Published:Updated:

சிரஞ்சீவியைக் கண்டுகொள்ளாத ரஜினி... சூர்யாவுடன் ராஷி... மலரும் மல்லுவுட்! சோஷியல் மீடியா ரவுண்டப்

Trisha - சோஷியல் மீடியா ரவுண்டப்!
Trisha - சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. சோஷியல் மீடியா ரவுண்டப்!

நாஸ்டால்ஜியா நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்வதுதான் இப்போதைய டிரெண்ட். அந்த வகையில், வருடாவருடம் தென்னிந்திய சினிமாவின் 80’ஸ் பிரபலங்கள் ஒன்று சேரும் சந்திப்பு கடந்த வருடம் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடைபெற்றது. 10 வது வருடமாக நடக்கும் இந்தச் சந்திப்பை சிரஞ்சீவி தொகுத்து வழங்க நிகழ்ச்சி களைகட்டியது. அந்தச் சந்திப்பின் டான்ஸ் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிரஞ்சீவி.

சமீபத்தில் சோஷியல் மீடியாவில் `தி ரியல்மேன் சேலஞ்’ என்ற ஹேஷ்டேக்கில், டோலிவுட் பிரபலங்கள் பலர், வீட்டில் தாங்கள் என்னென்ன வேலை செய்கிறோம் என ஒருவரை ஒருவர் சேலஞ்ச் செய்து டேக் செய்தது வைரலானது. அதில் சிரஞ்சீவி தன் தாயாருக்கு வீட்டில் தோசை சுட்டுக் கொடுப்பதுபோல வீடியோ பகிர்ந்து இந்த சேலஞ்சுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் இயக்குநர் மணிரத்னத்தையும் டேக் செய்திருந்தார். ஆனால், ஹைதராபாத்தின் கோரிக்கைக்கு சென்னையில் நோ ரெஸ்பான்ஸ்!

சோஷியல் மீடியா வளர்ச்சியில் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை அணுகுவதும், ரசிகர்கள் பிரபலங்களை அணுகுவதும் எளிதாகிவிட்டது. இந்த நிலையில், பிரபலங்கள் அவ்வப்போது ரசிகர்கள் தங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை ஹேஷ்டேக் மூலம் கலந்துரையாடுவார்கள். அந்த வகையில் நேற்று மாலை #AskRaashi என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகை ராஷி கண்ணா.

`உங்களுக்குப் பிடித்த நடிகர் யார். லாக்டெளனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’ எனப் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர். அதில் ஒரு ரசிகர், `உங்களின் அடுத்த படங்கள் என்ன?’ எனக் கேட்க, ‘அருவா மற்றும் அரண்மனை-3’ எனப் பதிலளித்துள்ளார் ராஷி. இதன்மூலம் அவர், சூர்யாவின் `அருவா’ படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்தும் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் ‘செல்லமா’க வலம் வரும் த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே சோஷியல் மீடியா கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

Trisha
Trisha
90'ஸ் கிட்ஸின் நம்பிக்கையே... ஜெஸ்ஸியை மறந்தாலும் மனம் ஜானுவை எப்போதும் மறக்காது! #HBDTrisha

தனலக்‌ஷ்மி, ஜெஸ்ஸி, ஜானு எனத் தனது கதாபாத்திரங்களால் மனதைக் கொள்ளை கொண்ட நம்ம சென்னைப் பொண்ணு, பிறந்தநாளன்று ரசிகர்களின் வாழ்த்தால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். சென்னை, பெங்களூரு, மலேசியா என உலகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து வந்து குவிந்த வாழ்த்து வீடியோக்கள்தான் இதற்குக் காரணம். இந்த வீடியோக்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள த்ரிஷா, `நிச்சயம் இந்த அன்புக்கு உண்மையாக இருப்பேன். அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

#IforIndia என்ற அமைப்பு இந்திய பிரபலங்கள் பலரையும் ஒன்றிணைத்து லைவ் கான்செர்ட் ஒன்றை நேற்று ஃபேஸ்புக்கில் நடத்தியது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், கத்ரினா கைஃப், துல்கர் சல்மான் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதில் ரஹ்மான் தான் இசையமைத்த சில பாடல்களைப் பாடினார். கத்ரினா கைஃப், கரன் ஜோஹர், ஃபராகான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, பிசினஸ், மருத்துவம் என மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் இதில் பங்கேற்றனர். ஷாருக்கான் இதில் நேற்று பாடல்கள் பாடி ரசிகர்களை அசத்தினார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாருக்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் இந்தியா முழுவதும் ரத்து செய்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாகிறது. இந்நிலையில், இன்று முதல் கேரளாவில் சினிமாத்துறைக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு பல நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது கேரள அரசு. கொரோனா தொற்று ஆரம்பத்தில் கேரளாவில் அதிகமிருந்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து, சினிமாவில் இறுதிக்கட்ட பணிகளுக்கு அனுமதியளித்துள்ளது கேரள அரசு. இதைத் தொடர்ந்து தமிழக சினிமாத்துறை தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து, `பல தொழிற்துறைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளித்தது போல, நிபந்தனைகளுடன் சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு