Published:Updated:

கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!

தால்லிவுட்
பிரீமியம் ஸ்டோரி
தால்லிவுட்

நம்ம ஊர் ‘முதல்வன்’ படத்தையே கொஞ்சம் டி.வி-க்காக அப்படியே நாடகமாக்கினால் எப்படி வருமோ அப்படி ஒரு கண்றாவியான மேக்கிங்கோடு இந்தப் படம் இருக்கிறது.

கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!

நம்ம ஊர் ‘முதல்வன்’ படத்தையே கொஞ்சம் டி.வி-க்காக அப்படியே நாடகமாக்கினால் எப்படி வருமோ அப்படி ஒரு கண்றாவியான மேக்கிங்கோடு இந்தப் படம் இருக்கிறது.

Published:Updated:
தால்லிவுட்
பிரீமியம் ஸ்டோரி
தால்லிவுட்

தால்லிவுட்... ஏதோ கோபமாய்த் திட்டுவதுபோல உச்சரிப்பில் தோன்றும் இந்த வார்த்தைதான் வங்க தேசத்தின் உயிர்மூச்சு. பங்களாதேஷி ‘பெங்காலி' மொழியில் ரிலீஸ் ஆகும் படங்களைத்தான் வங்க தேசத்தில் இப்படி அழைக்கிறார்கள். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ரிலீஸாகும் பெங்காலிப் படங்களைத் தங்கள் அடையாளமாக்கிக்கொள்ளத் தயக்கம் தோன்றியதன் விளைவே பங்களாதேஷ் என்ற அந்த நாட்டில் ‘தால்லிவுட்' சினிமாக்கள் தோன்றின.

இந்தியாவின் கொல்கத்தாவில் எடுக்கப்படும் கவித்துவமான பெங்காலி சினிமாக்கள் ஆரம்பத்திலிருந்தே வங்க தேசத்தவர்களுக்குக் கொஞ்சம் அலர்ஜிதான். இவ்வளவுக்கும் உலக கவனத்தை ஈர்த்த பல பேரலல் சினிமாக்களை பங்களாதேஷின் பெங்காலி சினிமாக்கள் தந்திருக்கின்றன. ஆனாலும், கொஞ்சம் பொருளாதாரத்தில் திணறும் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம், பொழுதுபோக்கு அம்சம் சினிமாதான். சினிமாக்களில்கூட மென் சோகம் இழையோடுவதை அவர்கள் விரும்பவில்லை. விளைவு... அதிரடி ஆக்‌ஷன், அதிர்வேட்டு காமெடி என மசாலா சினிமாக்களைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். கன்டென்ட்டுக்கு இருக்கவே இருக்கு இந்திய சினிமாக்கள்.

பங்களாதேஷின் தலைநகர் தாக்காவில் தால்லிவுட் சினிமா தோன்றியது. 1956-ல் முதல் சினிமா எடுக்கப்பட்டாலும் 70களில் ஆரம்பித்து இன்றுவரை அதிரடி மசாலாப் படங்களை எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அதிக ரீமேக் படங்களை தமிழ், தெலுங்கிலிருந்து சுட்டு எடுக்க ஆரம்பித்து தால்லிவுட்டை வளர்த்தெடுத்துவருகிறது பங்களாதேஷ்.

அதிலும் தமிழ்ப்படங்கள் என்றால் எந்த ரீமேக் ரைட்ஸும் வாங்காமல் அல்வா சாப்பிடுவதுபோல அப்படியே சாப்பிட்டு விடுகிறார்கள். லோ பட்ஜெட் மேக்கிங் என்றாலும் கலெக்‌ஷனில் வாரிக்குவித்து தால்லிவுட் செழிப்பாகவே இருக்கிறது.

இன்றுவரை தால்லிவுட் இண்டஸ்ட்ரி உயிர்வாழ்வதே நம்ம ஊர் பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களை ரீமேக் பண்ணித்தான். பாலிவுட் ரீமேக்குகளில் அவர்கள் ஆரம்பத்திலேயே பிரச்னைகளைச் சந்தித்தனர். மும்பையிலிருந்து தாக்காவிற்கு படத்தின் தயாரிப்பாளர் ஃப்ளைட் ஏறிப்போய், ‘‘இதெல்லாம் ரொம்பத் தப்புங்க... ஷேர் கொடுங்க!'’ என உரிமை கொண்டாடினார்கள். அதனால் அவர்கள் கவனம் முழுதும் தமிழ் சினிமா மீதுதான். ஏனென்றால், இங்கு பலருக்கு அப்படியொரு இண்டஸ்ட்ரி இருப்பதே தெரியாது. சமீப காலமாக தால்லிவுட் மார்க்கெட்டைக் காப்பாற்றுவதே நம்ம ஊர் சினிமாக்கள் தான். தால்லிவுட் வரலாற்றில் ரீமேக் ஆகி மெகா ஹிட்டடித்த தமிழ்ப் படங்களைப் பார்ப்போமா..?

ஒன்னோ மனுஷ்

அந்த ஊர் தனுஷ், காசி மருஃப் நடித்த இந்தப் படம் நம்ம ஊர் ‘காதல் கொண்டேன்’ படமேதான். இந்தப் படத்தின் ஹீரோ அதன்பிறகு அந்த நாட்டின் தேசிய விருதெல்லாம் வாங்கினார் என்றால் கொஞ்சம் தொண்டையை அடைக்கத்தான் செய்கிறது. ஆனால், படத்தின் பாடல் கரோக்கியை வைத்தே கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் யுவனின் இசையைக் காப்பியடித்ததை எல்லாம் மன்னிக்கவே முடியாதுய்யா!

மினிஸ்டர்

நம்ம ஊர் ‘முதல்வன்’ படத்தையே கொஞ்சம் டி.வி-க்காக அப்படியே நாடகமாக்கினால் எப்படி வருமோ அப்படி ஒரு கண்றாவியான மேக்கிங்கோடு இந்தப் படம் இருக்கிறது. ஹீரோவாக நடித்த மன்னாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற சினிமா இது என்று சூடமேற்றிச் சத்தியம் செய்தாலும் நம்ப முடியவில்லை. நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம். ஷங்கர் பார்த்தால் ரத்தக்கண்ணீர் விடுவார்.

அப்பஜன்

தமிழில் 1996-ல் நெப்போலியன்- ரஞ்சிதா நடித்து சுமாராக ஓடிய ‘முஸ்தபா’ என்ற படத்தை 2001-ல் ரீமேக் பண்ணி பெரிய ஹிட்டைக் கொடுத்திருந்தார்கள். இந்தப் படத்தின் ஹீரோ மன்னாவை மெகா ஸ்டார் என்று தால்லிவுட்டே கொண்டாட ஆரம்பக்காலப் படமான அப்பஜன் ரொம்பவே உதவியது. ‘எது ராசா என்கிட்ட ஹெவியா லைக் பண்ண வெச்சுச்சு?’ என நெப்போலியனே கேட்டிருப்பார்.

ஹோத்தட் ப்ரிஸ்ட்டி

பங்களாதேஷின் ஹீரோ பிர்தௌஸ் அகமது நடித்த இந்தப் படம் 1998-ல் ரிலீஸானது. ‘காதல் கோட்டை’யைத்தான் இந்தப் பெயரில் கொலையாய்க் கொன்று புதைத்திருந்தார்கள். தமிழில் ‘ராஜா’, ‘காதல் சடுகுடு’ போன்ற படங்களில் நடித்த பிரியங்கா த்ரிவேதிதான் தேவயானியாக நடித்திருந்தார். ஒரிஜினல் படத்தின் க்ளைமாக்ஸில் அஜித் சொதப்பினார் என்று நாம் நினைத்துக்கொண்டு இந்தப்படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்தால் அஜித்துக்கு நாம் கோயில் கட்டலாம். பிர்தௌஸ் அப்படியொரு நடிப்பை சேற்றோடு வாரி நம் முகத்தில் அப்பியிருப்பார்.

பலப்பி கொதாய்

கொஞ்சம் பழைய படமென்றால் நமக்கெல்லாம் நாஸ்டாலஜிக் உணர்வைத் தரக்கூடியது கமலின் ‘மகளிர் மட்டும்' படம் தான். ‘பலப்பி கொதாய்' என்ற பெயரில் இதை அங்கே உல்டாவாக்கி எடுத்திருந்தார்கள். பங்களாதேஷின் குஷ்பூவான ஷபானா நடிப்பில் 1997-ல் ரிலீஸான இப்படம் ஹிட்டானதோடு விருதுகளையும் வாரிக் குவித்தது.

கேப்டன் கான்

‘உன் வேகம்... என் சோகம்' என ஷாகிப் கானிடம் தாராளமாகச் சொல்லலாம். சூர்யா, விஜய் படங்களை ரிலீஸான அடுத்த 6 மாதங்களுக்குள் சுடச்சுட ரீமேக் செய்து பங்களாதேஷின் நம்பர் 1 நடிகராக பவனி வருகிறார் ஷாகிப் கான். இன்னிய தேதியில் இவர்தான் அங்கு சூப்பர் ஸ்டார். அப்படி இவர் வேகமாக ஜெராக்ஸ் காப்பி செய்த படம் ‘அஞ்சான்.' அங்கே ‘கேப்டன் கான்' என்ற பெயரில் ரீமேக்கில் ஹிட்டடித்தது. பாலிவுட் கிங் கான் ஷாருக் கான் போல ‘தால்லிவுட்'டின் கிங் கான் இவர்தான். எஸ்.கே என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. ‘அஞ்சான்’ மட்டுமல்ல, சுடச்சுட விஜய்யின் ‘வில்லு' படத்தையும் ரீமேக் செய்து ஹிட்டடித்த ஆச்சர்யமான மனிதர்தான் பங்களாதேஷின் டார்லிங் ப்ரின்ஸ் எஸ்.கே!

பாலிவுட் படங்கள் பங்களாதேஷில் ரிலீஸாகக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவர் இவர். நிறைய காப்பி படங்களில் கிரெடிட் கொடுக்காமல் நடிப்பதாக இவரைப் பற்றி மீடியாக்கள் செய்திகள் வெளியிட, ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலினிடம் ரீமேக் உரிமையை முறையாக வாங்கி வெளியிட்ட ஒரே படம் ‘ஷிகாரி.' இதன் ஒரிஜினல் தமிழில் வந்த ‘ஆதவன்'!

இவர் கணிப்பு பொய்க்கவில்லை. ‘ஆதவன்' பங்களாதேஷில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடி மாஸ் ஹிட்டடித்தது.

பங்களாதேஷில் கிட்டத்தட்ட 1,200 தியேட்டர்கள் இருக்கின்றன. அங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் படங்கள்தான். சமீபத்தில் ‘ராஜா ராணி', ‘தெறி' எல்லாம் அங்கு ரீமேக் செய்யப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு கலைவெறியோடு இருக்கிறார்கள் என்று!

கொஞ்சம் மெதுவா போங்கய்யா!

கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!
கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!
கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!
கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!
கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!
கோலிவுட்டால் பிழைக்கும் தால்லிவுட்!