Published:Updated:

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்னை நெகிழ வெச்சிட்டாங்க! - திருச்சி சரவணகுமார் ஷேரிங்ஸ்

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

தமன்னா கொஞ்சம் கூட சீன் போட மாட்டாங்க. முதலில் எல்லாரும் அவங்ககிட்ட பேசவே பயந்தாங்க.

இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் பலரும் சின்னத்திரையில் தங்கள் பயணத்தை தொடங்கியவர்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இவர்களின் வெற்றி ஃபார்முலாவைப் பின்பற்றி வெள்ளித்திரையில் கால்பதித்திருக்கிறார் டி.எஸ்.கே என அழைக்கப்படும் திருச்சி சரவணக்குமார். கை நிறைய திரைப்படங்களுடன் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தவரை சந்தித்துப் பேசினோம். தன் வெள்ளித்திரை அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டார்..

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

``குறும்படம், தொகுப்பாளர், காமெடி ஷோ-ன்னு கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி இப்போ வெள்ளித்திரையில் கால்பதிச்சிருக்கேன். பெட்ரோமாக்ஸ் படம் மூலமா எனக்கு சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்னு நம்புறேன். என்னோட 13 வருடப் போராட்டத்துக்குக் கிடைச்ச பலனாதான் இதைப் பாக்குறேன். 2007-இல் தொடங்கிய இந்த நீண்ட பயணத்துல நான் வேலை செய்யாத டிவி சேனலே இல்லைன்னு சொல்வேன். டிஸ்கவரி சேனல் தவிர எல்லாத்துலயும் பர்ஃபார்ம் பண்ணியாச்சு. கலக்கப் போவது யாரு சீசன் 7 வின்னரானது என் லைஃப்ல பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. சின்னத்திரையில் ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து பண்ணுவேன். இது எல்லாத்துக்குமே காரணம் சினிமாவில் எப்படியாச்சும் சாதிக்கணும்னுதான். என்னோட கனவு கொஞ்சம் கொஞ்சமா நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. இதுவரை ஒரு 7 படங்களில் கமிட் ஆகியிருக்கேன். விஜய் சேதுபதி அண்ணன் கூட `புறம்போக்கு’ படத்துல நடிச்சிருக்கேன். விமல், சமுத்திரக்கனி நடிச்சிருக்கும் `காவல்’ படத்துலயும் நடிச்சிருக்கேன். அண்மையில் ரிலீஸ் ஆன சிக்சர் படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடிச்சிருக்கேன். அப்புறம் நான் நடிச்ச பெட்ரோமாக்ஸ் திரைப்படம், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகயிருக்கு. எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும்னு நம்புறேன்.

பெட்ரோமாக்ஸ் அனுபவம்...

தமன்னா லீட் ரோலில் நடிக்கும் இந்த ஹாரர் காமெடி படத்துல யோகிபாபு, பகவதி, காளி வெங்கட், சத்யன்,முனீஸ் காந்த் -ன்னு ஒரு பெரிய காமெடி பட்டாளமே நடிச்சிருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டே செம கலகலப்பா இருக்கும். தமன்னா ரொம்ப நல்ல டைப். நான் திரையில் பார்த்து வியந்த ஒரு நடிகையோட சேர்ந்து நடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. தமன்னா கொஞ்சம் கூட சீன் போட மாட்டாங்க. முதலில் எல்லாரும் அவங்ககிட்ட பேசவே பயந்தாங்க. நான்தான் போய் முதலில் அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சேன். அவ்வளவு நட்பா பேசினாங்க. அப்புறம் அப்படியே எல்லாரும் நல்லா பேச ஆரம்பிச்சிட்டோம். ரொம்ப அழகா தமிழ் பேசுறாங்க.

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

அப்புறம் யோகி பாபு அண்ணாவைப் பத்திச் சொல்லவே வேணாம். அவரும் செம டைப். லொள்ளு சபா டிவி ஷோவில் சின்ன ரோலில் தான் நடிச்சிருப்பாரு. இன்னைக்கு ரிலீஸாகும் அத்தனை படங்களிலும் அவர் இருக்காரு. சிவகார்த்திகேயன் அண்ணா, சந்தானம் இவங்கலாம் எப்படி சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தாங்களோ அப்படிதான் யோகி பாபு அண்ணனும் வந்தாரு. இவங்க எல்லாருமே எனக்கு இன்ஸ்பிரேஷன். ஷூட்டிங் நடக்கும்போது அவரின் டைமிங் சென்ஸ்லாம் பார்த்து வியந்துட்டேன். இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு நிறைய இடங்களில் நல்ல ஐடியா கொடுத்தாரு.

இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். எத்தனையோ முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கும்போது இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்து, `உன்னால முடியும். நீ நடி'ன்னு சொன்னார். நான் நிஜத்துல ரொம்ப சினிமா பைத்தியம். இந்தப் படத்துலயும் அப்படியான ஒரு கேரக்டர்லதான் நான் நடிச்சிருக்கேன்.

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

ரோல் மாடல்...

என்னோட ரோல் மாடல்-னு இரண்டு பேரைச் சொல்லுவேன்.. சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி. சிவா அண்ணா எங்க ஊர்க்காரர். எங்களை மாதிரி சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வரும் எல்லாருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன். அவரோட ஃபார்முலாவைத்தான் நாங்க எல்லாருமே ஃபாலோ பண்றோம். அவர் நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட. விஜய் சேதுபதி அண்ணா கூட இரண்டு படங்கள் பண்ணிட்டு இருக்கேன். அவரோடு நெருங்கிப் பழகப் பழக அவரின் கேரக்டர் ரொம்பப் பிடிக்குது. எல்லாருமே அவரை நல்ல நடிகன்னு பாராட்டினாலும், முன்னாடி இருந்த மாதிரிதான் இப்பவும் இருக்காரு. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு. என்னதான் சினிமாவில் பெரிய வெற்றிகளைப் பார்த்தாலும், அந்த கெத்து கொஞ்சம்கூட காமிச்சிக்கமாட்டாங்க. எந்த பந்தாவும் காமிசிக்கமாட்டாங்க. நான் சும்மா சொல்லல. இரண்டு சம்பவங்கள உதாரணமா சொல்றேன்.

விஜய் சேதுபதி அண்ணாகூட நடிக்க நான் புறம்போக்குப் படத்தில கமிட் ஆனது அவருக்குத் தெரியாது. ஆனால், அதற்கு முன்னாடியே எங்களுக்குள்ள சின்ன அறிமுகம் இருந்துச்சு. அவரோட பீட்சா திரைப்படம் வெளியானப்போ சன் டிவில என் ஷோவுக்கு விருந்தினரா வந்தாரு. அவர பார்த்ததும், `ஜி நீங்க செம்மய்யா நடிக்கிறீங்க'-ன்னு சொன்னேன். அதற்கு அவர், `ஜீ நீங்களும் காமெடி ஷோ, மிமிக்ரிலாம் செமய்யா பண்றீங்க'-ன்னு என்னைப் பாராட்டினார். எனக்கு வியப்பாகிடுச்சு. அதன்பிறகு அவரோட வளர்ச்சி வேற லெவலில் இருந்துச்சு. புறம்போக்கு பட ஷூட்டிங் தொடங்கினப்போ, நான் ஸ்பாட்ல நிக்கிறேன் யாருமே என்னைக் கண்டுக்கல. எல்லாருமே பிஸியா இருந்தாங்க. விஜய் சேதுபதி அண்ணன் திடீரென என்னைப் பார்த்து கை அசைச்சார். நான் என்னை மறந்திருப்பாருன்னு நினைச்சேன். `ஹே சரவணா என்ன எப்படியிருக்க?’ அப்படின்னு கேட்டாரு. நான் அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்கிட்டேன். `வா உட்காரு.. சரவணனுக்கு சேர் போடுங்க' அப்படின்னு மேலும் என்னை அசர வெச்சிட்டார்.

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

அப்புறம் ஒரு நாள் ஷூட் நடந்திட்டு இருந்தப்போ எனக்கு பெரிய டைலாக் பேச வேண்டியிருந்துச்சு. நான் கொஞ்சம் பதற்றத்தில் தப்புத் தப்பா பேசிட்டு இருந்தேன். குளோஸப் ஷாட் வேற.. ரொம்பவே பயந்துட்டேன். அப்போ சேதுபதி அண்ணன் என் பக்கத்துல வந்து முதுகுல தடவிக் கொடுத்து `டேய், நீயெல்லாம் டிவி-யில எவ்வளவு சூப்பரா பர்ஃபார்ம் பண்ணுவ. இங்க வந்து ஏன் இப்படி திணறி நிக்குற. உன்னால முடியும் பண்ணு’-ன்னு சொன்னார். அடுத்த டேக்லையே அந்த டயலாக் பேசி முடிச்சிட்டேன். ஷாட் முடிஞ்சதும் அவரை கட்டிப்பிடிச்சு நன்றி சொன்னேன். அவர் கூட இருந்தாலே ஒரு பாசிடிவ் எனர்ஜி வந்துடும்.

ஒரு திரைப்பட ஷூட்டிங் அப்போ ரோபோ சங்கர் அண்ணன பார்க்கப் போயிருந்தேன். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அண்ணாதான் ஹீரோ. யாரோ டி.எஸ்.கே-ன்னு என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. தூரத்துல ஒருத்தர் உயரமா மாஸ்க் போட்டுக்கிட்டு, குடை வெச்சிட்டு நின்னுட்டு இருந்தார். அவர் என்னை நெருங்கி வந்து மாஸ்க் கழட்டினார். சிவகார்த்திகேயன் அண்ணா அது. என்னால நம்பவே முடியல. அவர் வந்து சாதாரணமா,`என்ன டி.எஸ்.கே நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் சவுக்கியமா? வாங்க உட்காருங்க. சேர் போட சொல்லட்டுமா?' -ன்னு பேசினார். அவரோட அந்த அன்பு திக்குமுக்காட வெச்சுடுச்சு.

டி.எஸ்.கே
டி.எஸ்.கே

நான் கலக்கப் போவது யாரு சீசன் 7 டைட்டில் ஜெயிச்சப்போ என்னையும் அசாரையும் கூப்பிட்டு ஒரு வாட்ச் பரிசு கொடுத்து, இனிமே உங்க நேரம் எப்பவுமே நல்ல நேரம்தான்னு சொல்லி வாழ்த்தினார். விஜய் சேதுபதி அண்ணா என் முதுகுல தட்டிக் கொடுத்து என்கரேஜ் பண்ணதும் சிவகார்த்திகேயன் அண்ணன் வாட்ச் கொடுத்து வாழ்த்தினதும் என் வாழ்க்கையில மறக்கவே முடியாதவை. அப்புறம் நான் எப்பவுமே நன்றி சொல்ல விரும்புற ஒரு நபர் ஈரோடு மகேஷ். அவர்தான் இப்போ வரைக்கும் என்னோட மென்டார். இவர்கள் அனைவரின் வழிநடத்துதல்ல நான் கண்டிப்பா சினிமாவில் ஜெயிப்பேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு