Published:Updated:

``ரஜினி சார் அரசியல் பக்கம் போறதுக்குள்ள இதைப் பண்ணிடுங்க ப்ளீஸ்!" - வெங்கடேஷ்

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பேட்டி!

'சின்னத்தம்பி', 'சின்னக் கவுண்டர்', 'அண்ணாமலை', 'சூர்யவம்சம்', 'காக்க காக்க', 'ஜெமினி', 'ஆனந்தம்', 'இறுதிச்சுற்று' எனப் பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கேயும் ஹிட் கொடுத்த 'விக்டரி' வெங்கடேஷ், தற்போது 'அசுரன்' எனும் மாஸ்டர்பீஸைக் கையில் எடுத்துள்ளார். சிவசாமியாக தனுஷ் நம்மை ஆட்கொண்டதுபோல 'நாரப்பா'வாக டோலிவுட்டை அசரடிக்கத் தயாராகி வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவில்பட்டி வந்தவரை கடலைமிட்டாய் உடன் சந்தித்துப் பேசினோம்.

`சிவசாமி'ங்கிற கேரக்டர்ல தனுஷ் நடிப்பு எப்படி இருந்தது?

``அற்புதமான நடிப்பு. வெற்றிமாறன் - தனுஷ் காம்பினேஷனை நான் தொடர்ந்து கவனிச்சுட்டு வர்றேன். அந்த ஸ்கூலே வேற மாதிரி இருக்கும்போல. 'அசுரன்' செம கதை, அருமையான எமோஷன், நேர்த்தியான பர்ஃபாமென்ஸ். சிவசாமி தன் பையனோட நீரோடைக்குள்ள இறங்கி நடந்து வர்ற முதல் சீன்லயே தனுஷ் எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணிட்டார். அதுதான் 'நாரப்பா'வுல எனக்கான சேலஞ்ச். நானும் இதுவரை ரெண்டு பசங்களுக்கு அப்பாவா இந்த மாதிரி ஒரு ராவான செட் அப்ல நடிச்சதில்லை. நிறைய பேர் 'அசுரன்' ஆர்ட் ஃபிலிம்னு நினைக்கிறாங்க. இது பக்கா கமர்ஷியல் படம். இதுல இருந்ததுக்கு மேல என்ன மாஸ், எமோஷன், ரிவெஞ்ச் இருக்க முடியும்? நான் ஒரு த்ரில்லோடவே 'நாரப்பா'வுல வேலை செஞ்சுட்டு இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு, ஒவ்வொரு ஷாட்டையும் ரசிச்சு ரசிச்சு பண்றேன். இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறதுல ரொம்ப சந்தோஷம்"

வெற்றிமாறன் படங்கள்ல உங்களுக்குப் பிடிச்சது?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"எல்லாமே பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா 'வடசென்னை'. சூப்பரா பண்ணியிருந்தார். ஜெயில் சீக்வென்ஸ், அதுல இருக்கிற டீடெயிலிங் எல்லாம் அருமையா இருந்தது. சுவாரஸ்யமான பேக் ட்ராப், நடிகர்கள்கிட்ட இருந்து இயல்பான நடிப்பை வாங்குறதுனு ஒவ்வொரு படத்துலயும் நம்மை பிரமிக்க வைக்கிறார். அவருடைய பார்வையே வித்தியாசமா இருக்கு. ஹேட்ஸ் ஆஃப் வெற்றி!"

'நாரப்பா' பண்றதுக்கு முன்னாடி வெற்றிமாறன் அல்லது தனுஷ்கிட்ட பேசுனீங்களா?

"படம் பார்த்தவுடனே தாணு சார்கிட்டேயும் இயக்குநர்கிட்டயும் பேசினேன். அப்பவே இந்தக் கதையைத் தெலுங்குல பண்ணி நான் நடிக்கலாம்னு இருக்கேன்னு சொல்லிட்டேன். 'சின்ன தம்பி', 'சுந்தரகாண்டம்', 'த்ரிஷ்யம்' இந்தப் படங்கள் எல்லாம் பார்த்தவுடனே தெலுங்குல நடிக்கணும், அது மக்களுக்குப் பிடிக்கும், எனக்கும் ரொம்ப சவாலா இருக்கும்னு தோணுச்சு. அந்த மாதிரிதான் 'அசுரன்' படமும்."

'அசுரன்' எடுத்த இடத்துக்கே வந்து ஷூட்டிங் பண்ண என்ன காரணம்?

``ரஜினி சார் அரசியல் பக்கம் போறதுக்குள்ள இதைப் பண்ணிடுங்க ப்ளீஸ்!" - வெங்கடேஷ்

"லொகேஷன்தான் முக்கியக் காரணம். 'அசுரன்' படத்துடைய வெற்றிக்கு லொகேஷனுக்குப் பெரிய பங்கு இருக்கு. அதனாலதான் இங்கேயே வந்து ஷூட் பண்ணிட்டு, எங்க ஊருக்குத் தகுந்த மாதிரி சின்னச் சின்ன கரெக்‌ஷன் மட்டும் பண்ணிக்கிட்டோம். அனந்தபூர் பகுதியில நடக்குற மாதிரி கதை. அதனால அந்த ஊர்ல வீடெல்லாம் எப்படி இருக்குமோ அதுக்குத் தகுந்த மாதிரி இங்க செட் போட்டிருக்கோம். "

ஏற்கெனவே உங்களை வெச்சு 'சீத்தம்மா வாக்கெட்லோ சிரிமல்ல செட்டு'னு ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்ததுனாலதான் ஶ்ரீகாந்த் அடாலா இந்தப் படத்தை இயக்கணும்னு முடிவு பண்ணீங்களா?

" 'அசுரன்' படத்தை தெலுங்குல பண்ணலாம்னு முடிவு பண்ண பிறகு, யார் இயக்குனா நல்லாயிருக்கும்னு யோசிச்சுட்டு இருந்தோம். ஒருநாள் அண்ணன் என்கிட்ட 'ஶ்ரீகாந்த் போன் பண்ணியிருந்தாப்ள, அவருக்கும் பிடிச்சிருந்துச்சாம்'னு சொன்னார். அப்புறம் அவரை மீட் பண்ணோம். அவர் எங்கக்கிட்ட பேசும்போது அவர் படத்துக்குள்ள எவ்வளவு ஆழமா போயிருக்கார்னு தெரிஞ்சது. 'இந்த சீனை இப்படிப் பண்ணிக்கலாம் சார், அந்த சீனை அப்படி பண்ணிக்கலாம் சார்'னு வெற்றிமாறன் எவ்ளோ ரசிச்சிருப்பாரோ அந்தளவுக்கு ரசிச்சு சொன்னார். எனக்கு அவர் நல்லா பண்ணுவார்னு நம்பிக்கை இருந்தது. ஏற்கெனவே நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் அவர். அதனால அப்படியே படம் டேக் ஆஃப் ஆகிடுச்சு."

'சின்ன தம்பி', 'சின்னக் கவுண்டர்', 'சூர்யவம்சம்', 'காக்க காக்க'னு பல படங்களுடைய ரீமேக்ல நடிச்சிருக்கீங்க. அப்போல்லாம் அந்தப் படத்துடைய ஒரிஜினல் வெர்ஷன் ஹீரோக்கள்கிட்ட பேசுவீங்களா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"அப்படி நான் பேசினதில்லை. படம் பார்த்து ரொம்பப் பிடிச்சுப்போய், உடனே அடுத்தடுத்த வேலைகள்ல இறங்கிடுவேன். ஆனா, பேசியிருக்கணும். பாக்கியராஜ் சாருடைய 'சுந்தரகாண்டம்' ரீமேக் பண்ணும்போது அவர்கிட்ட பேசினேன். 'பாக்யராஜ் சார் படம் பண்றீங்களா? உங்களுக்கு செட்டாகும்னு நினைக்கிறீங்களா?'னு அந்த டைம்ல நிறைய பேர் கேட்டாங்க. 'பாருங்கயா, ஜாக்பாட் அடிக்கிறேன்'னு சொல்லி அந்தப் படத்துல நடிச்சேன். சூப்பர் டூப்பர் ஹிட்! அவர் திரைக்கதையும் டைமிங்கும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல அவர்தான் மாஸ்டர். எப்போவும் அவர் மேல எனக்குத் தனி மரியாதை உண்டு."

பல பேர் நடிச்சு ஹிட்டான கதைகள்ல நீங்க உங்களை எப்படிப் பொருத்திப் பார்க்குறீங்க? அது எவ்வளவு சவால்?

"நம்ம புதுசா ஒரு கேரக்டர்ல நடிக்கிறதைவிட இன்னொருத்தர் நடிச்ச கேரக்டரை எடுத்து நடிக்கிறது ரொம்ப ரொம்ப சிரமம். அந்த சவால் எனக்கு பிடிச்சிருக்கு. 'சின்ன தம்பி' ரீமேக் ('சன்டி') பண்றதுக்கு முன்னாடி என் படங்கள், என் காஸ்ட்யூம், உடல் மொழினு எல்லாமே வேற மாதிரி இருக்கும். 'சின்ன தம்பி' ரீமேக் பண்ணப்போறேன்னு தெரிஞ்சவுடன், 'அதை எப்படி அவன் பண்ணுவான், அவனுக்கு எப்படி அந்தக் கதை சரியா இருக்கும்'னு பல கேள்விகளும் விமர்சனங்களும் வந்தன. என் அப்பாவே என்கிட்ட, 'அந்தக் கதை உன் ஸ்டைலுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறியா. எதுக்கும் ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சுக்க'னு சொன்னார். தெலுங்கு சினிமா முழுக்க 'வெங்கி ரொம்பத் தப்பு பண்றான், அது அவனுக்கு செட்டாகுது'னு சொன்னாங்க. 'இந்தளவுக்கு ப்ரஷர் இருக்கா, இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களா? ஏன் நம்ம பண்ணா நல்லாயிருக்காதா?'னு கண்ணாடி முன்னாடி நின்னு அந்தப் படத்துல பிரபு பண்ற சில முகபாவனைகளை செஞ்சு பார்த்தேன். 'அதான் வருதே. அப்புறம் ஏன் பயப்படணும்?'னு மத்தவங்க சொல்றதைக் கேட்காம நம்பிக்கையா இருந்தேன். பல இடங்கள்ல நடிகர்களைத் தாண்டி சப்ஜெக்ட்தான் பேசும். அப்படி நான் ரீமேக் பண்ணணும்னு நினைச்ச படங்கள் எல்லாம் நல்ல சாய்ஸ்தான். வெகுசில படங்கள்தான் சரியா போகலை. சில பாடி லேங்குவேஜ் ரொம்பக் கஷ்டம். மோகன்லால் சாருடைய நிறைய படங்களை தெலுங்குல ரீமேக் பண்ண கேட்டாங்க. 'என்னால முடியாது'னு சொல்லிட்டேன்"

டோலிவுட்ல சீனியர் நடிகர் நீங்க. உங்க ஆடியன்ஸ் 'குரு' மாதிரி நீங்க நடிக்கிற சீரியஸான படத்தையும் ஏத்துக்கிறாங்க, 'F2' மாதிரி ஜாலியான படத்தையும் ஏத்துக்கிறாங்க. உங்களுக்கு இருக்கிற இந்த ப்ளஸ் பத்தி நினைச்சதுண்டா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"நான் அதிர்ஷ்டசாலினுதான் சொல்லணும். ஒவ்வொரு நாளும் ஆடியன்ஸுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருக்கணும். ஆரம்பத்துல நிறைய காதல் கதைகள்ல நடிச்சுட்டு இருந்தேன். 'தர்மசக்ரா', 'கணேஷ்'னு ஆக்‌ஷன் கதைகள் பண்ணேன். 'சங்ராந்தி' (ஆனந்தம்), 'பவித்ர பந்தம்' ('பிரியமானவளே') மாதிரி 'ஃபேமிலி சப்ஜெக்ட், 'சுந்தரகாண்டம்', 'அபாய்காரு' மாதிரி காமெடி கதைகள்னு எல்லா ஜானரும் ட்ரை பண்ணிட்டேன். எல்லாத்துக்குமே மக்கள்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போ நான் அதிர்ஷ்டசாலிதானே?"

சென்னையில டான் பாஸ்கோ ஸ்கூல், லயோலா காலேஜ்ல படிச்சபோது மறக்கமுடியாத விஷயங்கள் பத்திச் சொல்லுங்க?

"சென்னையில இருந்த நாள்கள் என் வாழ்க்கையில ரொம்ப சுவாரஸ்யமானது. நான் ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடன்ட். நாங்க ஒரு பத்துப் பசங்க எப்போவும் கேங்கா சுத்துவோம். கடைசி பென்ச்லதான் உட்காருவோம். படிக்கிறதைவிட ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். ஸ்கூல்ல ஹாக்கி, வாலிபால்னு எல்லா விளையாட்டுலயும் நான்தான் கேப்டன். ஸ்கூலுக்கு வெளியே மாங்காய் கடை வெச்சிருக்கவன், ஐஸ் விக்குற அனீஃபா, கேன்டீன் சண்முகம் இவங்க எல்லாம் என் நண்பர்கள், வாழ்க்கையில மறக்கமுடியாதவர்கள். எப்போ ப்ரேக் விட்டாலும் மாங்காய் கடையில என்னைப் பார்க்கலாம். அதே மாதிரி லயோலா காலங்கள் ரொம்ப முக்கியமானது. வாழ்க்கையில என்ன பண்ணப்போறோம்னு குழப்பத்துல இருந்த நாள்கள். அப்பொல்லாம் சினிமா பத்தி யோசிச்சதே இல்லை. படிச்சுட்டு இருந்தப்ப என்னை முதல்ல நடிக்கக் கேட்டது பாரதிராஜா சார்தான். அப்ப எனக்கு அமெரிக்கா போகணும்கிறதுதான் எண்ணம். அதனால நடிக்கலை. லயோலா ரொம்ப சாஃப்டான காலேஜ்; நான்தான் கொஞ்சம் வேற மாதிரி. அந்த டைம்ல பச்சையப்பா காலேஜ் பசங்கதான் வேற லெவல்ல இருப்பாங்க. லயோலா பின்னாடி ரயில்வே ட்ராக்கிட்ட லயோலா சார்பா நாங்க கொஞ்ச பேரும் பச்சையப்பா சார்பா அவங்க கொஞ்ச பேரும் சண்டைக்கு ரெடியா இருந்தோம். அப்புறம் பிரின்சிபல் வந்து தடுத்து நிறுத்திட்டாங்க. இந்த மாதிரி பல முரட்டுச் சம்பவங்கள் இருக்கு."

சென்னையில விரும்பிப் போய் சாப்புடுற இடம் எது?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"தினமும் வாணி மஹால்கிட்ட சுண்டல் கடையில ஆஜராகிடுவோம். பாண்டி பஜார்ல ஒரு சமோசா கடை இருக்கும். சமோசா வாங்குறதுக்குனு அம்மா தனியா காசு கொடுத்து அனுப்புவாங்க. குட்டி குட்டி சமோசாவா 40 வாங்கிட்டு, வர வழியிலேயே நானும் அண்ணனும் காலி பண்ணிடுவோம். சைக்கிள்லதான் சென்னையைச் சுத்துவோம். பாம்குரோவ் ஹோட்டலுக்கு டிபன் சாப்பிட்டு, ப்ளூ டைமண்ட் தியேட்டருக்குப் போயிடுவோம். காலேஜ் கட் அடிச்சுட்டு சஃபயர் தியேட்டருக்குப் படம் பார்க்கப்போறது அப்போ செம த்ரில். அதுல லவ்வர்ஸ் தொல்லைகள் வேற. கஸினோ தியேட்டர்ல இங்கிலீஷ் படம், சாந்தி தியேட்டர்ல தமிழ்ப் படம், சோமசுந்தரம் க்ரவுண்ட், ராமசந்திரா க்ரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடுறதுனு ஒரே ஜாலிதான்."

ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ட்விங்கிள் கண்ணா, தபு, கத்ரீனா கைஃப்னு நிறைய பாலிவுட் ஹீரோயின்கள் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தது உங்க படம் மூலமாதான். இதை எப்படி பார்க்குறீங்க?

``இதெல்லாம் பிளானிங் கிடையாது. புது ஹீரோயின் இருந்தா ஃப்ரஷ்ஷா இருக்கும், இதுவரை பார்க்காத ஜோடியா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சுதான் நம்ம ப்ரொடக்‌ஷன்ல இருந்து தேட ஆரம்பிப்பாங்க. அப்படி மும்பைக்குப் போனா நிறைய கான்டாக்ட் கிடைக்கும்ல, அப்படிதான் எல்லோரும் அமைஞ்சாங்க. அவங்க எல்லோரும் என் படத்துல நடிச்சுட்டு அங்க சக்சஸ்ஃபுல் பர்சனா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்."

'கலியுக பன்டவுலு'தான் உங்களுக்கும் குஷ்புவுக்கும் அறிமுகப் படம். முதல் பட ஹீரோயின்னு குஷ்பு மீது கூடுதல் நட்பு இருக்கா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"எத்தனை படம் பண்ணாலும் முதல் படம் எப்பவும் ஸ்பெஷல்தான். வேற மாநிலத்துல இருந்து வந்திருந்தாலும் அவங்க செம ஷார்ப். மொழியைச் சீக்கிரம் கத்துக்கிட்டு, அதோட எமோஷன்களைப் புரிஞ்சுக்கிட்டு சூப்பரா நடிக்கிற நடிகை. அதனாலதான் இத்தனை வருஷம் லைம்லைட்லயே இருக்காங்க. ரெண்டு பேரும் முதல்முதல்ல 'ஆக்‌ஷன்', 'கட்' கேட்டது அந்தப் படத்துலதான். நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் குஷ்பு எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷல்தான்."

உங்க ரசிகர்கள் பத்தி?

"'சினிமா எங்களுக்குத் தொழில். அது மூலமா நாங்க உங்களை என்டர்டெயின் பண்றோம், அவ்ளோதான். 'உங்க படிப்பை விட்டுடக்கூடாது, நமக்காக இருக்கிற குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும்'னு ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருப்பேன். நம்ம மேல இருக்கிற பிரியத்துல எதாவது ஓவர் டூயிங் பண்ணா, அதை ஊக்குவிக்கமாட்டேன். ரசிகர்களுடைய ஆதரவுதான் இந்தளவுக்கு நான் வளர்ந்திருக்க காரணம். அவங்க இல்லைனா நாங்க இல்லை. ஆனா, அவங்க கரியரும் ரொம்ப முக்கியம்ல. என்னுடைய நிறைய ரசிகர்கள் சமூகத்துக்குத் தேவையான நல்ல விஷயங்களைப் பண்ணிட்டு இருக்காங்க. அதெல்லாம் எனக்குப் பெருமையாதான் இருக்கு. இருந்தாலும் அவங்க குடும்பத்தை முதல்ல நல்லா கவனிச்சுக்கணும்னு என் ரெக்வெஸ்ட்."

பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன், ரெக்கார்ட்ஸ் இந்த மாதிரி எந்த விஷயத்திலும் நீங்க கவனம் செலுத்தாதது மாதிரி இருக்கே?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"இந்த பாக்ஸ் ஆபீஸ், ரெக்கார்ட்ஸ் மேல எல்லாம் எனக்குப் பெருசா ஆர்வமில்லை. எல்லா ரெக்கார்டும் என்னைக்காவது ஒருநாள் முறியடிக்கப்படத்தான் போகுது. நம்ம நடிக்கிற படங்கள் ஒரு பெஞ்ச் மார்க்கா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லை. அதுக்குனு ஒவ்வொரு படத்துக்கும் ரெக்கார்ட்ஸ் பின்னாடி ஓடுறதுல எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய சில படங்களும் நிறைய சாதனைகள் புரிஞ்சிருக்கு. அதைத் தயாரிப்பாளர் பார்த்துக்குவாங்க. இது முழுக்க முழுக்க பிசினஸ்தான். இதுக்குள்ள நான் வந்தா எனக்குதான் தேவையில்லாத ப்ரஷர், டென்ஷன்."

உங்க கரியர் ஆரம்பத்துல உங்களுக்கான இமேஜ் எப்படி இருக்கணும்னு நினைச்சீங்க? இப்போ உங்களுக்கான இமேஜ் எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?

"இத்தனை வருஷத்துல நான் எனக்கான இமேஜ் பத்தில்லாம் யோசிச்சதில்லை. அதுதான் என் ப்ளஸ்னு நினைக்கிறேன். படம் நல்லாயிருந்தா போய் பார்க்குறோம், இல்லைனா இல்லை. அவ்ளோதான். நமக்கு இப்படி ஒரு இமேஜ் இருக்கு, அப்போ இந்த மாதிரி கதைகள்தான் பண்ணணும்னு நினைச்சு கதைக்கேட்டுட்டு இருந்தா தேவையில்லாத ப்ரஷரை ஏத்திக்கிற மாதிரி. எல்லா ஜானர் படங்களும் பண்ணிட்டேன். அப்போ எனக்கு என்ன இமேஜ் இருக்குனு எனக்கே தெரியலையே. மறுபடியும் சொல்றேன், சினிமா ஒரு பிசினஸ். என்னைப் பொறுத்தவரை, கதை பிடிச்சிருந்தா பண்ணிடணும். நமக்கு இப்படியொரு இமேஜ் இருக்கு, அப்போ இந்த மாதிரி படம் பண்ணா நல்லாயிருக்குமானு யோசிச்சுட்டு இருக்கக்கூடாது. வொர்க் ஆகுமா ஆகாதானு இறங்கிப்பார்த்தால்தானே தெரியும்?"

கமல் கூட 'உன்னைப்போல் ஒருவன்' தெலுங்கு வெர்ஷன்ல நடிச்சுட்டீங்க. ரஜினிகூட சேர்ந்து நடிக்கணும்னு தோணியிருக்கா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"அது எப்படி தோணாம இருக்கும்? கமல் சார்கூடவே அந்தப் படத்துல ஒரேவொரு காம்பினேஷன் சீன்தான் இருக்கும். ஆனா, ரஜினி சார்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பே அமைஞ்சதில்லை. ரஜினி சாரையும் என்னையும் வெச்சு யாராவது ஒரு சூப்பர் கதை எழுதுங்க. அவர் அரசியல் பக்கம் போயிட்டார்னா, அப்புறம் சான்ஸ் சுத்தமா கிடைக்காது. எப்படியாவது அவர்கூட சேர்ந்து ஒரு படம் நடிச்சிடணும்பா."

டிரெண்டுக்குத் தகுந்த மாதிரி ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம்னு சீக்கிரம் மாத்திடுறீங்களே! எப்படி?

"ஸ்கூல், காலேஜ்ல இருந்தே அப்படிதான். எல்லோரும் ஒரு இடத்துல துணி வாங்குனாங்கன்னா, நான் நிறைய பக்கம் அலைஞ்சு திரிஞ்சு வித்தியாசமா டிரெண்டா எதாவது வாங்கிட்டு வருவேன். காலேஜ் படிக்கும்போது வித்தியாச வித்தியாசமான ஜீன்ஸ் அறிமுகப்படுத்துறது நான்தான். சின்னவயசில இருந்தே ஃபேஷன்ல ரொம்ப ஆர்வம். அமெரிக்காவுல வேற படிச்சதுனால அந்த ஊர் டிரஸிங் சென்ஸும் வந்திடுச்சு. அமெரிக்காவுல இருந்து நம்ம ஊருக்குத் திரும்பி வரும்போது ஷார்ட்ஸ், கடுக்கன் எல்லாம் போட்டுட்டு வந்தேன். எல்லோரும் 'யாருடா இவன்'னு பார்த்தாங்க. இப்போ என்ன டிரெண்ட் போயிக்கிட்டு இருக்குனு கவனிச்சு நம்மளை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்."

உங்களுடைய ஆன்மிக ஆர்வம் பத்தி ரஜினிகாந்த்கிட்ட பேசியிருக்கீங்களா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"நிறைய பேசியிருக்கேன். நாங்க ரெண்டு பேரும் பேசுனா இதைப் பத்திதான் இருக்கும். அவருடைய ஐடியாலஜியும் என் ஐடியாலஜியும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். எல்லோருடைய வாழ்க்கையிலயும் ஒரு கால் வரும். அந்த கால் வர்றப்போ பஸ் ஏறிடணும். அந்த நேரத்துல பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா வாழ்க்கையவே மிஸ் பண்ணிடுவோம். வாழ்க்கையில எப்போவும் ரொம்ப கவனமா இருக்கணும். வாழ்க்கை அனுபவத்துல இருந்து நிறைய பாடம் கத்துக்கணும். நம்ம யார்னு நம்ம முதல்ல தெரிஞ்சுக்கணும். அப்போதான் நம்மளை நம்ம ஒரு பலசாலியா உணர முடியும். யாராலும் நம்மளை அழிக்க முடியாது. இயல்பு வாழ்க்கையையும் ஆன்மிக வாழ்க்கையையும் ஒரே வேகத்துல வெச்சுக்கணும். அதுக்குனு நான் சந்நியாசி வழியில போறேன்னு நினைச்சுக்க வேண்டாம். குடும்பத்தைப் பார்த்துக்கங்க, சந்தோஷம், துக்கம் எல்லாம் அனுபவிங்க இருந்தும் மன அமைதியை நோக்கியோ இறையாண்மையை நோக்கியோ ஒரு தேடல் இருக்கணும்னு சொல்றேன் அவ்ளோதான்."

ஆன்லைன் தளங்கள் சினிமாவுக்குப் போட்டியா இருக்கும்னு சொல்றாங்க. அதை எப்படிப் பார்க்குறீங்க?

"மாற்றங்கள் வந்துக்கிட்டேதான் இருக்கும். அதை நம்ம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். ஒவ்வொண்ணுக்கும் காலம் வரும். அது மாதிரி இது டிஜிட்டல் ப்ளாட்ஃபார்முக்கான காலம். அதோட தாக்கம் இனி வரும் காலங்கள்ல அதிகமாகத்தான் இருக்கும். அதைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நம்மளை அப்டேட் பண்ணிக்கணும். நானும் அந்த ப்ளாட்ஃபார்ம் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கேன்."

பத்து வருஷத்துக்கு முன்னாடி மற்ற மொழிப் படங்கள் பார்க்கிறதுக்கான வாய்ப்பு ரொம்ப குறைவு. ஆனா, இப்போ எல்லா மொழிப் படங்களையும் மக்கள் பார்த்துடுறாங்க. இப்படியான சூழல்ல ரீமேக் கலாசாரம் எப்படி வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறீங்க?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"ரொம்ப சரியான கேள்வி. `இந்தப் படத்துடைய ஒரிஜினல் வெர்ஷன் பார்த்துட்டோமேனு அப்புறம் ஏன் இந்தப் படத்தைப் பார்க்கணும்'னு சிலர் நினைப்பாங்க. அதனால கண்டிப்பா பிசினஸ்ல சின்னதா பாதிப்பு இருக்கதான் செய்யும். அந்தப் படத்துமேல எப்போ மினிமம் கியாரன்டி வருதுன்னா, ஏற்கெனவே பயங்கர ஹிட்டான கதையில நம்ம ஊர் ஹீரோ எப்படி நடிச்சிருக்கார்னு பார்க்கிறதுக்காக மக்கள் படம் பார்க்க வரும்போதுதான். 'இறுதிச்சுற்று' படத்தை தமிழ், இந்தினு ரெண்டு மொழியிலும் மக்கள் பார்த்துட்டாங்க. அப்புறம்தான் 'குரு'னு ரீமேக் பண்ணி நடிச்சேன். ஏற்கெனவே மேடி நடிச்சு பார்த்த மக்கள், நான் எப்படி பண்ணியிருக்கேன்னு பார்க்க வந்தாங்க. 'குரு' எல்லோருக்கும் லாபம்தான், நஷ்டமாகலை. 'எல்லோரும் பார்த்திருப்பாங்க அதனால படம் ஓடாது'னு நினைக்கிறது தவறு. படத்தை ரீமேக் பண்ணணும்னு முடிவு பண்ணபோதே பிசினஸ் ரீதியா என்னென்ன சவால் இருக்குனு முதல்ல பார்த்திடணும். போதுமான வசூலும் பாராட்டுகளும் கிடைச்சா போதும். அதுக்கு மேல வந்தா அது முழுக்க போனஸ்தான்."

80ஸ் ரீ யூனியன் பத்தி?

"இந்த மாதிரி வருஷத்துக்கு ஒருமுறை ஃப்ரண்ட்ஸ் நாங்கெல்லாம் மீட் பண்ணிக்கிறோம். இதை ஒருங்கிணைக்கிறது சாதாரண விஷயமல்ல. சுஹாசினி, ரேவதி, பூர்ணிமா, குஷ்பு இவங்க எல்லாம்தான் ஒவ்வொரு வருஷமும் பிளான் பண்ணி எல்லோர்கிட்டேயும் பேசி ஃபிக்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்குதான் நாங்க எல்லோரும் நன்றி சொல்லணும். எல்லோரும் பிஸியா ஓடிக்கிட்டு இருக்கோம். அப்போ இந்த மாதிரி ஒரு சந்திப்புதான் எங்களை ரிலாக்ஸ் பண்ண வெச்சு பழைய நினைவுகளுக்குக் கூட்டிட்டுப் போகுது"

சிரஞ்சீவி, பவன் கல்யாண் மாதிரி அரசியல் ஆர்வம் வந்திருக்கா?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"இல்லவேயில்லை. அப்பா கொஞ்ச காலம் அரசியல்ல இருந்து சில விஷயங்கள் பண்ணார். ஆனா, எனக்கு அரசியல் ஆர்வம் வந்ததேயில்லை. அது எனக்கான இடமில்லைனு நினைக்கிறேன். அரசியல்வாதியா இருக்கிறதும் சாதாரணம் கிடையாது. நிறைய அரசியல்வாதிகள் என்னைக் கவர்ந்திருக்காங்க. அவங்களை நான் மதிக்கிறேன். சிரஞ்சிவிகாரு, பவன் கல்யாண்காருவுக்கு அரசியலுக்குப் போகணும்னு எழுதியிருக்கு. எனக்கு அப்படியில்லை"

விவேகானந்தர் பயோபிக்ல நடிக்கணும்னு உங்களுக்கு ரொம்ப ஆசையாமே!

"ஆமா. ரொம்ப ஆசை. டிவியிலோ வேற மொழியிலோ யாரோ அதை எடுக்கிறாங்கனு தகவல் வந்தது. அந்தக் குழப்பத்துல பாதியில வொர்க் பண்ணாம விட்டுட்டோம். இன்னும் கொஞ்சம் ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ணிட்டு அப்புறம் அரம்பிக்கலாம்னு நினைச்சோம். அதுல கொஞ்சம் தாமதமாகிடுச்சு. நான் முன்னாடி சொன்ன மாதிரி, எல்லாமே மேல இருக்கிறவன்தான் முடிவு பண்ணுவான். எனக்கு இருந்த ஆசையை அவன்கிட்ட பதிவு பண்ணி வெச்சுட்டேன். அவன் நினைச்சா நடக்கும். இல்லைனா, நடக்காமல்கூட போகும். நிறைய இடங்கள்ல நம்ம ஆசைப்படுறதும் நமக்கு கிடைக்கிறது வெவ்வேறுதானே? அந்த இயற்கையைப் புரிஞ்சுக்கணும்"

அப்பா ராமநாயுடு, அண்ணன் சுரேஷ்பாபு பத்தி?

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

"ஒரு மகன் தனக்கு நல்ல அப்பா வேணும்னு கேட்கமுடியது. ஆனா, எனக்கு கிடைச்சார். அவ்ளோ வேலைகள் இருக்கும். பெரிய பெரிய ஸ்டார்ஸ் வெச்சு படங்கள் தயாரிச்சுட்டு இருப்பார். இருந்தாலும் டின்னருக்கு வீட்டுக்கு வந்து எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவார். அதைதான் இப்போ அண்ணனும் நானும் ஃபாலோ பண்றோம். ரொம்ப நேர்மையான பரிசுத்தமான மனிதர். அவர் தயாரிச்ச படங்களுடைய ரிசல்ட் பாசிட்டிவோ நெகட்டிவோ அதைச் சீக்கிரமே ஏத்துக்கிட்டு, 'சரி வாங்க... அடுத்த வேலைக்குப் போவோம்'னு ஓடிக்கிடே இருக்கிறவர். வெற்றி தோல்வியை எப்படி அணுகணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். நம்ம பிசினஸ் நல்லாயிருந்தா மட்டும் போதாது, சினிமா இண்டஸ்ட்ரியில வேலை செய்யுற எல்லோரும் நல்லாயிருக்கணும்னு நினைப்பார். யாராவது படம் ஃப்ளாப் ஆகி படம் கிடைக்காமல் இருந்தாங்கன்னா, 'வா இன்னொரு படம் பண்ணி ஜெயிச்சுக்காட்டு'னு அவங்களுக்குப் படம் கொடுத்து தூக்கிவிட நினைப்பார். எல்லா மொழியிலும் எல்லா ஹீரோவையும் வெச்சு படம் பண்ணணும்னு அவருக்கு ஆசை. அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்கள்தான் என்னையும் அண்ணனையும் இப்போ இயங்க வைக்குது. அதே மாதிரி இப்படியொரு அண்ணன் கிடைச்சதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். இப்போவரை எனக்கு எல்லாமே அண்ணன்தான். இந்த பிசினஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நிறைய பேர் 'நீங்க எப்போ தனியா பிசினஸ் பண்ணப்போறீங்க'னு கேட்பாங்க. 'அதுல எனக்கு ஆர்வம் இல்லை. அண்ணன் இருக்கார் அவர் பார்த்துப்பார்'னு சொல்லிடுவேன். என் வேலை நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து அதுல நல்லா நடிக்கிறது அவ்ளோதான். அதை நான் சரியா பண்ணணும்னு நினைக்கிறேன்"

இந்த 35 வருஷ சினிமா பயணத்துல நிறைவேறாத ஆசைனு எதாவது இருக்கா ?

"அப்படி எதுவுமில்லை. ஒவ்வொரு நிமிஷமும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்னு நினைக்கிறேன். சினிமாவுக்கு எதிர்பாராத விதமாதான் வந்தேன். ஆனா, எனக்கு கிடைச்சது, கிடைச்சுட்டு இருக்கிறது எல்லாத்தையும் பார்க்கும்போது நான் அதிர்ஷ்டசாலினு நினைச்சுக்குவேன். நான் படிச்ச படிப்புக்கு இது எல்லாமே எனக்கு போனஸ்தான்" என்ற பதிலுடன் பேட்டி முடிந்ததும் நாம் கொண்டுவந்த கடலைமிட்டாய், காராசேவு ஆகியவற்றை ரசித்து சாப்பிட்டு ஷூட்டிங்கிற்குத் தயாரானவரிடம் பை சொல்லி விடைபெற்றோம்.

அடுத்த கட்டுரைக்கு