Published:Updated:

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் ட்ராக் ரெக்கார்டு என்ன சொல்கிறது தெரியுமா? #Vijay65

விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ்
விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ்

நான்காவது முறையாக இணையப்போகும் இந்த காம்பினேஷனின் ட்ராக் ரெக்கார்டு எப்படி இருக்கிறது தெரியுமா?

வெற்றிமாறன், மகிழ் திருமேனி, அருண்ராஜா காமராஜ் என `விஜய் 65' படத்தின் இயக்குநர் குறித்து அடுத்தடுத்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதியாக, சுதா கொங்கராதான் விஜய் 65 படத்துக்கான இயக்குநர் என ஏறக்குறைய உறுதியான செய்திகள் வெளியாக, விஜய் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களெல்லாம் தயார் செய்யத் தொடங்கிவிட்டனர். ரசிகர்களின் இந்த உற்சாகத்துக்குக் காரணம், விஜய் 65 இயக்குநர் லிஸ்ட்டில் இருந்த எல்லாருமே விஜய்யுடன் இதுவரை இணைந்திராத புது இயக்குநர்கள். அதுவும், இந்த இயக்குநர்கள் கடைசியாக இயக்கிய படங்கள் எல்லாம் ஆல் சென்டர் ஹிட் அடித்து, ஆல் இந்தியா அளவில் ஃபேமஸ் ஆனவர்கள். புது காம்பினேஷனோடு புது ஸ்டைலில் விஜய்-யைப் பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், தற்போது வெளியாகியுள்ள செய்தியால் கொஞ்சம் அப்செட்தான். 'விஜய் 65', சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே விஜய் நடிக்கப்போகிறார். இது, விஜய் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. நான்காவது முறையாக இணையப்போகும் இந்த காம்பினேஷனின் ட்ராக் ரெக்கார்டு எப்படி இருக்கிறது தெரியுமா?

துப்பாக்கி: (2012)

துப்பாக்கி
துப்பாக்கி
விஜய்

`வில்லு', `குருவி', `வேட்டைக்காரன்' எனத் தொடர் ஃப்ளாப்கள் கொடுத்த விஜய், தனது 50-வது படமான `சுறா' மூலம் தனது கரியரின் உச்சக்கட்ட வீழ்ச்சிக்குச் சென்றார். கட்டாயம் ஒரு மாஸ் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய சூழல். சோர்ந்து போயிருந்த விஜய்க்கு, `காவலன்', `வேலாயுதம்', `நண்பன்' என அடுத்தடுத்து பொங்கல், தீபாவளிப் பண்டிகைகளுக்கு வெளியான மூன்று படங்களும் நல்ல பெயரைக் கொடுத்து மக்களிடமும் வரவேற்பைப் பெற்றன. ஆனாலும், விஜய் எதிர்பார்த்த அந்த மாஸ் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் ஹிட் அமையவில்லை. அந்த நேரத்தில்தான், முருகதாஸ் `துப்பாக்கி'யோடு வருகிறார். விஜய்யை அதுவரை பார்த்திராத ஒரு ஸ்டைலிஷான க்ளாஸ் லுக்கில் போஸ்டர்கள் வெளிவந்தன. கூடவே சேர்ந்து பிரச்னைகளும் முளைக்கத் தொடங்கின. போஸ்டர்களில் விஜய் சுருட்டு புகைப்பது போல இருந்த படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. `துப்பாக்கி' என்ற டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடி, `கள்ளத்துப்பாக்கி' என்ற படக்குழு கோர்ட் படியேறியது. இதையெல்லாம் கடந்து படம் வெளியான பிறகு, இஸ்லாமிய அமைப்புகள் படத்தில் இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அவதூறாகக் காட்டியிருப்பதாகக் கூறி போராட்டத்தில் இறங்கினர். பிரச்னை பெரிதாக வெடிப்பதை உணர்ந்த படக்குழு, படத்தில் சின்னச் சின்ன கத்தரிப்புகளைச் செய்தது. இந்தப் பிரச்னைகளோடு சேர்த்து விஜய்யின் புது லுக், ஆர்மி மேனாக விஜய், விஜய்-யின் `கூகுள் கூகுள்' பாடல் எல்லாம் சேர்ந்து, படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறை விஜய்க்கு அவர் எதிர்பார்த்த மாஸ் ஹிட் துப்பாக்கி மூலம் கிடைத்துவிடும் என நம்பிக்கொண்டிருந்தனர் ரசிகர்கள். `துப்பாக்கி' அதற்கும் மேலே செய்துகாட்டியது. 2012 தீபாவளிக்கு வெளியான `துப்பாக்கி' ஹிட், சூப்பர் ஹிட் என்பதையெல்லாம் தாண்டி, பிளாக் பஸ்ட்டர் ஆனது.

100 கோடி வசூல் சாதனை என்பதைத் தாண்டி, படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியது. வெறும் மாஸ் மசாலா படங்களில் நடித்து வந்த விஜய், இப்படியொரு க்ளாஸ் + மாஸ் அவதாரமெடுத்தது ஆச்சர்யம்தான். அதிலும் 12 மென் ஷூட் அவுட், இன்டர்வெல் பிளாக், `ஐயம் வெய்ட்டிங்', க்ளைமேக்ஸ் ஆகியவற்றோடு சந்தோஷ் சிவனின் கேமராவும் ஹாரிஸின் பின்னணி இசையும், அவரும் அவரது ரசிகர்களும் சொல்வது போலவே, `வேற லெவல்ங்க நீங்க, வேற லெவல்'. `கில்லி'க்குப் பிறகு விஜய்-யின் கரியரில் கூட்டம் கூட்டமாக மக்களைத் தியேட்டருக்குள் இழுத்த படம் `துப்பாக்கி'தான். விஜய், கடந்த சில ஆண்டுகளாக இழந்திருந்த மார்க்கெட்டை ஒரே படத்தில் மீட்டுக்கொடுத்ததும் இல்லாமல், ரெக்கார்டு பிரேக்கிங் வசூலால் விஜய்யை கோலிவுட்டின் உச்சாணிக்கொம்பில் தூக்கிவைத்தார் முருகதாஸ். இன்றைக்கு விஜய்தான் நம்பர் 1 என்ற செய்திகள் வெளியாவதற்கு அச்சாரம் போட்டவர் முருகதாஸ்தான்.

கத்தி : 2014

கத்தி
கத்தி
விஜய்

`துப்பாக்கி'க்குப் பிறகு, முருகதாஸ் விஜய் ரசிகர்களின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறிப்போனார். இந்த காம்போ மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, ஹிந்திக்கு ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மீண்டும் விஜய்யோடு `கத்தி'யில் இணைந்தார் முருகதாஸ். இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதால், படத்தைத் தடை செய்ய வேண்டும் என வேல்முருகன் தலைமையில் சில அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின. படம் வெளியாகும் முந்தைய நாள் வரை பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு லைகா என்ற பெயரில்லாமல் படத்தை வெளியிட்டது லைகா நிறுவனம். இது ஒரு புறமென்றால், மறுபுறம் `அறம்' இயக்குநர் கோபி நயினார், `படத்தின் கதை என்னுடைய கதை' என்று கோர்ட் படியேற, கதைத்திருட்டு பஞ்சாயத்து ஒரு பக்கம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் மீறி தீபாவளிக்கு வெளியான `கத்தி'யில் `துப்பாக்கி' விஜய்-யிலிருந்து டோட்டல் சேஞ்ச் ஓவர். விவசாயிகளுக்காக சத்தமாக கத்திக் கத்தி பேசினார் விஜய். இந்தப் படத்துக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களில் விவசாயிகளுக்காக கேமராவைப் பார்த்து இடைவெளி இல்லா வசனங்கள் பேசும் டிரெண்டு உருவானது.

கதிரேசன்-ஜீவானந்தம் இரண்டு கேரக்டர்களுக்கும் பெரிய அளவில் கெட்டப் சேஞ்ச் இல்லாவிட்டாலும் நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருப்பார் விஜய். வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே 2ஜியை உள்ளிழுத்து வசனம் வைத்தது விமர்சனத்துக்குள்ளானது.

`கத்தி'க்குப் பிறகு விஜய்-யின் எல்லாப் படங்களும் பிரஸ் மீட் சீன்களாலும் சோஷியல் மெசேஜ்களாலும் நிறையத் தொடங்கின. `துப்பாக்கி'க்கு இருந்த அந்த ரிப்பீட் வேல்யூ `கத்தி' படத்துக்கு இல்லாவிட்டாலும் வியாபார ரீதியாக விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு `கத்தி' நல்ல படமாகவே அமைந்தது.

சர்கார் (2018) :

சர்கார்
சர்கார்
விஜய்
Vikatan

விஜய்-முருகதாஸ்- தீபாவளி என்பது `துப்பாக்கி', `கத்தி'க்குப் பிறகு ஒரு பிராண்டாகவே மாறியிருந்தது. மகேஷ்பாபுவுக்கு `ஸ்பைடர்' என்ற சுமார் படத்தைக் கொடுத்துவிட்டு, `கத்தி'க்குப் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்-யுடன் இணைந்தார் முருகதாஸ். அரசியல் படம் என்று முதலிலேயே பேசப்பட்டாலும் `சர்கார்' என்ற டைட்டில் வெளியான பிறகுதான் அது உறுதியானது. `மெர்சல்'க்கு பி.ஜே.பி கொடுத்த விளம்பரத்தால் மீண்டும் அரசியல் படத்துக்குத் தயாரானார் விஜய். ஆனால், மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முருகதாஸ். கதைத் திருட்டு புகார்கள் வர, நீதிமன்றம் வரை சென்றது பிரச்னை. 2018 தீபாவளிக்கு வெளியான படத்தில் மாநில அரசுகள் கொடுத்த இலவச திட்டங்கள் குறித்து விமர்சனங்கள் இருந்ததால் சர்ச்சைகள் எழுந்தது. இந்த சர்ச்சைகளால் படத்துக்கு விளம்பரம் கிடைத்தாலும், மோசமான திரைக்கதையால் `சர்கார்', சரிவைச் சந்தித்தது. இதனால்தான் விஜய்-65 படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என்றவுடன் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதோடு மட்டுமல்லாமல், ரஜினியின் `தர்பார்' உட்பட முருகதாஸின் சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதும் எதிர்ப்புக்குக் காரணம்.

விஜய்க்கு ஒரு காலத்தில் மாஸ் வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் `துப்பாக்கி' கொடுத்து உதவியவர் முருகதாஸ். முருகதாஸ் அப்படியொரு சூழலில் இருக்கும்போது, விஜய் இப்போது கைகொடுக்கிறார். விஜய் 65 மூலம் விஜய் -யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்குப் பிறகு விஜய்யை அதிக முறை இயக்கிய இயக்குநராகிறார் முருகதாஸ்.

உண்மையில், விஜய் ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு முருகதாஸ் ஃப்ளாப் கொடுக்கும் இயக்குநர் கிடையாது. இவரது பழைய ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால், `தீனா' `கஜினி', `ரமணா', `துப்பாக்கி', `கத்தி' எனப் பல ஹிட் படங்கள் இருக்கும். ஆனால், `ஸ்பைடர்', `தர்பார்', `சர்கார்'ஆகிய படங்களிலெல்லாம் முருகதாஸ் தன்னுடைய சுயத்தை முழுவதுமாக இழந்திருப்பார். `சர்கார்' படத்தில் நிரம்பியிருந்த விஜய்யிஸ அரசியலையும், `தர்பார்' படத்தில் நிரம்பியிருந்த ரஜினியிஸ ஓவர் டோஸ் மாஸையும் உருவியெடுத்துவிட்டு முருகதாஸின் பேனா அந்த இடங்களிலெல்லாம் ஆதிக்கம் செலுத்தியிருந்தால், இரண்டு படங்களும் இன்னொரு `ரமணா', `துப்பாக்கி'யாக மாறியிருக்கும்.

விஜய்
விஜய்
அதிகார மையம், `நண்பர்' அஜித், விஜய் ஆன விஜய் சேதுபதி... `மாஸ்டர்' விழா எப்படி?

`ரமணா' படத்தின் கதையை முருகதாஸ் விஜயகாந்த் தரப்பிடம் சொன்னபோது, அவர்களுக்கு க்ளைமாக்ஸில் விஜயகாந்த் இறப்பதுபோன்ற காட்சி இருப்பது போல் இல்லாமல் அதை மாற்ற முடியுமா என முருகதாஸிடம் கேட்டதற்கு இந்தக் கதைக்கு இதுதான் செட் ஆகும் எனக் கூறி, இறுதிவரை உறுதியாக நின்று படமாக்கினார் முருகதாஸ். அந்த `ரமணா' இன்றும் பேசப்படுகிறார்.

தன்னுடைய திரைக்கதையின் சுயத்தை எந்தக் காட்சியிலும் ஹீரோ இமேஜுக்காக இழக்காத அந்த முருகதாஸ்தான் மீண்டும் தேவைப்படுகிறார்.

வரணும்... முருகதாஸ் பழைய `ரமணா'வாக திரும்ப வரணும்!

அடுத்த கட்டுரைக்கு