Published:Updated:

`இந்தியன் 2' படத்தில் இணைந்த`வெள்ளைப் பூக்கள்’ நாயகன்!

தார்மிக் லீ

ஷங்கர் - கமல்ஹாசன் இயக்கத்தில் வெற்றிகண்ட `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம், தற்போது தயாராகிவருகிறது. பல்வேறு தடைகளைக் கடந்து, படத்துக்கான வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. சுதந்தர தினத்தன்று, படத்தின் போஸ்டர் லுக் வெளியானது.

இந்தியன் 2
இந்தியன் 2

அதிக பொருள் செலவில் தயாராகும் `இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் லஞ்சம் சம்பந்தமான பிரச்னைகளை மையக்கருவாகக்கொண்டு, `இந்தியன்' படம் தயாராகியிருந்தது. படமும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சமகாலத்துக்குக்கூட சரியாகப் பொருந்தும் `கல்ட்' ரக சினிமாவில் இப்படம் இணைந்தது.

விவேக்
விவேக்

ஏற்கெனவே நிறைய கதாபாத்திரங்கள் இதில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், விவேக்கும் இவர்களோடு இணைந்துள்ளார். சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான `வெள்ளைப் பூக்கள்' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கிரைம் - த்ரில்லர் ஜானரில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கினார். இதைத் தொடர்ந்து, 'இந்தியன் 2' படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் விவேக். ஷங்கரின் இயக்கத்தில் ஏற்கனவே பாய்ஸ், அந்நியன், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் விவேக். இப்போதிருக்கும் சூழலில், நாடு அதிகமாக சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னை, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள். இதை மையமாக வைத்துதான் `இந்தியன் 2'வை இயக்கத் திட்டமிட்டுள்ளார், ஷங்கர்.