லாக்டெளனால் ரிலீஸ் ஆகாமல் இருந்த பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள், OTT-யில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இதில், தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கருத்து மோதல் நிலவ, இன்னும் இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, தள்ளிப்போய்க்கொண்டிருந்த சந்தானம் நடித்த `சர்வர் சுந்தரம்’ படம் OTTயில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கியும் சமீபத்தில் `சர்வர் சுந்தரம் படத்தை OTT-யில் வெளியிடலாமா?’ என்று ட்வீட் செய்திருந்தார்.
தற்போது, ``தமிழ்ப்படங்கள் சரியாக மதிப்பிடப்படுகிறதா எனத்தெரியவில்லை. இன்னும் OTT தளங்களுக்கு, கோலிவுட் என்றால் என்னவென்று சரியாகப் புரியவில்லை. `சர்வர் சுந்தரம்’ நேரடியாக தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யப்படும். இது எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி. குறிப்பாக சந்தானம் ரசிகர்களுக்கு’ என ட்வீட் செய்துள்ளார். இதிலிருந்து, `சர்வர் சுந்தரம்’ திரைப்படம் OTT-யில் ரிலீஸ் செய்யப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

இயக்குநர் கெளதம் மேனனுடன் ஒரு புராஜெக்ட்டில் கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. லாக்டெளனால் வீட்டில் இருந்தபடியே, இயக்குநர் கெளதம் குறிப்புகள் கொடுக்க அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்திருந்தார். `என்னவாக இருக்கும்?’ என்று சஸ்பென்ஸ் நீடிக்க, அதைத் தற்போது உடைத்திருக்கிறது படக்குழு.
கெளதம் மேனன் இயக்கத்தில் `கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஷார்ட் ஃபிலிம் வெர்ஷன் இது. இதற்கான டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் சினிமாத்துறையில் இருக்கும் கார்த்திக் லாக்டெளனால் சோர்வைடைய அவரை ஜெஸ்ஸி (த்ரிஷா) போனில் தேற்றுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
நேற்று `அன்னையர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன் அம்மாவுடன் இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மட்டுமல்லாமல், நயன்தாரா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து, `வருங்காலத்தில் என் குழந்தையின் அம்மா’ என்ற கேப்ஷடனுடன் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணித் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி. ஆங்கரிங், டான்ஸ், அவ்வப்போது நடிப்பு என பிஸியாக வலம் வருபவர், இந்த க்வாரன்டீன் டைமில் செல்ஃப் மோட்டின்வேஷன் விஷயங்களை கைப்பட எழுதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனது ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், `உங்கள் உறவு விலகலாம், உங்கள் தன்னம்பிக்கை அதனால் குலையலாம், சுற்றி இருப்பவர்கள் உங்களைக் குறித்து தவறாகப் பேசலாம். ஆனால், அதெல்லாம் தேவையில்லாதது. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். தேவையில்லாததை மனதிலிருந்து தூக்கி எறிந்து உங்கள் வேலையில் முழுக் கவனத்தைச் செலுத்துங்கள். நீங்கள்தான் வெற்றியாளர்’ என எமோஷனலாக பதிவிட்டுள்ளார் டிடி.

சிநேகா- பிரசன்னா ஜோடி, தங்களது 8-வது திருமண நாளை அவர்களது க்யூட்டான புகைப்படங்களைப் பகிர்ந்து இன்று கொண்டாடுகிறார்கள்.
`எட்டு வருடம் இந்தப் பயணம் நிறைய ஸ்வீட் மெமரீஸ்களை கொண்டது. இன்னும் பல வருடங்கள் இதுபோல இணைந்து வாழ்வோம்’ என தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.