Published:Updated:

`அடுத்தடுத்து நான்கு படங்கள்..!' - அதிரடி ஆட்டத்தில் `பவர்ஸ்டார்' பவன் கல்யாண்

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

சினிமாவுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்திருந்த பவன் கல்யாணிடமிருந்து அடுத்தடுத்து நான்கு படங்களின் அப்டேட் வந்துள்ளது.

2008-ம் ஆண்டு சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கியபோது அதன் இளைஞரணியான யுவ ராஜ்யத்தின் தலைவராக இருந்தார், சிரஞ்சீவியின் தம்பியும் பிரபல நடிகருமான பவன் கல்யாண். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. பிறகு, சிரஞ்சீவி தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியோடு இணைத்ததில் உடன்பாடு இல்லாத காரணத்தால் கட்சியிலிருந்து வெளியேறி, 2014-ல் ஜன சேனா எனும் கட்சியைத் தொடங்கினார் பவன். அப்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தவர், 2017-ல் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துவிட்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

இவர் நடித்த 'வீரம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கட்டமராயுடு' படத்துக்குப் பிறகு, கொஞ்சம் இடைவெளிவிட்டு த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் 'அஞ்ஞாதவாசி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அதிதீவிரமாகத் தேர்தல் பணிகள், பிரசாரங்கள் என பாலிடிக்ஸ் பக்கமே பிஸியாக இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பவனுக்குச் சாதகமாக அமையவில்லை. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் அதிகக் கவனம் செலுத்த நினைத்து கதைகள் கேட்டு வந்தவரின் கைவசம் இப்போது நான்கு படங்கள்!

இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்ததைப் போல் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இதனை வேணு ஶ்ரீராம் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இவருடன் நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். 'லாயர் சாப்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், அவருக்கு 26-வது படம்.

இதைத் தொடர்ந்து, 'வேதம்', என்.டி.ராமா ராவின் பயோபிக்கான 'கதாநாயகடு', 'மகாநாயகடு', இந்தியில் 'மனிகர்னிகா' உள்ளிட்ட படங்களை இயக்கிய க்ரிஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் தனது 28-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 2012-ல் பவன் கல்யாண் - ஹரீஷ் ஷங்கர் காம்போவில் வெளியான 'கப்பார் சிங்' திரைப்படம் அக்கட தேசத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

இவை தவிர, 'ஜெர்ஸி' பட இயக்குநர் கெளதம் தின்னனூரியிடமும் கதை கேட்டு `ஓகே' சொல்லியிருக்கிறார் பவன் கல்யாண். அடுத்தடுத்த பட அப்டேட்களால் அவரது ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். ஜன சேனா கட்சி, தேர்தலில் தோற்றதால் விரக்தியில் இருந்த ரசிகர்களை இந்த அப்டேட்கள் உற்சாகப்பட வைத்துள்ளன.

'வீரம்' படத்தின் ஓப்பனிங் பாடலில் 'யாரு படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்கதான்...' என வரும் வரிகள் பவனுக்கும் பொருந்தும். பவன் எனும் பவர் ஸ்டார் அங்கே வேற லெவல் மாஸ்! 'ரசிகர்களால் நான்... ரசிகர்களுக்காகவே நான்' என்ற பவனின் திரை தரிசனத்துக்காக பவர் ஸ்டாரு ஃபேன்ஸு ச்சால வெயிட்டிங்..!

அடுத்த கட்டுரைக்கு