ஆங்ரி பேர்ட் த்ரிஷா, கேரட் கேக் ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபீலிங் அமலா பால்... சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup
தான் யோகா செய்யும் போட்டோ அல்லது ஏதாவது அறிஞர்கள் சொன்ன மேற்கொள்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமலா பால் பதிவிடுவது வழக்கம். அப்படி இப்போது "உங்கள் மதம், உங்கள் நிறம் அல்லது பிறந்த நாட்டோடு நீங்கள் இன்னும் பற்றுடன் இருந்தால், உண்மையில் நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று ஃபீல் செய்திருக்கிறார் அமலா பால்.
சமீரா ரெட்டி மேக்கப் டிப்ஸை வீடியோவாகக் கொடுத்ததைப் போல தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்காக சில டிப்ஸ்களை வீடியோவாகப் பேசி அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், நடிகை அமைரா தஸ்தூர். "புளித்த அரிசி நீர் தலைமுடிக்கு வலிமை தரும் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கும். நான் வாரத்துக்கு மூன்று முறை என் தலைமுடியை புளித்த அரசி நீரால் அலசுகிறேன். வாரத்தில் மூன்றாவது முறை வழக்கம்போல ஹேர் கண்டிஷனரை பயன்படுத்திக்கொள்ளலாம். பிறகு, அரசி, தேங்காய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தினால் சருமம் பொலிவடையும்" என்று டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார்.
இனவெறிக்கு எதிராகக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்துவரும் நடிகை எமி ஜாக்சன், "இனவெறிக்கு எதிரான கருத்தை வெளியிடுவது வெறும் மேற்பூச்சு உரையாடலோ, சில நாள்களில் மறந்துவிட்டு அடுத்த பிரச்னைக்கு செல்வதோ அல்ல. இது ஒரு வழியாக மாற வேண்டும். ஆன்ட்டி ரேசிஸத்தை முன்னிலைப்படுத்த, கல்வி கற்பிக்க, செயல்படுத்த எனது தளத்தை பயன்படுத்த நான் சபதம் செய்கிறேன். என் மகனையும் வருங்கால குழந்தைகளையும் அன்பான, இரக்கமுள்ள... இனவெறி, நிறபாகுபாடுகளுக்கு எதிரான மனிதர்களாக வளர்ப்பேன் என்றும் உறுதி செய்கிறேன். பெற்றோர்களாகவும் தாய்மார்களாகவும், வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் பொறுப்பு. இந்தக் கொடுமைகள் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த அவர்களின் மனநிலையை நாம் உண்மையில் உருவாக்க முடியும். தோல் நிறத்தைப் பொருள்படுத்தாமல் சமத்துவத்துக்காக நிற்கும் எங்கள் மகன்களையும் மகள்களையும் இனவெறிக்கு எதிரானவர்களாக வளர்ப்பது நமக்கு கடமை" எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கேரளாவில் கருவுற்ற யானை, வெடிவைத்த அன்னாசிப் பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யானைக்கு இரங்கல் தெரிவித்தும் இந்தச் செயலைக் கண்டித்தும் த்ரிஷா, தமன்னா, வரலட்சுமி, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் த்ரிஷா, ''மனிதர்கள்தான் வைரஸ். #riphumanity'' என ஆதங்கப்பட்டிருக்கிறார். காஜல் அகர்வால் #wearethevirus எனக் குறிப்பிட்டு இறந்த யானையின் வயிற்றுக்குள் இருந்த சிசு யானையின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
முடிந்துபோன உலக உடன்பிறப்புகளின் நாளுக்காகத்தான் தன் தங்கையுடன் இருக்கும் சிறுவயது போட்டோவைப் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகிறார் ஆண்ட்ரியா. தொடர்ந்து, #betterlatethannever என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருக்கிறார். ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் யார் என்று தெரிகிறதா எனப் பகிரப்பட்டு வருகிறது.
கீர்த்தியின் சாக்லேட் தோசை, ஆண்ட்ரியாவின் பிரவுனி ஆகியவற்றைத் தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் சமைப்பதை போட்டோ எடுத்து பதிவிடுகிறார். தான் செய்த சர்க்கரை இல்லாத கேரட் ஓட்ஸ் கேக்கை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
