Published:Updated:

கலகத் தலைவன் விமர்சனம்: கலகம் உண்டாக்குபவன், தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?

கலகத்தலைவன்

படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக 'பிக் பாஸ் புகழ்' ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். உதயநிதியைத் தேடித்தேடி நெருங்கும் காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கின்றன.

Published:Updated:

கலகத் தலைவன் விமர்சனம்: கலகம் உண்டாக்குபவன், தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?

படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக 'பிக் பாஸ் புகழ்' ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். உதயநிதியைத் தேடித்தேடி நெருங்கும் காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கின்றன.

கலகத்தலைவன்
ஒரு சீசனில் தமிழ் சினிமாவில் கார்ப்பரேட்டுகளைப் பற்றி வரிசையாக படங்கள் வந்தன. அவை பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகள் என்ற தனிப்பட்ட நபரை மட்டும் வில்லன்களாகச் சித்திரித்தன. அதே கார்ப்பரேட் ஆனால், அதன் அரசியலைக் கொஞ்சம் சமகால குறியீடுகளுடன் அணுகினால் அதுதான் `கலகத் தலைவன்'. `தடையறத் தாக்க', `மீகாமன்', `தடம்' எனக் களம் மற்றும் விறுவிறு திரைக்கதைகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மகிழ் திருமேனியின் `கலகத் தலைவன்' தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?  

ஃபரிதாபாத்தில் இருக்கும் வஜ்ரா என்ற நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலையில் புதுவகை கனரக வாகனத்தை உற்பத்தி செய்கிறது அந்நிறுவனம். அவை சந்தைக்கு அறிமுகமாகும் முன் அந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபாடு அதிகம் உருவாகும் என்பது தெரிய வருகிறது. அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால், உடனடியாக அதை மறைக்க அந்நிறுவனத்தின் அதிபர் முயற்சி செய்கிறார். ஆனாலும் அந்த ரகசியம் எப்படியோ வெளியே கசிந்து விடுகிறது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடிகளில் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகிறது. 

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக செயல்படும் Whistleblowerகள், நிறுவனத்தில் வளர்ச்சியடையாமல் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் பெரும் மூளைகள் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார் நிறுவனர். கம்பெனிக்குள்ளே இருந்துகொண்டே ரகசியத்தை கசிய விடும் நபர்களையும் அவர்களால் பலனடையும் நபர்களையும் கண்டறிந்து அழிக்கவும், ரிப்போர்ட் கொடுக்கவும் நியமிக்கப்படுகிறார் கார்ப்பரேட்டுகளுக்காக அண்டர்கிரவுண்ட் வேலை செய்யும் பவர்ஃபுல் கில்லர் ஆரவ். 

கார்ப்பரேட்டுகளுக்கு தண்ணி காட்டும் சிங்கிள் மேன் உதயநிதி யார்..? அவர் ஏன் இதையெல்லாம் இவ்வலவு மெனக்கெட்டு செய்கிறார்..? அவருக்குப் பின்னால் இருப்பது யார்..?  வேட்டை நாய்போல வெறிகொண்டு துரத்தும் ஆரவ்வின் கொலவெறி சேஸிங்கில் உதய் சிக்கினாரா... தப்பித்தாரா..? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'கலகத் தலைவன்'.   

நாம் அதிகம் கேள்விப்படாத, சில கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களும் அதன் கொடுங்கரங்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியன் வரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும், கார்ப்பரேட்டுகளுக்காக வேலை செய்யும் கூலிப்படை மாஃபியாக்கள் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான விறுவிறு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. கார்ப்பரேட்டுகளின் அரசியலுக்கு எதிராக பக்கம் பக்கமாய் வசனம் பேசாமல், வலிந்து திணிக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் ஒரு ரேஸி த்ரில்லரை சுவாரஸ்யம் குறையாமல் சொல்ல முடியும் என்பதைத் திரையில் காட்டியமைக்கே மகிழை மனம் மகிழ்ந்துப் பாராட்டலாம். 

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். அதிகம் பேசாமல் தன் அடையாளங்களை மறைத்து வாழும் அந்த திருமாறன் பாத்திரத்தில் கோபம், அழுகை, காதல், ஆக்‌ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார். அவருக்குத் தகுந்தாற்போன்ற மிக இயல்பான ஆக்‌ஷன் காட்சிகளைக் கதையில் வடிவமைத்திருப்பது அந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக உதயநிதியின் ஆக்‌ஷனுக்கு உதவும் அவர் இளம்பிராயத்தின் சம்பவங்களைச் சொல்லலாம்.

கதாநாயகியாக நிதி அகர்வால். உதயநிதியிடம் காதலைச் சொல்லாமல் உள்ளுக்குள் உருகும் இடங்களில் ஐஸ்க்ரீம் போல நம் மனதை அள்ளுகிறார். வழக்கமாய் மகிழ்திருமேனியின் படங்களில் லவ் எபிசோட் க்யூட் பொக்கேவைப்போல இருக்கும். கலகத் தலைவனிலும் காதல் எபிசோட் அழகாய் இருந்தாலும் பரபர சேஸிங் காட்சிகளுக்கு மத்தியில் காதல் காட்சிகள் விறுவிறுப்பைக் குறைக்கின்றன.

பெண்களின் குணாதிசயங்களை அவர்களின் ஹேண்ட்பேக்கை வைத்து உதயநிதி சொல்லுமிடம், 'அந்தக் காலத்துல பசங்கதான் பொண்ணுங்களை ரிஜெக்ட் பண்ணுவாங்க. இது நம்ம காலம். அடிச்சு ஆடுங்க பொண்ணுங்களா!' என ஒரு வயதான பெண் பேசுமிடம் போன்றவை மகிழ் டச். 

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக  'பிக் பாஸ் புகழ்' ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். உதயநிதியைத் தேடித்தேடி நெருங்கும் காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கின்றன. தன்னிடம் சிக்கிய சந்தேக நபர்களை ஆரவ் கொடூரமாகச் சித்திரவதை செய்வது கொஞ்சம் ஓவர் வன்முறை. குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் காட்சிப்படுத்தியதில் கொஞ்சம் கவனம் வேண்டும் இயக்குநரே!

மிக முக்கியமான, ஆனால் 'வழக்கமான' ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார். இவருக்கு என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே நம்மால் உணர முடிவது மட்டும் சின்ன சறுக்கல். இன்டர்வெல்லுக்கு முன் வரும் திருச்சி ரயில்வே ஸ்டேஷன் காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

படம் முழுக்க கேன்டிட் உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜின் கேமரா. ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தேவையான ஃபாஸ்ட்-கட் எடிட்டிங்கில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் என்.பி.ஶ்ரீகாந்த். ஒரு ரேஸி த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையை ஶ்ரீகாந்த் தேவா வழங்க, இரண்டு பாடல்களில் ஆரோல் கரோலி மனதை வருடிச் செல்கிறார். இருந்தும் இரண்டாவது பாடல் வரும் இடம் ஸ்பீட் பிரேக்.

கலகத் தலைவன்
கலகத் தலைவன்

கார்ப்பரேட் அத்துமீறலையும் அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தையும் ஒரு புள்ளியில் நேர்த்தியாக இணைத்துக் கதை சொன்னதற்கே மகிழ்திருமேனிக்கு அழுத்தமாகக் கைகுலுக்கலாம். ஆனால், இறுதியில் வரும் ரஷ்யன் மாஃபியா ரெபரன்ஸ் 'காதுல பூ' ரகம். ஆங்காங்கே சில லாஜிக் மீறல்களும் நெருடல்.

குறைகள் தாண்டி, மகிழ் திருமேனி படமென்றால் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது என்பதை கலகத் தலைவனும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.