Published:Updated:

`சந்-தா-னம்' மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா'!

உ. சுதர்சன் காந்தி.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சந்தானம்
சந்தானம்

காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான ரசிகர்களை சம்பாதித்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின், 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு', 'சக்கப்போடு போடுராஜா', 'தில்லுக்கு துட்டு 2' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில், அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் இவர் நடித்த 'ஏ1' வெளியானது. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி' படம் ரிலீஸுக்குத் தயராக இருக்கிறது.

டிக்கிலோனா
டிக்கிலோனா

இந்நிலையில், கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு 'டிக்கிலோனா' எனப் பெயரிட்டுள்ளனர். சந்தானம் முதல் முறையாக ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கவிருக்கிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், 'பலூன்' பட இயக்குநர் சினீஷின் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் போஸ்டரில் `சந்-தா-னம்'(san-tha-nam) என அவரது பெயர் பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் 'ஓடி ஓடி உழைக்கணும்', 'சர்வர் சுந்தரம்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தவிர, இயக்குநர் கண்ணன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சந்தானம்.