Published:Updated:

90'ஸ் கிட்ஸின் நம்பிக்கையே... ஜெஸ்ஸியை மறந்தாலும் மனம் ஜானுவை எப்போதும் மறக்காது! #HBDTrisha

த்ரிஷா
த்ரிஷா

ஆமாம், 90'ஸ் நாஸ்டால்ஜியா படம் என்றதும் அவர் நினைவுக்கு வந்த ஹீரோயின் த்ரிஷாதானே!

யாரும் சிரிக்காதீங்க ப்ளீஸ்... ஆமாம்... நானும் 90'ஸ் கிட்தான். இன்னும் பேச்சிலர்தான். எனக்கும், 96 இயக்குநர் பிரேம்குமாருக்கும் ஒரே பார்வைதான். ஆமாம், 90'ஸ் நாஸ்டால்ஜியா படம் என்றதும் அவர் நினைவுக்கு வந்த ஹீரோயின் த்ரிஷாதானே!

1999-ல் 'ஜோடி'யில் தொடங்கி அப்படியே 'லேசா லேசா', 'மெளனம் பேசியேதே', 'சாமி', 'கில்லி', 'ஆயுத எழுத்து', 'திருப்பாச்சி', 'ஜி' என என் டீன் ஏஜ் பருவம் முழுக்க உங்கள் படங்கள்தான் பார்த்திருக்கிறேன் த்ரிஷா. அந்த டிகேட்டின் முடிவில் வந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸி வேற லெவல் ஃபீலிங்.

த்ரிஷா
த்ரிஷா
Screenshot from Sunnxt
படத்தில் ஜானுவுக்கும் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்திருக்கிறார். இப்போது நினைத்தால்கூட ஒருவித குற்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும், துணிந்து அவ்வுணர்வை மீறி ஜானுவை ரசிக்கவே தோன்றியது.

`96' ஜானுவாக அந்த வின்டேஜ் த்ரிஷாவைப் பார்க்கும்போது உடல் சிலிர்த்தது. கோவிந்த் வசந்தாவின் வயலின் ஸ்ட்ரிங்ஸோடு `விஜய் சேதுபதி - த்ரிஷா கிருஷ்ணன்' என `96' என்ற படத்தின் டைட்டிலை இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது இன்னும்கூட நினைவிருக்கிறது.

வெள்ளை கலர் ஸ்விஃப்ட்... கதவை ஒருவர் திறக்க மறுபடியும் கோவிந்த் வசந்தாவின் வயலின் ஸ்ட்ரிங்ஸ் வேலையைக் காட்டுகிறது. இருள் சூழ்ந்திருக்கும் அந்த நடைபாதையில் மஞ்சள் நிற சுடிதாரணிந்த எளிய தேவதையாய் நடந்து வருகிறார் த்ரிஷா. தொப்பை வைத்த அங்கிள்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் தாய்மார்கள், தாடி நரைத்த ராம் என இவர்களுக்கு மத்தியில் ஒட்டாத ஆளாக த்ரிஷா தெரிந்தாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவரின் மீதிருந்தது. 15 வருடங்கள் கழித்தும் `கில்லி' படத்தில் பொம்மைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் பொம்மைபோலவே இருந்தார். படத்தில் ஜானுவுக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்திருக்கிறார். இப்போது நினைத்தால்கூட ஒருவித குற்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும், துணிந்து அவ்வுணர்வை மீறி ஜானுவை ரசிக்கவே தோன்றியது. (ஏன்யா... உங்களையெல்லாம் பார்த்தா அவ்ளோ நல்லவங்க மாதிரி தெரியலையேய்யா)

த்ரிஷா
த்ரிஷா
Screenshot from Sunnxt

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் த்ரிஷாவின் என்ட்ரியே வருகிறது. ஆனால், அதுவரை அவர் கொடுத்திருக்கும் தாக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தத் தாக்கமே அவருக்கிருக்கும் பெரிய தடை. இதையெல்லாம் தகர்த்து தன் நடிப்பை முன்னிறுத்த வேண்டும். வந்தார்... பலரது பள்ளிக்காதலியின் பிரதிநிதியாக ஜானுவாக அங்கு வந்தார். அந்த முதல் இம்ப்ரஷனுக்கு கோவிந்த் வசந்தாவின் வயலின் ஸ்ட்ரிங்ஸ் நிறையவே உதவியது. வசனங்களாக வராத உணர்வுகளை ஏந்திச் சென்றது த்ரிஷாவின் எக்ஸ்ப்ரஷன்கள். இப்படியான உணர்வை அவ்வளவு எளிதில் ஒரு நடிகையால் கொடுத்துவிட முடியாது. நடை, உடை, பாவனையோடு நடிப்பிலும் அதிகம் மெனக்கெட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எத்தனை பேர் இருந்தாலும் ஜானுவின் கண்கள் ராமையே தேடும். இதைச் சொல்வது கொஞ்சம் க்ளிஷேதான். இருந்தாலும், சொல்ல வேண்டியது கடமை. இறுதியில், த்ரிஷாவுக்கு ராம் வந்தது தெரியவருகிறது. கூட்டுக்குள் இருந்து வெளிவந்த பட்டாம்பூச்சியாய்ச் சிறகடித்து அவரைக் காணச் சொல்கிறார் ஜானு. பள்ளிப்பருவத்தின் அதே தேடல். ராமை கடைசியாகப் பார்த்த நினைவுகளையே ஏந்திய கண்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை எவ்வளவு மாறியிருந்தாலும் அந்த ஏக்கத்தை அப்போதும் ஜானுவின் கண்களில் பார்க்க முடிந்தது. ராமுக்கு இன்னும் கல்யாணமாகவில்லையென தெரிந்தவுடன் ஒருவித குற்ற உணர்வுக்கு ஆளாகிறார் ஜானு. இதை வசனமேயின்றிக் கண்களில் வெளிக்கொண்டு வந்திருப்பார் த்ரிஷா.

த்ரிஷா
த்ரிஷா
Screenshot from Sunnxt

கடைசியில் கூட்டம் ஐந்தாகிறது. ஒருகட்டத்தில் ஐந்து, ராம் - ஜானு என்று இரண்டாகிறது, ஒரு வழியாக இருவரின் மௌனமும் கலைகிறது. ஹோட்டல் வாசலில் இருந்து ரூம் செல்வதற்குள் எண்ணற்ற எமோஷன்களைக் கடத்த ஜானுவால், ஸாரி த்ரிஷாவால் மட்டுமே முடிந்திருக்கும். எப்போதும் கண்களைவிட்டு வடியத் தயாராக இருக்கும் கண்ணீர்த் துளிகள், இப்போதுவிட்டால் பிறகு எப்போது பார்ப்பது என்கிற ஏக்கம், தன்னால்தான் ராம் திருமணம் செய்யாமல் இருக்கிறானா என்ற குற்ற உணர்வு இதை அனைத்தையும் அந்தக் குறிப்பிட்ட மீட்டர் இடைவெளியில் கொண்டு வந்திருப்பார்.

`உன்னை எங்க விட்டனோ அங்கயேதான் நிக்கிறேன்' என ராம் சொன்னதும் மறுபடியும் ரூமில் இருந்து ஹோட்டல் வாசலுக்கு ஓடுகிறார் ஜானு. இப்போது நிலை அப்படியே தலைகீழ். அந்த வழி ஒன்றுதான். ஆனால், அந்தப் பாதையில் இவர் வெளிக்கொண்டு வந்த உணர்வு வெவ்வேறு.

த்ரிஷா
த்ரிஷா
Screenshot from Sunnxt

இருவரும் இயலாமையை நினைத்து வெதும்பித் தவிக்கிறார்கள். இதைப் பார்க்கையில் `ராம்'களான ஆண்களுக்கே அதிக வலி இருப்பதாகத் தெரியும். ஒருவித பெருமிதம் ஏற்படும். ஆனால், அப்படியல்ல. தனியாக இருக்கும் ராம்கள் நினைத்தபடி இருக்கலாம், நினைத்த நேரத்துக்கு அழலாம், சிரிக்கலாம், ஊர் சுற்றலாம், பிடித்த வேலையைச் செய்யலாம். ஆனால், ஜானுக்களுக்கு அப்படியல்ல. சில பெண்கள், குடும்பத்திற்காக கல்யாணம் என்ற நிர்பந்தத்திற்குள் சென்றுதான் தீர வேண்டும். இப்படிப் பல `ஆக வேண்டும்களுக்கு தற்காலிக'த் தீர்வு, ஜானு அப்போது வெடித்து அழுத சில கண்ணீர்த்துளிகள் மட்டுமே. படத்தில் இப்படியான காட்சியமைப்புகளைக் காட்டவில்லையென்றாலும் சூழல் இதுதான் என்று த்ரிஷா வெளிக்கொண்டு வந்த நடிப்பும், உணர்வும்தான் இந்தப் படத்தின் உயிர்.

சில உணர்வுகளைக் கடந்து வசனங்களால்கூட கதையை வெளிப்படுத்த முடியும். ஜானு, தான் மனதில் எப்படி நடந்திருக்கலாம் என்று நினைத்து வைத்திருந்த காட்சியை அந்த காபி ஷாப்பில் ராமின் மாணவர்களிடம் சொல்கிறார். பின்னணியில் கோவிந்த் வசந்தாவின் பூரணம் இசையாய்க் கொஞ்சுகிறது. திரையில் த்ரிஷாவின் அழகியல் நிரம்பி வழிகிறது. எதைப் பார்ப்பது, எதைவிடுவது, அழுவதா, சிரிப்பதா என்று குழப்பத்தில் ஹார்மோன்கள் அலைக்கழிகின்றன.

த்ரிஷா
த்ரிஷா
Screenshot from Sunnxt

`காதலே காதலே' என்ற பாடல் வரி வந்தவுடன் கற்பனை உலகில் ஜானுவும் ராமும் கட்டிக்கொள்கிறார்கள். நிகழ் உலகில் த்ரிஷாவின் கண்கள். நடிக்க வெட்கப்பட்டு விஜய் சேதுபதி தலையைக் குனிந்துகொண்டார். த்ரிஷா விடுவதாய் இல்லை. மீண்டும் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள். ஆனால், இம்முறை `Puppy eyes'. கள்ளம் கபடமில்லாத கண்கள் அவை. விவரிக்க முடியாத உயிர் சிலிர்ப்புகள்.

ஜானுவாகிய த்ரிஷாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

`மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?' த்ரிஷாவை மிஸ் சென்னை ஆக்கிய அந்தப் பதில்! #VikatanOriginals
அடுத்த கட்டுரைக்கு