Published:Updated:

மனிதனும் ஜோம்பியும், கொரிய அரசியலும்... எப்படியிருக்கிறது #Train2Busan பாகம் 2 #Peninsula?

கார்த்தி
Peninsula
Peninsula

படத்தில் வரும் பிற நடிகர்களைவிடவும், இரண்டு குட்டீஸும் ஜோம்பிக்களை டீல் செய்யும் காட்சிகள்தான் ஸ்பெஷல்.

இப்போதெல்லாம் தியேட்டருக்குச் செல்வதே அட்வென்சர் போல் ஆகிவிட்டது. இ-டிக்கெட், இ-பில், கிளவுஸோடு ஸ்நாக்ஸ், பத்து பேர் என ஒவ்வொருமுறையும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது தியேட்டர் விசிட். உலக அளவில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மெகா ஹிட் அடித்த #TrainToBusan படத்தின் சீக்குவல் என்பதாலேயே இந்த முறை ரிஸ்க் எடுத்து தியேட்டர் பக்கம் சென்றேன். எப்படியிருக்கிறது #Peninsula?
Peninsula
Peninsula

Train To Busan

2016-ல் வெளியான இந்தப் படம் பார்த்தவர்கள் இந்தப் பத்தியை ஸ்கிப் செய்யலாம். இல்லை, இனிதான் பார்க்கப் போகிறேன் என்றால் அமேஸான் ப்ரைமில் இப்படம் இருக்கிறது. தாராளமாய்ப் பார்க்கலாம். தென் கொரியாவின் பயோ டெக் தொழிற்சாலையில் ஏற்படும் ஒரு கசிவால், மக்கள், மிருகங்கள் என எல்லா உயிரினங்களும் ஜோம்பிக்களாக உருமாற்றம் பெறுகிறார்கள். ஒரு ரயில் பயணம். அதில்தான் இந்த நகரிலிருந்து தப்பிக்க முடியும். அந்த ரயிலிலும் ஒரு ஜோம்பி ஏறிவிட அடுத்த என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன். காதல், பாசம், அன்பு, தியாகம் அதெல்லாம் தாண்டி 'ஸ்பீடு' படம் போன்ற அதிவேக த்ரில்லர் அனுபவத்தைத் தந்தது இந்தக் கொரிய திரைப்படம்.

Peninsula

'ஜூராஸிக் பார்க்' தொடர்களில் வரும் அதே ஒன்லைன் தான் இந்த இரண்டாம் பாகத்துக்கும். ஆம், 2016-லேயே கொரிய பெனின்சுலா மொத்தமாக க்வாரன்டீன் செய்யப்படுகிறது (இது ஜோம்பி க்வாரன்டீன் - வேற ரமணா!). அங்கிருந்து தப்பித்து மக்கள் ஒரு பெரிய கப்பலில், ஹாங்காங் செல்கிறார்கள். அந்தக் கப்பலில் ஏற ஹீரோவிடம் ஒரு குடும்பம் கெஞ்சுகிறது. அவர்களைப் புறந்தள்ளி கப்பலுக்கு விரைகிறது நாயகனின் குடும்பம். பின்னர் அந்தக் கப்பலிலும் ஜோம்பிக்கள் நாம் எதிர்பார்த்ததைப் போலவே உள்ளே நுழைகிறது.

Peninsula
Peninsula

நான்கு ஆண்டுகள் கழித்து தென் கொரியாவில் ஒரு கன்டெய்னரில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக செய்திகள் வர, அதை எடுக்கச் செல்கிறார்கள் நான்கு கொரிய சர்வைவாக்கள். தென் கொரியா எப்படி இருக்கிறது, இன்னும் அங்கு மனிதர்கள் இருக்கிறார்களா, நெல் ஆடிய நிலம், சொல் ஆடிய களம் எல்லாம் எப்படியிருக்கிறது என்பதாக விரிகிறது பெனின்சுலா திரைப்படம்.

கொரியாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் இந்தக் குழு முன்னர் ஜோம்பிக்களுடன் மனிதர்களும் இருக்கிறார்கள். ஜோம்பிக்களுக்கு இணையாக மனிதர்களும் துரத்த எப்படி இந்தக் குழு, இன்னொரு குரூப்புடன் தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை. மனிதர்களை அடிமைகளாகப் பிடித்து வந்து ஜோம்பிக்களுடன் மோத விடுவது; அவர்களுக்குள் ஒரு தலைவன் என வித்தியாச உலகமாக மாறியிருக்கிறது தென் கொரியா. இது தென் கொரியாவா இல்லை வேற கொரியாவா என லைட்டாக தோன்றுகிறது அல்லவா, யெஸ் அப்படியாக சில அரசியலையும் பேசி இருக்கிறார்கள்.

Peninsula
Peninsula
முதல் பாகம் கொடுத்த பர பர சேஸிங் அனுபவம்தான் இந்தப் பாகத்துக்குள் பார்வையாளர்களை இழுத்திருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதிலும், சென்ட்டிமென்ட், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தல் போன்ற மசாலாக்களை நன்றாகத் தூவியிருக்கிறார் இயக்குநர் Yeon Sang-ho.

இரண்டாம் பாகம் என்பதற்காக 'ஸ்பீடு' திரைப்படம் போல ரயிலைப் பேருந்தாக மாற்றாமல் இருந்ததற்காகவே இவரைப் பாராட்டலாம். அதே போல், கொரோனா தொற்று பீதியைக் கிளப்பும் நேரத்தில் கடித்தால் பரவும் ஜோம்பி வைரஸ் நம்மை லைட்டாக கதிகலங்க வைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், நெட்ஃபிளிக்ஸில் அலைவ் என்கிற ஒரு சினிமாவும் இதைப் போலவே ஜோம்பிக்களை மையப்படுத்தி வெளியாகியிருந்தது.

படத்தில் வரும் பிற நடிகர்களைவிடவும், இரண்டு குட்டீஸும் அவர்கள் ஜோம்பிக்களை டீல் செய்யும் காட்சிகள்தான் ஸ்பெஷல். ஜோம்பிக்களையே ஏமாற்றுவது, ரைட்டு இண்டிகேட்டரில் லெஃப்ட் பறப்பது என இருவரும் செய்யும் அட்டகாசங்கள் செம்ம. இவ்வளவு நடந்த பின்னும் மனிதன் மாறவில்லை என்பதை உணர்த்தி முடிகிறது பெனின்சுலா.

Peninsula
Peninsula
எமோஷனலாக முதல் பாகம்போல இதில் அதிகப்படியான காட்சிகள் இருந்தாலும், அந்த பர பர த்ரில்லர் ஃபீல் மொத்தமாய் இதில் மிஸ்ஸிங். அதனாலேயே 'அந்தகாரம்' படம் போல், ஜோம்பிக்கள் கூட மெதுவாகக் கொல்ல வருவது போன்றே காட்சியளிக்கிறது. அந்த த்ரில் மிஸ்ஸானதால், சாதாரண சீக்குவல் திரைப்படமாக திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த 'பெனின்சுலா'.
அடுத்த கட்டுரைக்கு