Published:Updated:

`பொன்னியின் செல்வன்' முதல் `சாணிக் காயிதம்' வரை... 2021-ல் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?!

2021ல் எதிர்பார்ப்பில் இருக்கும் கோலிவுட் படங்கள்
Listicle
2021ல் எதிர்பார்ப்பில் இருக்கும் கோலிவுட் படங்கள்

2021ல் எதிர்பார்ப்பில் இருக்கும் கோலிவுட் படங்கள்...


1
மாஸ்டர்

மாஸ்டர்:

இந்த வருடம் சினிமா உலகம் எப்படியிருந்தது என எல்லோருக்கும் தெரியும். 2020-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அனைத்தும் அடுத்த வருடத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டன. அதில் 'சூரரைப் போற்று', 'மூக்குத்தி அம்மன்' மட்டும் 2020 வசம் அமைந்துவிட்டது. இந்தத் தொகுப்பில் 2021-ல் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் கோலிவுட் படங்களைப் பார்க்கலாம்.

முதலில் 'மாஸ்டர்' படத்தைப் பற்றி பேசுவோம். இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அடுத்த வருடம் வெளியாகயிருக்கிறது. படம் நிச்சயமாக பொங்கலுக்கு வரும் என்கிறார்கள். இதனுடைய பணிகள் எல்லாம் நிறைவடைந்து ரெடியாக இருக்கிறது. ஆனால், நாம் பார்க்கவிருப்பது தற்போது படப்பிடிப்பிலிருக்கும் அல்லது படப்பிடிப்பிற்குச் செல்லவிருக்கும் படங்களின் பட்டியல்.


2
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்:

எம்.ஜி.ஆர் தொடங்கி பலர் படமாக்க நினைத்த காவியம், 'பொன்னியின் செல்வன்'. அதனை மணிரத்னம் கையிலெடுத்து பணியாற்றி வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், த்ரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எனப் பெரிய நடிகர் பட்டாளமே இருப்பது நமக்கு தெரியும். எல்லோராலும் வாசித்து சிலாகிக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படமாக அதுவும் இரண்டு பாகங்களாக வரவிருக்கிறது என்றால் யாருக்குதான் எதிர்பார்ப்பு இருக்காது? அந்தப் படம் குறித்த சில வதந்திகளும் பரவி வருகின்றனது. தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் ஒரு அசத்தல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கலாம்.


3
அண்ணாத்த

அண்ணாத்த:

சூப்பர் ஸ்டார் படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்குமா? 'விஸ்வாசம்' படத்தைப் பார்த்துவிட்டு சிவாவிடம் கிராமத்துக் கதை கேட்ட ரஜினிகாந்த் உடனே தம்ஸ் அப் காட்டிவிட்டார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சி ஆரம்பிக்க இருக்கும் ரஜினிகாந்த், முதல்வேலையாக இன்னும் 40% இருக்கும் இதன் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்க இருக்கிறார். டிசம்பர் 15-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


4
வலிமை

வலிமை:

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களில் கவனம் பெற்ற இயக்குநர் வினோத், அஜித்துடன் இணையும் போது 'நேர்கொண்ட பார்வை'க்கு ரீமேக் படமாக இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதைவிட அதீத எதிர்பார்ப்பு 'வலிமை'க்கு உள்ளது. போலீஸ் அதிகாரி, பைக், கார் சேஸிங், நிறைய ஆக்‌ஷன் சீக்வென்ஸ் என படத்தைப் பற்றிய துணுக்குகள் படத்திற்கு மைலேஜ் சேர்த்து வருகின்றன. பொதுவாகவே, அஜித் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த விஷயமெல்லாம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அது கொஞ்சம் இன்னும் கூடவே இருக்கிறது. ஹூமா குரேஷி, டோலிவுட் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் உள்ளனர். படத்திற்கு பெயர் 'வலிமை' என்பதைத் தாண்டி அந்தப் படத்தை பற்றிய அப்டேட் எதுவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. வினோத் - அஜித் - ஆக்‌ஷன் - மாஸ் இது போதுமே படத்தை ஆவலோடு எதிர்பார்க்க...


5
விக்ரம்

விக்ரம்:

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' இப்போது உலக நாயகனோடு 'விக்ரம்' என லோகேஷ் கனகராஜின் கரியர் கிராஃப் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 'கைதி' வெளியாகும் முன்பே 'மாஸ்டர்' கமிட்டானார். இப்போது 'மாஸ்டர்' வெளியாகும் முன்பே அவரின் ஆதர்ச நாயகன் கமலை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கேங்ஸ்டர் கதை வித் அரசியல் டச் இருக்கும் என்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜிற்கு 'பேட்ட', ப்ரித்விராஜுக்கு 'லூசிஃபர்' போன்று லோகேஷிற்கு 'விக்ரம்' இருக்கப்போகிறது. ரசிகராக இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் செதுக்கவிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே படம் வெளியாக வேண்டும் என்பது அவர்களின் டார்கெட்.


6
கர்ணன்

கர்ணன்:

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மாரி செல்வராஜ் இயக்கிவரும் 'கர்ணன்' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜிஷா விஜயன், லால், கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா சந்திரமெளலி என வித்தியாசமான ஸ்டார் காஸ்ட்டை வைத்துக்கொண்டு கர்ணனின் வாளை தீட்டி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். முழுக்க முழுக்க எளிய மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக இருக்கும். மக்களுக்கான உரிமைகளை கேட்கும் இளைஞனாக தனுஷ் நடித்திருக்கிறார். மாரியின் முதல் படம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. ஆனால், அவர் எடுக்க நினைத்த முதல் கதை இதுதானாம். நிச்சயம் 'கர்ணன்' கொண்டாடப்படுவான் என்கிறது கோலிவுட்.


7
செல்வராகவன் - தனுஷ்

செல்வராகவன் - தனுஷ்:

தனுஷின் லைன் அப் மிக அருமையாக இருக்கிறது. தற்போது, 'அத்ரங்கி ரே' எனும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருக்கிறார், தனுஷ். இதனை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் படத்திற்குச் செல்லவிருக்கிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கும் படத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் 'புதுப்பேட்டை 2' ஆக இருக்குமா அல்லது வேறு கதையா என்பதுதான் சஸ்பென்ஸ். செல்வராகவன் - தனுஷ் கூட்டணிக்கே தனி ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு நிச்சயம் இந்தப் படத்தின் அறிவிப்பு கொண்டாட்டமாக இருக்கும்.


8
வெற்றிமாறன் - சூரி

வெற்றிமாறன் - சூரி:

வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்திற்கு முன் சூரியை இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. அந்தப் படம் நா.முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பை தழுவி இருக்கும் என தகவல் வந்தது. பிறகு, அவர் 'அஜ்னபி' நாவலை படமாக்கவிருக்கிறார் என்ற செய்தி வந்தது. ஆனால், இப்போது முடிவாகியிருப்பது ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' எனும் சிறுகதைதான். சூரி, பாரதிராஜா ஆகியோர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் துவங்கவிருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை அதே பெயரில் வெற்றிமாறன் இயக்க, சூர்யா நடிக்கும் படத்திற்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு வெற்றிமாறன் - சூரி படத்திற்கும் இருக்கிறது.


9
பாண்டிராஜ் - சூர்யா

பாண்டிராஜ் - சூர்யா:

'சூரரைப் போற்று' திரைப்படம் சூர்யாவுக்குத் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் டபுள் போனஸ் கொடுத்தது. அடுத்ததாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்க சூர்யா நடிக்கும் கிராமத்து படம். எமோஷனும் ஆக்‌ஷனும் கலந்து பக்கா மாஸ் என்டர்டெயினராக இருக்கும் என்கிறார்கள். அந்த ஜானரில் பாண்டிராஜ் எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். சூர்யா, 'கூட்டத்தில் ஒருத்தன்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடித்து முடித்த பின்பு, இந்தப் படம் ஆரம்பிக்க இருக்கிறது. இதனை முடித்துவிட்டு, வெற்றிமாறனோடு 'வாடிவாசல்' படத்தில் இணைகிறார், சூர்யா.


10
விக்ரம், துருவ்

கார்த்திக் சுப்புராஜ் - விக்ரம், துருவ்:

யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் குறும்படங்கள் எடுத்து சினிமாவுக்குள் நுழைந்து தனித்துவம் காட்டியது கார்த்திக் சுப்பராஜின் அடையாளமாக பார்க்கப்பட்டது. பெரிய நடிகர்களே நடித்தாலும் அது கார்த்திக் சுப்பராஜின் படம் என சினிமா ரசிகர்களால் பேசப்பட்டது அவரின் வெற்றி. தற்போது, 'ஜகமே தந்திரம்' படத்தை எடுத்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியாகும் அதற்கு இருக்கும் எதிர்பார்ப்பைத் தாண்டி அடுத்ததாக விக்ரம், துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்பா - மகன் இணைந்து நடிப்பது அதனை கார்த்திக் இயக்குவது... இதுவே அந்தப் படத்தை எதிர்பார்க்க செய்திருக்கிறது.


11
ஈஸ்வரன்

ஈஸ்வரன்:

உடல் எடை குறைப்பு, ஒரே டேக் நடிப்பு என சிம்பு, தற்போது 'சிம்பு 2.0'வாக இருக்கிறார். லாக்டெளனை தனதாக்கிக்கொண்டு பயங்கர சேஞ்ச் ஓவர் கொடுத்திருக்கிறார். 33 நாள்களில் சுசீந்திரன் சிம்புவை வைத்து பழனியில் 'ஈஸ்வரன்' ஷூட்டிங்கை முடித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 'கோவில்' படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து படமொன்றில் சிம்பு நடிப்பது இதில்தான். இதில் சிம்புவைக் காணவும் 33 நாள்கள் எப்படி சுசீந்திரன் படத்தை முடித்தார் என்ற ஆச்சர்யமுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.


12
மாநாடு

மாநாடு:

சிம்பு கரியரில் இந்தப் படம் மிக முக்கியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே இருக்கின்றது. அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. முழுக்க முழுக்க அரசியல் கதை. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு என்பதே ட்ரம்ப் கார்டாக இருக்கிறது. 'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு பாண்டிச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'மாநாடு' ஷூட்டிங்கில் இருக்கிறார், சிம்பு. அரசியல் பேசும் இந்தப் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தைக் காண ரசிகர்கள் வெயிட்டிங்.


13
மோகன்ராஜா - ஜெயம் ரவி

மோகன்ராஜா - ஜெயம் ரவி:

'தனி ஒருவன்' படம் சூப்பர் ஹிட்டானதிலிருந்து அதனுடைய அடுத்த பாகத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. இந்த வருடம் ஆரம்பிப்பதாக இருந்த அதன் படப்பிடிப்பு, ஜெயம் ரவி 'பொன்னியின் செல்வன்' படத்திற்குச் சென்றதால் தாமதமாகிவிட்டது. அந்தப் படத்தை ரவி முடித்துவிட்டு வந்ததும் 'தனி ஒருவன் 2'தான். இந்த முறை கொஞ்சம் பிரமாண்டமாகவே எடுக்கவுள்ளனராம். குறிப்பாக, வில்லன் கேரக்டரில் நடிக்க பல மொழிகளுக்குத் தெரிந்த நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம்.


14
அயலான்

அயலான்:

'இன்று நேற்று நாளை' படத்தை முடித்தவுடன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை சொல்லி இயக்க ஆரம்பித்தார், ரவிக்குமார். இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் படம் இன்னும் முடியவில்லை. இப்பொழுதுதான் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஏலியன் கதை என்பதால் டெக்னிக்கலாக சில விஷயங்கள் செய்ய தாமதமாகும்தான். இத்தனை வருடங்களாக எடுக்கப்பட்ட படம் எப்படியிருக்கிறது என்பதைக் காணவும், சிவகார்த்திகேயனுக்காகவும் படத்தின் மீதான எதிர்பாப்பு உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பது கூடுதல் எதிர்பார்ப்பு. விரைவில் 'அயலான்' பட அப்டேட் வெளியாகும்.


15
தலைவி

தலைவி:

யாருடைய பயோபிக் எடுத்தாலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இயக்குநர் விஜய் இயக்குவது ஜெயலலிதாவின் பயோபிக் இல்லையா! அதனால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இருக்காது. அதனால், சினிமா, அரசியல் என ஏகப்பட்ட விஷயங்கள் இடம்பெற வேண்டும். வரலாற்றில் நடந்த சம்பவம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கங்கனா ரனாவத் ஜெயலலிதாகவும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராகவும் நடித்து வருகின்றனர். 'ஜெயலலிதாவின் பயோபிக்' - இது போதுமே படத்தின் எதிர்பார்ப்பு எகிற...

இவை தவிர, 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கி தயாராக இருக்கும் 'கடைசி விவசாயி', அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் முதன்முதலாக நடிக்கும் 'சாணி காயிதம்' ஆகிய படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இன்னும் எந்தெந்த படங்கள் இந்தப் பட்டியலில் இணைகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.