சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தெலுங்கு சினிமா திருந்துதய்யா!

தெலுங்கு சினிமா
பிரீமியம் ஸ்டோரி
News
தெலுங்கு சினிமா

“அது வந்து... ஹாங்... ரொம்ப நாளா உன்மேல எனக்கு ஒரு...இது... அதான் அது... காதல்!” - இதுக்கு டெல்லி கணேஷே நடிச்சிருக்கலாம் போலத் தோணும்

தெலுங்கு சினிமா என்றதும் உங்கள் மனக்கண்ணில் சட்டென என்ன பிம்பம் வந்து போகும்? எனக்கெல்லாம் சின்னவயசில் பெங்களூரு டூரிங் டாக்கீஸில் பார்த்த சிரஞ்சீவி படமும் டாக்டர் ராஜசேகர் படமும்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.

பைக்கில்... ஏன் காரில்கூட வீல் ட்ரிஃப்டிங் பார்த்திருப்போம். ஆனா, டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி குதிரையில் வீலிங், ட்ரிஃப்டிங், ஸ்கேட்டிங் செய்வார். நீதி மன்றத்தில் அபாண்டமாகக் குற்றம்சாட்டப்பட்டு கண்கள் சிவந்து நிற்கும் டாக்டர் ராஜசேகர் 8 மணி மில்லுக்கு ஊதும் சங்கு போல அலறிக் கூண்டிலிருந்து எகிறிக்குதிப்பார். எதிர்க் கூண்டிலிருக்கும் வில்லனின் கையைத் தன் கையால் பிய்த்து தனியாக எடுப்பார். ரத்தம் 5 ஹார்ஸ் பவர் மோட்டார் போல் பீறிட்டு நீதிபதி முகத்தில் அடிக்கும். ஆத்தீ... என்னத்த சொல்ல! பயந்து வந்தது பெங்களூர் கங்கனஹள்ளியில் ஒரு பள்ளிவாசலில் ஓதி மந்தரித்தார்கள். முழுப் பரீட்சை லீவு முடிந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோதுதான் எனக்கு சரியானது.

தெலுங்கு சினிமா திருந்துதய்யா!

அதன் பிறகு தெலுங்கு சினிமா என்றால் கொஞ்சம் அலர்ஜி. சிரஞ்சீவி டப்பிங் படமெல்லாம் அலர்ஜியானதுக்கு இன்னொரு ஸ்பெஷல் காரணம் அவருக்குத் தமிழில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நம்ம ஊர் டெல்லி கணேஷ்! யோசிச்சுப் பாருங்க, ஹீரோயின் ஸ்ரீதேவியிடம் டெல்லி கணேஷ்... சே... சிரஞ்சீவி புரபோஸ் செய்யும் காட்சியை!

“அது வந்து... ஹாங்... ரொம்ப நாளா உன்மேல எனக்கு ஒரு...இது... அதான் அது... காதல்!” - இதுக்கு டெல்லி கணேஷே நடிச்சிருக்கலாம் போலத் தோணும். அதைக்கூட மன்னிச்சாலும் பெரும்பாலான ஆக்‌ஷன் படங்களில் மூக்கு புடைப்பான கொடூர வில்லன்களுக்கு டப்பிங் வாய்ஸ் நம்ம ஒய்.ஜி.மகேந்திரன்தான். “உர்ரே... பன்னிமாதிரி சாப்பிட்டு நாய் மாதிரி தூங்காதே... நாடுநாடுன்னு பேசுறானா கம்னாட்டி டப்பாத்தலையில அவனை நடுமண்டையில அடிச்சுக் கொன்னு நடு ரோட்டுல போட்ரு. முடிஞ்சா அவனை பவுடராக்கி நம்ம பவானி ரெட்டிக்கு பார்சல் பண்ணிரு!’’

‘இதுதாண்டா போலீஸ்’, ‘எவண்டா உங்க மந்திரி’, ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’, ‘மாண்புமிகு மேஸ்திரி’ போன்ற படங்களைத் தியேட்டரில் பார்த்து, ‘ஆந்திரான்னு ஒரு ஊரு இருக்கு. அங்கெல்லாம் காலையில இட்லிக்குத் தொட்டுக்க ரத்தப்பொரியல் தான் வெப்பானுக’ன்னு நினைச்சிருந்தேன். விவரமறிஞ்சு பார்த்து ரசிச்ச முதல் தெலுங்கு டப்பிங் படம் நாகார்ஜுனா ஹீரோவா நடிச்ச ராம்கோபால் வர்மாவின் ‘சிவா’தான்.

‘ஆஹகா என்னா ஃபைட்டுய்யா’ என சண்டைகளை ரசிக்கும் வயதில் பார்த்த டப்பிங் படங்களில் பாலகிருஷ்ணா, ஜகபதி பாபு, விக்டரி வெங்கடேஷ் வரை நடித்திருந்தார்கள். அதிலும் பாலய்யா என்ற தலைவன் வேற ரகம்! ‘ஜெய் சென்ன கேசவா’ என்று சொல்லி ரயிலையே திரும்பிப் போக வைப்பார். ஒரே ஈட்டியை வீசிப் பத்துப் பேரைச் செருகி சிக்கன் ஸ்டிக் போலக் கொல்வது என வெரைட்டியாய் வெளுத்து வாங்குவார். ரம்பாவை ஞாபகப்படுத்தும் தொடையோடு அவர் போடும் சண்டையெல்லாம் ஆந்திர காரம்... பிராண சங்கடம்!

அல்லு அர்ஜுன் தவிர பெரும்பாலும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸிலும் ஜிம்னாஸ்டிக் தான் செய்கிறார்கள் பாவம்.

தெலுங்குப் படமெல்லாம் தெண்டக்கருமாந்திரம் என ஒதுக்கி வைத்திருந்த காலகட்டத்தில்தான் 2000-ம் ஆண்டில் ‘யுவராஜு’, ‘யுவகுடு’ என இரண்டு படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

‘இவன் ஒரு துணிச்சல்காரன்’ என்ற ‘ராஜகுமாருடு’ டப்பிங் படத்தில் பார்த்த ‘ஒசத்தி’ ஹீரோ மகேஷ்பாபுதான் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் என்று சொன்னான் என் கல்லூரி நண்பன் கமலாக்கர் குச்சிவாடா ரெட்டி. சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணின் ‘பத்ரி’ செம ஹிட்டடித்த நேரத்தில்தான் மகேஷ்பாபு ஹீரோ எண்ட்ரி. நல்லவேளையாக மகேஷ்பாபு எண்ட்ரியானார்...இல்லையென்றால் மீனா - ரோஜா - ரம்பா என மூன்று ஹீரோயின்களோடு ட்ரிப்பிள் டக்கர் படங்களில் கொலக்குத்தாக தலையில் விக் மாட்டி நடித்துத் தள்ளியிருப்பார் அவர் அப்பா எவர்கிரீன் ஸ்டார் கிருஷ்ணா! விக்குக்கும் நமக்கும் விடுதலை!

தமிழ்நாட்டில் விஜய் - அஜீத் போல அங்கு மகேஷ்பாபு- பவன் கல்யாணும் போட்டிபோட்டு நடித்தார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலும் ரொமான்ஸ் படங்கள். மெல்ல மெல்ல ரொமான்ஸை ஊறுகாய் அளவுக்குத் தொட்டுக்கொண்டு நாட்டைத் திருத்தக் கிளம்பியிருந்தார்கள்.

உதடுகூட அசையாமல் முணுமுணுத்தே பஞ்ச் பேசும் மகேஷ், சட்டைக்குள் பூரான் புகுந்ததுபோல உடல்மொழியோடு பேசும் பவன் என ரெண்டு எக்ஸ்ட்ரீமில் இருந்தார்கள். ஆரம்பத்தில் டபுள் எக்செல் சைஸில் இருந்து பிறகு மீடியமுக்கு வந்த ஜூனியர் என்.டி.ஆர், உயர்ந்த மனிதன் பிரபாஸ், துறுதுறு அல்லு அர்ஜுன், குரங்கு சேட்டை பண்ணும் ரவி தேஜா எனக் கச்சேரி களைகட்டிய 2000த்துக்குப் பிந்தைய காலகட்டம் அது. டோலிவுட் படங்களை ஸ்டாலினின் முதல்நாள் முதல் கையெழுத்துபோல, ஆர்வத்தோடு கேஸினோ, ஜெயப்பிரதா, தேவி தியேட்டர்களில் பார்த்துத் திரிந்த அழகிய திருவல்லிக்கேணி மேன்ஷன் காலம் அது. ஜெயப்பிரதா தியேட்டரில் கோல்போஸ்ட்டைப் பிடுங்கி அடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர் படமொன்றைப் பார்த்துவிட்டு கண்ணில் பூச்சி பறக்க மட்ட மத்தியானத்தில் வெளியே வந்தால், பக்கத்து பில்டிங் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் வேட்டியை உருவி நிஜ சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘பேடு வைப்ரேஷன்’ என நினைக்கிறேன்.

பெரும்பாலும் இந்த மாஸ் ஹீரோக்கள் எதையாவது பிடுங்கி அடிப்பார்கள். எதுவும் கிடைக்கவில்லையா மரத்தைப் பிடுங்கியாவது அடிப்பார்கள். தமிழ் சினிமாவில் திரிசூலம் மட்டுமே அதிகபட்ச ஆயுதமாகப் பார்த்துப்பழகிய எனக்கு வித விதமான கோடாரிகளோடும் கதாயுதங்களோடும் சண்டை போடும் தெலுங்கு ஹீரோக்களைப் பார்க்கவே அல்லுசில்லாகும்.

சண்டைக் காட்சிகளில் ஹீரோவிடம் அடிவாங்கும் ஜிம்பாய்ஸைவிட அவர்கள் விழுகின்ற இடங்கள்தான் அதிகம் சேதாரமாகும். ஹீரோக்களுக்கு ஸ்பெஷல் சக்தியே வந்துவிடும். தரையில் கால் வைத்தாலே புழுதி பறக்கும். 20 அடி இரும்பு கேட்னாலும் ஒரே எத்துதான்...அப்படியே திறக்கும். அடியாட்கள் டென்னிஸ் பால் போல் தரையில் பௌன்ஸ் ஆவார்கள். ஹீரோக்கள் கடப்பாரையால் தரையில் குத்தினாலே 10 அடிக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.

‘உர்ரே தொங்கனக்குடுக்கா! மா ஆக்‌ஷன் ஸ்டார்ஸு நீவு கலாய்க்குறியா?’ என ஃபேமிலி டிராமாக்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கும். ‘இத்தனை வண்ணங்கள் உலகத்துல இருக்கா’ன்னு ஒரு ஃபேமிலி டிராமா தெலுங்குப்படத்தைப் பார்த்தாலே சொல்லிடலாம். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கலரை அள்ளித் தெளித்திருப்பார்கள். சண்டைக்காட்சிகளும் அகாதுகாவாய் இருக்கும்.

ஆக, மொத்தத்தில் ரெண்டு ஹீரோயின், ஒரு கூட்டுக் குடும்பம், 5 ஃபைட், 5 பாட்டு, க்ளைமாக்ஸ்ல 60 பேர அடிக்கிறது போல சண்டை. அம்புட்டுதான் தெலுங்கு சினிமா!

இப்படித்தான் இந்தக்கட்டுரையை முடிச்சிருக்கணும். ஆனால், அப்படி முடிக்க முடியாது. காரணம் மாஸ் படங்களிலேயே புது வெரைட்டி, பீரியட் ஃபேண்டசி, கலெக்‌ஷன் மூவி என எஸ்.எஸ்.ராஜமௌலியில் ஆரம்பித்து த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் வரை வேற மாதிரி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். பாகுபலியும் வைகுண்டபுரமும் அதனால்தான் தமிழ்நாட்டிலும் ஹிட்டடிக்கிறது. பனைமரத்தை வளைத்து அம்பாக்கி சண்டை போடுவதையும், பாட்டு பாடிக்கொண்டே வில்லன்களை பெறட்டிவிட்டு செதறவிடுவதையும் ரசிக்க முடிகிறது. “ஏமிரா இதி...ஹாலிவுட்ல Godzilla vs. Kong படத்துல, Kongகே Godzillaவை இப்படித்தான் பொளக்குது. காணி அதை ரசிக்கிறீங்க?” என்று அப்பாவியாய் கேட்கிறார் பவன் கல்யாண் ரசிகர்.

பிங்க் படத்தை தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’யாக்கியபோது அஜீத்துக்கு பைக்கைக் கொடுத்து ஆக்‌ஷன் பண்ண வைத்து கொஞ்சமாச்சும் மனசாட்சியோடு நடந்துகொண்டார் ஹெச்.வினோத். ஆனால், தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ படத்தில் முணுக்கென்றால் கோபப்படும் கேரக்டராய் அமிதாப்பச்சன் கேரக்டரையே மாற்றியிருக்கிறார் டைரக்டர் வேணு ஸ்ரீராம். சைட் அடிக்கும் ஒருவனை பவன் கல்யாண் ஷூவைக் கழட்டி அடிக்கிறார், க்ளைமாக்ஸில் பப்ளிக் பிராசிக்யூட்டரோடு நிஜத்தில் தலையைச் சிலுப்பி மல்லுக்கு நிக்கிறார். யூ வடிவ பெஞ்சையெல்லாம் தூக்கிப் போட்டு கடாசி முகத்தில் பஞ்ச் வைக்கப் பாய்கிறார்.

தெலுங்கு சினிமா திருந்துதய்யா!

‘ஆந்திரான்னா கோங்குரா இல்லாமலா..? அதான் கொஞ்சம் சட்னியைத் தெறிக்க விட்ருக்கோம்’ என்கிறார்கள்.

இப்படி ராட்சஷ ரணகள்ளி சூரணம் தேவைப்படுமளவுக்கு ஆக்‌ஷன் வியாதி தெலுங்கு சினிமாவை ஆட்டிப் படைத்து வைத்திருந்த காலகட்டத்தில்தான் நானி, விஜய தேவரகொண்டா, ஆதிவிசேஷ், வருண் தேஜ் போன்ற இளம் ஹீரோக்கள் நடிக்க வந்து வெரைட்டி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பல இளம் இயக்குநர்கள் தெலுங்கு சினிமாவுக்கு ஆக்சிஜன் ஏற்றியிருக்கிறார்கள். இதோ சாம்பிளுக்கு சில சின்ன கல்லு பெத்த லாபப் படங்கள்...

பெல்லி சூப்புலு

2016-ல் வெளியான ‘பெல்லி சூப்புலு’வை குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்த அந்தப் படம் பிசினெஸ் கனவோடு முன்னேறத்துடிக்கும் ஒரு பெண்ணுக்கும், எதிர்காலம் பற்றித் திட்டங்கள் ஏதுமில்லாத இளைஞனுக்குமிடையே நடக்கும் காதலை செம ரொமாண்டிக் காமெடியாக, டிரெண்டியாகப் பேசியிருந்தது. இதே இயக்குநரின் ‘ஈ நகரினிக்கி ஏமய்ந்தீ?’, ‘மீக்கு மாத்ரமே செப்தா!’ இரண்டு படங்களும் ரோலர் கோஸ்டர் ஜாலி ரைடு. காமெடிக்கும் புது சிந்தனைக்கும் கியாரண்டி!

க்‌ஷணம்

முன்னாள் காதலியின் குழந்தையைத் தேடும் ஒரு இளைஞனின் திடுக் திருப்பங்கள் நிறைந்த கதை. சிபிராஜ் ‘சத்யா’வாகத் தமிழ்ப்படுத்தியிருந்தார்.

C/O கஞ்சரப்பாலம்

வெறும் 50 லட்ச ரூபாயில் குறும்பட இயக்குநரால் எடுக்கப்பட்ட, முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த பரிசோதனை சினிமா. படத்தைப் பார்த்து ஈர்ப்பாகி, வாங்கி வெளியிட்டு ஹிட்டாக்கினார் நடிகர் ராணா. செம க்யூட் சினிமா.

அர்ஜுன் ரெட்டி

சந்தீப் ரெட்டி என்ற புதுமுக இயக்குநரால் எடுக்கப்பட்ட கல்ட் சினிமா. காதல் தோல்வியால் குடியிலிருந்து மீளும் ஒரு மருத்துவம் படித்த இளைஞனின் கதை. விஜய் தேவரகொண்டா எனும் யூத் கூல்ட்ரிங்ஸ் அண்டாவை 3 ஸ்டேட் தாண்டிக் காட்டிய படம்.

மிடில் க்ளாஸ் மெலோடீஸ்

வினோத் ஆனோந்தோஜு என்ற இளைஞரின் மிக சிம்பிளான கதை. ஓட்டல் ஆரம்பித்து முன்னேறத் துடிக்கும் இளைஞனின் போராட்டத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். எப்படி சிம்பிளாய் எடுக்கலாம் எனச் சொன்ன படம் அல்ல, பாடம்.

ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா

‘சொல்வதை சுவாரஸ்யமாகச் சொன்னால் போதும், பெரிய லாபம் பார்க்கலாம்’ என்று டோலிவுட்டுக்கு நம்பிக்கை கொடுத்த கதை. ஸ்வரூப் என்ற இளைஞரின் இயக்கத்தில், இங்கிலாந்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தெலங்கானாவைச் சேர்ந்த நவீன் பொல்லிஷெட்டி என்ற இளைஞர் நடித்த படம் இது. இப்போது இருவரும் இந்திவரை பிஸி.

ஜதி ரத்னாலு

கதை சொன்னாலே ஸ்பாய்லர்தான். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்து மீளும் இளைஞர்களின் கதை. என்ஜாய் பண்ண செம சினிமா. ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயாவின் ஹீரோ நவீன் நடித்த இரண்டாவது படம். தமிழில் ரீமேக் செய்யத் தயாராகிவருகிறது தயாரிப்புத் தரப்பு.

மது வதலரா

ரித்தேஷ் ராணா என்ற இளைஞர் இயக்கிய இந்த த்ரில்லருக்கு இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது. சரக்கு மட்டுமே காரணமல்ல. செம திரைக்கதையும்தான்.

இப்படி நிறைய படங்கள் டோலிவுட்டின் மைய நீரோட்டத்தையே மாற்றிக்காட்டின. இப்போது மாதம் அரை டஜன் புதுப்படங்களாவது ஓடிடியில் இப்படி ரிலீஸாகி நம்பிக்கை கொடுக்கிறது. ஜெய் டோலிவுட்!