`தொரட்டி' முதல் `நெடுநல்வாடை' வரை... 2019-ன் Underrated தமிழ்ப் படங்கள்!
பெரிய ஹீரோக்கள் படங்களின் வெளியீடு, இயக்குநர் படங்களின் வெளிச்சத்தில் தொலைந்துவிடுவது, சரியான விளம்பரம் இல்லாதது என Underrated படங்களுக்கு நிறைய காரணம் உண்டு. அப்படி 2019-ல் வெளியான Underrated படங்கள் சில.
விருதுகளைவிட, மக்கள் தரும் வரவேற்பே ஓர் இயக்குநர் தன் படத்துக்கு எதிர்பார்க்கும் பெரும் அங்கீகாரம். நல்ல படங்களை மக்கள் எப்போதுமே வரவேற்றும் வந்துள்ளனர். என்றாலும், சில புதிய முயற்சி படங்களும், சில சிறு பட்ஜெட் படங்களும் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்காமல் கடந்துவிடுகின்றன. பெரிய ஹீரோக்கள் படங்களின் வெளியீடு, இயக்குநர் படங்களின் வெளிச்சத்தில் தொலைந்துவிடுவது, சரியான விளம்பரம் இல்லாதது என Underrated படங்களுக்கு நிறைய காரணம் உண்டு. அப்படி 2019-ல் வெளியான Underrated படங்கள் சில.

கே 13
எழுத்தாளர்களுக்கு ஏற்படும் `Writer's Block'-ல் பாதிக்கப்பட்ட ஒரு படைப்பாளி, தன் அடுத்த படைப்பை உருவாக்க எந்த எல்லை வரைக்கும் செல்ல முடியும் என்பதற்கான ஒரு த்ரில்லர் கற்பனைதான் `கே 13'. இந்தக் கற்பனைக்குள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டைப் பொருத்தி, ஒன்றரை மணிநேரம் பார்வையாளர்களைப் பரபரப்பிலேயே வைத்திருந்தது இந்தப் படம். அருள்நிதியின் மிகைப்படுத்தாத நடிப்பு, நேர்த்தியான ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அம்சங்கள் ஏராளம்.

100
போலீஸ் கதைகளில் க்ரைம் கலந்த த்ரில்லர் கதை சொல்வது அத்தனை கடினமான காரியமில்லை. அந்தக் கதைக்குள் இருக்கும் புதுமையே அவசியம். உண்மைத்தன்மைக்கும் ஹீரோயிசத்துக்கும் இடையே ஒரு கோடிட்டு, அதில்தான் திரைக்கதை எழுத வேண்டும். அப்படிக் கச்சிதமாக எழுதப்பட்ட படமே சாம் ஆன்டனின் `100'. அதுவும் அதர்வாவின் தோற்றத்திற்கேற்ப ஒவ்வொன்றிலும் வொர்க் பண்ணியிருப்பார் இயக்குநர். காவல் கட்டுப்பாட்டு அறை எனப் பெரிதும் காட்டப்படாத களத்தில், அண்டர்வேர்ல்டு ஆள்கடத்தல் என அதிகமாகப் பார்க்கப்பட்ட சிக்கலைப் பேசிய படம் இது.

ஜீவி
பொதுவாக, சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள், எந்த அறிவியல் கோட்பாட்டை மையப்படுத்தி எழுதப்படுகின்றதோ அவ்வாறே திரைக்கதையும் நகரும். `ஜீவி' ஒரு படி மேலேறி, தனக்கான உலகத்தையும் விதியையும், ஒருவித மேட்டிமைத் தனத்தையும் நிர்யணயித்துக்கொண்டது. பதற்றம், பயம் என இரண்டு உணர்வுகளையும் திரைக்கதையில் இருக்கும் அதே தொனியில் எடுத்து காட்சிப்படுத்தியது `ஜீவி'யின் சிறப்பம்சம்.

ஹவுஸ் ஓனர்
காதல் வாழ்வில் எத்தனை முக்கியமானது என்பதை 80 வயதுத் தம்பதியின் வாழ்க்கையை வைத்து அழகாகச் சொன்ன படம் `ஹவுஸ் ஓனர்'. இந்தப் படத்தின் கதை என்பதைத் தாண்டி, இதில் காதல் காட்டப்பட்ட விதம்தான் படத்தின் அடித்தளம். சென்னையைத் தாக்கிய 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது அந்தத் தம்பதி அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே படத்தின் கதை. லட்சுமி ராமகிருஷ்ணனின் அளந்து எழுதப்பட்ட வசனங்கள், மென்மையான காட்சியமைப்பு என ஒரு ஃபீல் குட் அனுபவத்தைத் தரும் இந்த ஹவுஸ் ஓனர்.

தொரட்டி
ஒருவரின் வாழ்க்கையைப் படம்பிடிப்பது ஒரு வகை சினிமா என்றால், ஒரு வாழ்வியலையே படம்பிடிப்பது மற்றொரு வகை. `தொரட்டி' இதில் இரண்டாவது வகை. ஒரு புவியியல் அமைப்பையும் அதில் வாழும் மக்களையும் இயல்பு மீறாமல், உண்மைத்தன்மையோடு காட்சிபடுத்திய திரைப்படங்கள் மிகக் குறைவு. அந்த வகையில், 'தொரட்டி'யின் திரைக்கதை நம்பகத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருந்தது. பி.மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், சில சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

நெடுநல்வாடை
எளிய மனிதர்கள், தங்கள் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களை ஒரு எளிய திரைக்கதை மூலமாக காட்டிய படம் `நெடுநல்வாடை'. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் இணக்கமும் பிரிவும் எப்படியெல்லாம் ஒருவரின் எதிர்காலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டியது. பிரிந்த காதல் தரும் வலி, தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் உணர்வுப் போராட்டம், சாதியக் கட்டமைப்பின் குரூரம் என 'நெடுநல்வாடை' அதன் பார்வையாளர்களுக்குக் கடத்திய உணர்வுகளும் ஏராளம்.
அழியாத கோலங்கள் 2
பழைய காதலைத் திரும்பிப் பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது? அப்படித் திரும்பிப் பார்க்கும் காதல் எல்லா வேளைகளிலும் `96' ஆகவே இருந்துவிடுமா என்ன? கடந்த காலத்தில் நம் வாழ்வை அழகாக்கிய உறவை மீட்டெடுப்பது ஒருவேளை விபரீதத்தில் முடிந்தால், அதன்பின் வரும் இடர்களை எதிர்கொள்வதற்கு என்ன விதமான பக்கபலம் ஒருவருக்குத் தேவைப்படுகிறது என்பதே `அழியாத கோலங்கள் 2' கூறவரும் செய்தி. பாலுமகேந்திராவின் முதல் படத்தின் தலைப்பை எடுத்துவந்தாலும், அவருடைய 40 ஆண்டுக்கால சினிமாவுக்கான நினைவைப் போற்ற மட்டுமே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

காளிதாஸ்
தொழில்நுட்பமும் தனிமையும் தம் கூட்டுமுயற்சியில் மனிதனின் மனநிலையை எப்படியெல்லாம் மாற்றியமைத்திருக்கின்றன என்பதை த்ரில்லிங் திரைக்கதையுடன் காட்டிய படம் `காளிதாஸ்'. கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் எதிர்பார்ப்புகள் என்னென்ன, அவர்களுக்குள் இருக்கும் காதல் தொலைந்துபோவதற்கான காரணங்கள் போன்றவற்றையும் விவரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக க்ளைமாக்ஸில் வரும் சர்ப்ரைஸ் படத்தின் பெரிய பலம். நீண்டகாலமாக அண்டர் ரேட்டடாக இருந்த பரத்தின் திரைப்பயணத்தில் வெளிச்சம் பாய்ச்சிய படமாகவும் மாறியிருக்கிறது `காளிதாஸ்'.

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்
வைராக்கியமும் பழியுணர்வும் நிரம்பிய பெண் எந்த எல்லை வரைக்கும் செல்வாள் என்பதே `கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்'. குவென்டின் டரன்டினோவின் `கில் பில்' படத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்ட விதம்தான் இதன் செல்லிங் பாயின்ட். வட சென்னையைக் கதைக்களமாக எடுத்துக்கொண்ட மற்றுமொரு வன்முறைப் படம் என்பதையும் தாண்டி, படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தின் தீர்மானமான மனநிலை, அதைப் பிரியங்கா ஏற்று நடித்த விதம் என எல்லாமே`கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்'ஸை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்திவிட்டன.

தும்பா
தமிழ் சினிமாவின் புது முயற்சி `தும்பா'. லைவ் ஆக்ஷன் படத்தில், அனிமேட்டட் புலியை ஒரு கதாபாத்திரமாக வைத்து, வன விலங்குகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற சூழலியல் சார்ந்த கருத்தைச் சொல்லிய படம். வனத்தின் நிலப்பரப்பையும் அதன் தேவையையும் இயல்பிலிருந்து சற்றும் விலகாமல் பதிவு செய்திருந்தது `தும்பா'. மேலும், தமிழ் சினிமாவின் பாரம்பர்ய முறைப்படியெல்லாம் இல்லாமல், ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே இருக்கும் உறவை நட்பு என்ற அளவிலேயே வைத்துவிட்டு, படத்தின் மையத்தை மட்டுமே திரைக்கதையும் பேசியது.