சினிமா
பேட்டிகள்
ஆன்மிகம்
கட்டுரைகள்
Published:Updated:

சந்தனக்காட்டு சுந்தரிகள்!

நிஷ்விகா நாயுடு
பிரீமியம் ஸ்டோரி
News
நிஷ்விகா நாயுடு

சினிமா

நம் மொழியில் இருந்து கன்னடத்தில் ஏராளமான படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதில், சில படங்கள் பயங்கரமாக ட்ரோல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், இப்போது அந்த ஊர்ப் படங்களை மற்ற மொழியில் ரீமேக் செய்யுமளவுக்குக் கன்னட சினிமா மாறிவருகிறது. கன்னட சினிமாவில் இருந்து பல நாயகிகள் தமிழ், தெலுங்கு எனப் பாப்புலராகி இருக்கின்றனர். அப்படி தற்போது சாண்டல்வுட்டில் இருக்கும் ப்ராமிஸிங் நாயகிகள் இவர்கள்!
சந்தனக்காட்டு சுந்தரிகள்!

ஸ்ரீநிதி ஷெட்டி

மாடலிங் டு சினிமா - இதுதான் ஸ்ரீநிதி ஷெட்டியின் கரியர். அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான இவர், மாடலிங்கில் கலக்கி வந்த சமயத்தில் வந்த வாய்ப்புதான் `கே.ஜி.எஃப்.' இந்திய சினிமா உலகமே திரும்பிப் பார்த்த பக்கா கமர்ஷியல் படம். முதல் படமே பிளாக்பஸ்டராக அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அதில் சில தெலுங்குப் படங்களும் அடங்கும். ஆனால், அவற்றுக்கு நோ சொல்லிவிட்டு, `கே.ஜி.எஃப் 2' படத்தில் நடிக்க கமிட்டானார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு எங்கேயோ இருக்கிறது. `கோப்ரா' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமாக இருக்கிறார். கன்னடம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இறங்கி விளையாட வேண்டும் என்பதுதான் ஸ்ரீநிதியின் ஆசை!

சந்தனக்காட்டு சுந்தரிகள்!

அதிதி பிரபுதேவா

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் அதிதி முக்கியமானவர். ஆரம்ப நான்கைந்து படங்களிலேயே மக்களைக் கவர்ந்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி, த்ரில்லர், ஹீரோயின் சென்ட்ரிக் என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்துப் பரிசோதனை முயற்சி செய்துபார்க்கும் அதிதிக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனது கைவசம் கிட்டத்தட்ட பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். ஹோம்லியாகவும் மாடர்னாகவும் கலக்கி வரும் அதிதி, கன்னட சினிமாவின் நல்வரவு. குறிப்பாக `ஆனா' என்ற படத்தில் சூப்பர்ஹீரோவாக, `5D' படத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவராக, `அன்டோன்டிட்டு காலா' என்ற 90-ஸ் படத்தில் இசைக்கல்லூரி மாணவியாக என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிதி பிரபுதேவாவின் கால்ஷீட் செம பிஸி!

சந்தனக்காட்டு சுந்தரிகள்!

ஆஷிகா ரங்கநாத்

`க்ளீன் அண்ட் கிளியர் ஃபேஸ்' என்ற மாடலிங் போட்டியில் பங்குபெற்று, அதன்வழியே கன்னட சினிமாவை கவனிக்க வைத்தவர். `க்ரேஸி பாய்' படத்தில் அறிமுகமான ஆஷிகா, `மாஸ் லீடர்', `முகுலு நகே', `நாஜு கன்னட மீடியம்' என அடுத்தடுத்து தனக்கு வந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினார்.

இவர் நடித்த `ராம்போ 2' படம் பாக்ஸ் ஆபீஸில் செம கலெக்‌ஷன். தற்போது, `கருடா' எனும் ஆக்‌ஷன் படம், `அவதாரா புருஷா' எனும் காமெடி படம், `O2' எனும் மெடிக்கல் த்ரில்லர், `மதகஜா' எனும் கிராமத்துப் படம் என ஆல்ரவுண்டராக வலம்வருகிறார், ஆஷிகா ரங்கநாத். தமிழில் லைகா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சந்தனக்காட்டு சுந்தரிகள்!

மன்விதா ஹரீஷ்

ஜர்னலிசம் படித்து முடித்தவர் மன்விதா. ரேடியோ ஜாக்கியாக இவர் நடத்திய ஷோக்கள் ஹிட்டாகியிருக்கின்றன. அதிலிருந்து சினிமா வாய்ப்பு வர, அதனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். துனியா சூரி எனும் ஹிட் இயக்குநர்தான் இவரைக் கன்னட சினிமா உலகிற்கு `கெண்டசம்பிகே' படத்தில் அறிமுகப்படுத்தினார். படத்தில் இவரின் தேர்ந்த நடிப்பு கவனிக்கப்பட, அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. மீண்டும் துனியா சூரி இயக்கத்தில் ஷிவ்ராஜ்குமார், பாவனாவுடன் `டகரு' படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் ஹிட். அதன் பிறகு, இவரின் பெயர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. ரேடியோவில் இருந்து வந்ததால் சரளமாகக் கன்னடம் பேசும் ஆற்றல் இவரிடமிருக்கிறது. கர்நாடகாவின் வெவ்வேறு பகுதிகளின் ஸ்லாங்கை அசால்டாகப் பேசுவதில் மன்விதா கில்லி. `சிவா 143', `லவ்' எனும் மலையாளப் படத்தின் கன்னட ரீமேக், `ரெயின்போ', `ராஜஸ்தான் டைரீஸ்' எனப் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

சந்தனக்காட்டு சுந்தரிகள்!

நிஷ்விகா நாயுடு

`பிச்சைக்காரன்' திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான `அம்மா ஐ லவ் யூ' படத்தில், மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் நடித்துக் கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானவர், நிஷ்விகா. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். இதனைத் தொடர்ந்து, `வாசு நான் பக்கா கமர்ஷியல்', `படே ஹுலி', `ராமானுஜா' ஆகிய படங்களில் ரொமான்டிக் ஹீரோயினாக நடித்தார். ப்ரஜ்வால் தேவராஜுடன் இவர் நடித்த `ஜென்டில்மேன்' எனும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் இந்தப் படம் ரீமேக்காக இருக்கிறது என்பது கூடுதல் தகவல். `குரு சிஷ்யரு' எனும் காமெடி என்டர்டெயினர், `சகத்' எனும் த்ரில்லர், `தில் பசந்த்' எனும் ரொமான்டிக் படம் என்று பயணித்துக்கொண்டிருக்கும் நிஷ்விகாவுக்கு முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கி யிருக்கின்றன!