது அவர், ``எனக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாட்டால் நான் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு வர முடியாதென்று முன்பே சொல்லியிருந்தேன். நான் வெளிப்படையாகச் சொல்லியும் அடுத்த நாளே என்னைக் காணவில்லையென்று பொய்யான தகவலை நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் பப்ளிசிட்டிக்காக அப்படிச் செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. பப்ளிசிட்டிக்காகவாகத்தான் இருக்க முடியும்.

நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, யாராலும் கடத்தப்படவும் இல்லை, பத்திரமாக இருக்கிறேன்.
சத்தியகலா

என் அம்மா உயிருடன் இருக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டதாகவும், என் அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இது சுத்தப் பொய். அவர்கள் இப்படிச் சொன்னது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. புரோமோஷன் பண்றதுக்கு நிறைய வழி இருக்கு. அதற்காக என் குடும்பத்தை இழுக்கக் கூடாது. இதற்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லியிருக்கிறேன். மற்றபடி நான் எங்கேயும் காணாமல் போகவில்லை, யாராலும் கடத்தப்படவும் இல்லை, பத்திரமாக இருக்கிறேன்'' என்ற சத்தியகலாவிடம் பத்திரிகையாளர்கள் பின்வரும் கேள்விகளை முன் வைத்தனர்

உங்களுக்கும் தயாரிப்பாளருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?

சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள்தான். கொஞ்சம் சம்பளப் பிரச்னை அப்புறம் அவருடைய பிஹேவியர்ஸ் எதுவும் சரியில்லை.!

ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் உங்கள் குற்றச்சாட்டு யார் மீது?

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷமன்மித்ரூதான் ஹீரோவும். அவர்தான் என்னைக் காணவில்லையென்று கோர்ட்டில் பெட்டிஷன் போட்ருக்கார். என் அப்பா அம்மா உயிரோடு இருக்கும்போது அவர் எப்படி என்னை காணோம்னு பெட்டிஷன் போடலாம்? அவருக்கு அதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? ஷமன்மித்ரூதான் பிரச்னை. இயக்குநர் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

சில விஷயங்களை, நான் பப்ளிக்கா சொல்ல விரும்பல. அதைப் பற்றி பேச வேண்டாம்’னு நினைக்கிறேன்.
சத்தியகலா

சம்பளத்தில் என்ன பிரச்னை?

ஆமாம்! ஒரு லட்சம் ரூபாய் பேசிவிட்டு ஐம்பதாயிரம் ரூபாய்தான் கொடுத்துள்ளார்கள். இன்னும் ஐம்பதாயிரம் பாக்கி இருக்கிறது

உங்களுக்கு பாலியல் ரீதியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா?

சில விஷயங்களை, நான் பப்ளிக்கா சொல்ல விரும்பல. அதைப் பற்றி பேச வேண்டாம்’னு நினைக்கிறேன்.

நீங்கள் பட புரமோஷனுக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறதே? அவர்களுடைய நிபந்தனைகளுக்கு உட்பட்டுதானே நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்?

ஆமாம்.! அவங்க நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் நடிச்சேன். நான் இல்லைன்னு சொல்லலை. ஆடியோ வெளியீட்டு வேலைகளையெல்லாம் செய்துகொடுத்துட்டுதான் வந்திருக்கிறேன். சொல்லப்போனால், அவங்கதான் நிபந்தனைகளை மீறியிருக்கிறார்கள். ஏனென்றால், நான் தான் டப்பிங் செய்வதாக இருந்தது. டப்பிங் பண்றதுக்கு நான் பெர்மிஷன் கேட்டபோது, அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை டப்பிங் பண்ண விடாமல் தடுத்துவிட்டார்கள்!

நான் ஒப்புக்கொண்டபடி சி.வி.குமார் சார் முன்னிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்குச் சென்று புரோமோஷன் பண்ணிக்கொடுத்துட்டேன். அவங்க கம்பெனி சேஞ்ச் பண்ணிட்டாங்கங்கிறதுக்காக மறுபடி, மறுபடி என்னை தொந்தரவு செய்தால் நான் என்ன செய்ய முடியும். இதைத் தாண்டியும் எனக்கு நிறைய வொர்க் இருக்கு. ஈவென்ட் மேனேஜ்மெண்ட் பண்ணிட்டு இருக்கேன். அதையும் நான் பார்க்க வேண்டாமா? அதுமட்டுமில்லாம அவங்களுடைய அணுகுமுறை `ரெஸ்பெக்ட் ஃபுல்லா’ இல்லாததால நான் வரலைன்னு ரொம்பவே டீசன்டா சொல்லிட்டேன்.

ஏன் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கவில்லை?

நான் சங்கத்தில் உறுப்பினரா இல்லாததால் நான் அங்கு போகவில்லை.

நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இப்படி பண்றீங்கன்னு ஒரு பேச்சு ஓடுதே?

நான் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடல. அவங்கதான் தேடுறாங்க . அது தப்புங்கிறதாலதான் இங்க நான் வந்திருக்கேன். அவங்க ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தபிறகும் நான் எதுவுமே வாய்திறக்காமல் இருந்தால், சினிமா பப்ளிசிட்டிக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்’னு ஆகிடும். அப்படி தவறான முன்னுதாரணம் ஆகிறக்கூடாதுன்னுதான் நான் இப்போ பேசிட்டிருக்கேன். நல்ல படம். தரமான கதைக்கரு. நிறைய அவார்டுகள் வாங்கியிருக்கு அப்புறம் ஏன் இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்யறாங்கன்னு எனக்குப் புரியவே இல்லை.

இப்போ தயாரிப்பாளர் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?

எங்க குடும்பத்தின் நன்மதிப்பு கெடும் வகையில் செயல்பட்டதற்கு பொதுவெளியில் மறுப்பு கூற வேண்டும்.