Published:Updated:

நடிகர் சாய்தரம் தேஜ்... டயட்டில் இருந்ததுதான் மோசமான பைக் விபத்துக்குக் காரணமா?

தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ்
தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ்

கடந்த வெள்ளிக்கிழமையன்று, தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் விபத்துக்குள்ளான செய்தி தெலுங்கு சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சாய்தரம் தேஜ் Triumph RS என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கியிருந்தார். சாலையில் அவர் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த மண்ணால் சறுக்கி வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த சாய்தரம் தேஜ், சுயநினைவில்லாமல் இருந்திருக்கிறார். அதனைப் பார்த்தவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பின்னர் ஜூப்லி ஹில்ஸ் அப்பலோவில் சேர்த்துள்ளனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அவருடைய தோள்பட்ட எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. பலத்த காயம் இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் சொல்கின்றனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவருக்கான சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இருந்து அதிகமாக பயணித்ததால், மூன்று பிரிவின் கீழ் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருகிறது. அந்த விபத்து நிகழ்ந்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ்
தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ்

யார் இந்த சாய்தரம் தேஜ்?

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தங்கை விஜயதுர்காவின் மகன்தான் சாய்தரம் தேஜ். 'பிள்ளா நுவு லேனி ஜீவிதம்' என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் முதலில் ஒப்பந்தமாகி நடித்தது 'ரே' என்ற படத்தில்தான். பல ஹிட் படங்களை கொடுத்த ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் 'Subramanyam for Sale' என்ற படத்தில் நடித்தார். படம் பேசப்பட்டு தன்னுடைய பெயரை தெலுங்கு மக்கள் மத்தியில் பதிய வைத்தார்.

'சுப்ரீம்', 'திக்கா', 'வின்னர்', 'ஜவான்' என அடுத்தடுத்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து தனக்கான ரசிகர்களை உருவாக்கத் தொடங்கினார். பிறகு, சூப்பர் ஹிட் இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் சாய்தரம் தேஜ் நடித்த 'இன்டெலிஜென்ட்' என்ற படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களாக நடித்ததுதான் காரணம் என அடுத்ததாக, 'தேஜ் ஐ லவ் யூ' என ரொமான்டிக் படத்தில் நடித்தார். அதற்கும் நல்ல வரவேற்பில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர் ஆக்‌ஷன் படங்களாக நடித்தபோது இவரின் ஹியூமர் வொர்க் அவுட்டானது. அதனால், இனி காமெடி படங்களாக நடிப்போம் என்ற இவரது முடிவுக்கு கிரீன் சிக்னல் விழுந்தது. 'சித்ரலஹரி' பயங்கர ஹிட்டாக, அடுத்து நடித்த 'ப்ரதி ரோஜு பண்டகே' படத்தில் காமெடியுடன் சேர்ந்து எமோஷனிலும் கலக்கியிருப்பார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுதான் படம். தாத்தாவாக சத்யராஜ் நடித்திருப்பார்.

முதல் லாக்டெளன் முடிந்து தியேட்டரின் 50% அனுமதி கொடுத்தவுடன் வெளியான படம் 'சோலோ ப்ரதுகே சோ பெட்டர்' என்ற படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, 'ரிபப்ளிக்' என்ற அரசியல் படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து முடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறார் சாய்தரம் தேஜ்

தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜின் பைக்
தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜின் பைக்

இவருக்கு விபத்து ஏற்பட்டது என்பதறிந்தவுடன் இவரின் தாய்மாமன்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என அனைவரும் மருத்துவமனைக்கு உடனடியாக வந்துவிட்டனர். அவ்வப்போது இவரின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். விரைவில் அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது. இருப்பினும் சாய் தரம் தேஜ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

தற்போது அவருக்கு சிகிச்சையளித்துவரும் டாக்டர், ''சாய்தரம் தேஜ் சில வாரங்களாக கடுமையான டயட்டில் சரியாக சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அதனால் அவருடைய உடலில் சரியான எனர்ஜி இல்லை. பைக் ஓட்டிகொண்டிருக்கும்போதே அவருக்கு திடீரென மயக்கமோ, படபடப்போ ஏற்பட்டிருக்கலாம். அதனால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம்'' எனச் சொல்லியிருக்கிறார்.

மீண்டு வாருங்கள் சாய்தரம் தேஜ்!

அடுத்த கட்டுரைக்கு