Election bannerElection banner
Published:Updated:

``விஜய் சார்கூட நடிக்கணும்னு சொன்னப்போ, அவர் சொன்ன பதில்..!?'' - ஜீவா

திருநங்கை ஜீவா
திருநங்கை ஜீவா

`தர்பார்' படத்தில், ரஜினியுடன் சேர்ந்து, `கண்ணுல திமிரு' காட்டியவர் திருநங்கை ஜீவா. ரசிகர்கள் மத்தியில் `தர்பார்' கொடுத்திருக்கும் வெற்றி உற்சாகத்தில் இருந்தவருடன் ஒரு குட்டி உரையாடல்.

"வாழ்க்கையில நிறைய பிரச்னைகள் வரும்போது, எனக்கு ஆறுதலா இருக்கிறது தளபதி படமும், பாட்டும்தான். தளபதிகூட தங்கச்சியாவோ, அக்காவாவோ ஒரு படம் நடிச்சிட்டா போதும். என் வாழ்நாள் கனவு நிறைவேறிடுச்சுனுதான் சொல்வேன்'' எனச் சொல்லும்போதே ஜீவா குரலில் பட்டாஸாகத் தெறிக்கிறது எனர்ஜி.

திருநங்கை ஜீவா
திருநங்கை ஜீவா

`தர்பார்' படத்தில், ரஜினியுடன் சேர்ந்து, `கண்ணுல திமிரு' காட்டியவர்! ரசிகர்கள் மத்தியில் `தர்பார்' கொடுத்திருக்கும் வெற்றி உற்சாகத்தில் இருந்தவருடன் ஒரு குட்டி உரையாடல்.

"என்னுடைய சொந்த ஊர் சிவகாசி. அம்மா, அப்பா, நான், என்கூட பிறந்த ரெண்டு தம்பிகள்னு வாழ்க்கை அழகா போயிட்டிருக்கு. கூலி வேலை செய்யிற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவதான் நான். என்னுடைய 14 வயசுலதான் நான் திருநங்கைங்கிறதை உணர்ந்தேன். அதனால, குடும்பத்துல எல்லோருக்கும் என்மேல வருத்தம் இருந்தது. ஆனா, இப்போ என்னைப் புரிஞ்சிகிட்டு ரொம்ப அன்போட இருக்காங்க. சுஜாதா, ராதிகா மேம்னு இவங்களைப் பார்த்துதான் குணச்சித்திர கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு ஆசை வந்தது. உடனே சென்னை கிளம்பிட்டேன். சினிமா உள்ள எப்படிப் போகணும், யாரைக் கேட்கணும்னு ஆரம்பக்கால கட்டத்துல நான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்தச் சமயத்துல கோயம்பேடு மார்க்கெட், கட்சி ஆபீஸ்னு நிறைய இடங்கள்ல வேலை பார்த்தேன்."

விஜய்யுடன் ஜீவா...
விஜய்யுடன் ஜீவா...
இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

"அதுக்கப்புறம் டான்ஸ் கத்துக்கிட்டு, நிறைய மேடை நிகழ்ச்சிகள் பண்ணிட்டிருந்தேன். அந்தத் தொடர்பு மூலமா சீரியல்ல டச்சப் பாயா வேலைக்குச் சேர்ந்து, நிறைய இடங்கள்ல வேலை பார்த்தேன். ஆனாலும், நடிக்கணுங்கிற ஆசை மட்டும் போகவே இல்லை. மறுபடியும் அதுக்கான முயற்சிகளை பண்ண ஆரம்பிச்சேன். சினிமாக்குள்ள போக முயற்சி பண்ண சமயத்துல திருநங்கைங்கிறதாலே நிறைய அவமானங்களைச் சந்திக்க வேண்டியதா இருந்தது. இந்தப் பிறவி, கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. அதைச் சரியா புரிஞ்சிக்காம என்னை அவமானப்படுத்தினவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு இந்த சமயத்துல நான் நன்றி சொல்லிக்கிறேன். ஏன்னா, அவங்க தந்த காயங்களுக்கான மருந்தாதான் என்னுடைய முயற்சியைத் தொடர்ந்து செஞ்சிட்டிருந்தேன். அதுக்கான பலன் இப்போ கிடைக்க ஆரம்பிச்சதுல சந்தோஷம்."

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா `தர்மதுரை' பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்துடைய இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதி அண்ணாவும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. அந்தப் படத்தின் மூலமாதான் நான் முழுசா திருநங்கையா மாறிட்டேன்னு என் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. என் குடும்பமும் என்னை ஏத்துக்கிட்டாங்க. என்னுடைய வாழ்க்கையில வெளிச்சம் கொடுத்த படமும் அதுதான். இருந்தாலும், அந்தப் படத்துக்குப் பிறகு பெருசா எந்த வாய்ப்பும் வரலை. இடையில சில சீரியல்கள், குறும்படங்கள்ல நடிச்சேன். அதுவும் வழக்கமா திருநங்கைகளை சித்திரிக்கிற மாதிரி இல்லாம, புதுசா இருந்ததாலதான் பண்ணேன். அது மூலமா `ஐரா' பட வாய்ப்பு வந்தது. சினிமா வாய்ப்புத் தேட ஆரம்பிச்ச காலகட்டத்துல, `உன்னை என்ன நயன்தாராவுக்கு அக்கா ரோல்லையா நடிக்க வைக்க முடியும்'னு கேட்டாங்க. அதுக்குப் பதில் சொல்ற விதத்துல நயன்தாரா மேம்கூட நடிச்சதும் மறக்க முடியாத அனுபவம்."

விஜய் சேதுபதியுடன் ஜீவா...
விஜய் சேதுபதியுடன் ஜீவா...

"'சர்க்கார்' சமயத்துல ஏ.ஆர்.முருகதாஸ் சார்கிட்ட, `படத்துல எனக்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்க'னு கேட்டுட்டே இருப்பேன். அப்போதான் விஜய் சாரைச் சந்திச்சேன். `தர்மதுரை' படத்துல என்னைப் பார்த்ததை ஞாபகம் வெச்சிக்கிட்டு, `நீங்கதானே அந்தப் படத்துல நடிச்சிருந்தீங்க'னு கேட்டார். எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. `உங்ககூட படம் நடிக்கணும்ணா'னு அவர்கிட்ட கேட்டேன். `ஐயம் வெயிட்டிங்மா'னு சொன்னார். செம குஷியாகிட்டேன்."

"அதுக்கப்புறம், தம்பி கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிருந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, `நீங்க சாருடைய அடுத்த படத்துல நடிக்கப் போறீங்க'னு சொன்னாங்க. தம்பி கல்யாணமா, முருகதாஸ் சார் படமானு யோசிச்சப்போ, படம்தான் முக்கியம்னு உடனே கிளம்பிட்டேன். அதுக்கப்புறம்தான் அது ரஜினி சாரோட படம்னு தெரிஞ்சது. என்னுடைய அப்பா, ரஜினி சாருடைய பெரிய ஃபேன். அதுமட்டுமல்லாம, எங்க ஊர்ல எல்லோருக்கும் நான் `தர்பார்'ல நடிச்சது ரொம்பப் பெருமை. அப்பாவும் படம் பார்த்துட்டு குஷியாகிட்டார்."

ரஜினியுடன் ஜீவா...
ரஜினியுடன் ஜீவா...

சினிமாவுல திருநங்கைகளுக்கான சவால் பற்றிக் கேட்டபோது, "சினிமாங்கிறது எல்லோருக்கும் சவாலான ஒரு மேடைதான். அதுல ஒரு திருநங்கையா ஆரம்பகாலகட்டத்துல நான் நிறைய அவமானங்களைச் சந்திச்சேன். இப்போ அதைப் பத்தி மறுபடியும் பேச விரும்பலை. எழுதப்படாத திருநங்கைகள் உடல்மொழினு ஒண்ணு இருக்கு. அதை சினிமா தவறான முறையில சித்திரிச்சிட்டிருந்தது. இந்த நிலை சமீபகாலமா மாறிட்டு இருக்குனுதான் சொல்வேன். இப்போ சினிமாவுல மட்டுமல்ல, பொதுவாவே சமூகத்துல திருநங்கைகள் மீதான பார்வை மொத்தமா மாறியிருக்கு. டாக்டர், வக்கீல், அரசியல்னு எல்லாத் துறைகள்லேயும் இயங்கிட்டிருக்கோம். இனிமேலும் நாங்க, `எங்களை ஏத்துக்கோங்க, எங்களை ஏத்துக்கோங்க'னு கேட்கப் போறதில்லை. எங்களை ஏத்துக்குற நிலை இப்போ உருவாகிடுச்சு. அதுக்கு நியாயம் செய்யிற மாதிரியான செயல்கள் செய்யணும்னு நினைக்கிறேன்"

"அம்மா, அப்பா ரெண்டு பேரும் சிவகாசியை விட்டு தாண்டாதவங்க. அவங்களை நிறைய இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் சுத்திக் காட்டணும்னு ஆசை. குறிப்பா, அவங்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் ரொம்பப் பிடிக்கும். சீக்கிரமே அவங்களை அங்க கூட்டிட்டுப் போகணும்."

அம்மா, அப்பாவுடன் ஜீவா...
அம்மா, அப்பாவுடன் ஜீவா...
`விஜய் இல்லன்னா விஜய் சேதுபதி'... பெண்களின் `back up' உளவியல் பற்றி தெரியுமா ஆண்களே!

இதைத் தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்கள் பற்றிக் கேட்டோம், "கார்த்திக் சுப்புராஜ் புரொடக்‌ஷன்ல அடுத்த படம் பண்ணியிருக்கேன். படம் முழுக்கவே நான் இருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு பவர்ஃபுல்லான ரோல். அடுத்து இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி படத்துல கமிட்டாகியிருக்கேன். இது இல்லாம இன்னும் மூணு படம் இருக்கு. அதுக்கான அறிவிப்புகள் சீக்கிரமா வரும்.

எதிர்காலத்துல படம் தயாரிக்கவும் ஆசை இருக்கு. இதுக்கெல்லாம், என்னையும் நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சீனு ராமசாமி சாருக்கும், நான் சினிமாவுல நுழைய காரணமா இருந்த விசாலினி அக்காவுக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்" என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு