Published:Updated:

சிரஞ்சீவி முதல் விஜய் தேவரகொண்டா வரை... டோலிவுட் ஹீரோக்களின் அடுத்த அட்டாக் என்ன?

எதையுமே பிரமாண்டமாக அணுகும் தெலுங்குத் திரையில் ஜொலிக்கும் நாயகர்கள் இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அவர்களின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய தொகுப்பு இது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1

தென்னிந்திய சினிமாக்களில் டோலிவுட் படங்களுக்குக் கொஞ்சம் மவுசு அதிகம். காரணம், முழுக்க முழுக்க கமர்ஷியல்தன்மை. உண்ணும் உணவிலிருந்து பார்க்கும் சினிமா வரை அனைத்திலும் மசாலா கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கேற்றாற்போல் தெலுங்கு சினிமா கொஞ்சம் காரசாரமாகவே படைக்கப்படுகிறது. பார்த்தாலே பனைமரம் எரிதல், கார்களைப் பறக்கவிடுதல், ஒரே அடியில் பத்துப் பேர் விழுதல் போன்ற தெறியான சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் மறு பக்கம் காதல், குடும்பம் என சென்ட்டிமென்டிலும் நம்மை உருக வைத்துவிடுவார்கள்.

நடிகர்களை கொண்டாட என்றும் தவறியதில்லை டோலிவுட். ஒரு நடிகரின் படம் ரிலீஸானால் படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்பதைத் தாண்டி அதைக் கொண்டாடி தீர்ப்பது வழக்கம். எதையுமே பிரமாண்டமாக அணுகும் தெலுங்குத் திரையில் ஜொலிக்கும் நாயகர்கள் இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அவர்களின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய தொகுப்பு இது!

2
Chiranjeevi

சிரஞ்சீவி :

`கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கை தனது 150-வது படமாக எடுத்துக்கொண்டு நடித்தார். அதனால்தான் படத்திற்கு `கைதி எண் : 150' எனப் பெயரிட்டனர். இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து முடித்துள்ளார், சிரஞ்சீவி. `சைரா நரசிம்மா ரெட்டி' எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். `துருவா', `ரேஸுகுர்ரம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இதில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் படம் வெளியாகிறது. இதன் தமிழ் வெர்ஷனில் சிரஞ்சீவிக்கு டப்பிங் கொடுக்கிறார், அரவிந்த்சாமி. இரண்டு வருடங்கள் கழித்து, வெளியாகும் சிரஞ்சீவி படம் என்பதால் இதைக் கொண்டாட மெகா ஸ்டார் ரசிகர்கள் வெயிட்டிங்! இந்தப் படத்தை முடித்துவிட்டு, கொரடாலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிரஞ்சீவி. அதில் அவருக்கு ஜோடியாக இலியானா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

3
Balakrishna

பாலகிருஷ்ணா :

ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் பயோபிக்கை தயாரித்து அதில் தனது தந்தையாகவே நடித்தார், பாலகிருஷ்ணா. என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கை `கதாநாயகடு' என்றும், அரசியல் வாழ்க்கை `மகாநாயகடு' என்றும் இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் வித்யா பாலன், ராணா, நித்யா மேனன், ஹன்சிகா, ரகுல் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு சரியாகக் கிடைக்கவில்லை. உடனே அடுத்த படத்துக்குத் தாவிவிட்டார் பாலகிருஷ்ணா. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் முதல் ஷெட்யூலை தாய்லாந்தில் எடுத்து முடித்த படக்குழு, இரண்டாவது ஷெட்யூலை ஹைதராபாத்தில் எடுத்து வருகின்றனர். இதில் அவருக்கு ஜோடியாக சோனல் செளஹான, வேதிகா, பூமிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். `ரூலர்' எனப் படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

4
Jr. N.T R, Ram charan

ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் :

`வினய விதய ராமா' படத்தைத் தொடர்ந்து, ராம் சரண் நடித்துவரும் படம் `RRR'. 1920-களில் ஆங்கிலேயர்களையும் பின், நிஜாம்களையும் எதிர்த்துப் போராடிய அல்லூரி சீதராமா, கோமரம் பீமா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது இந்தப் படம். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ராம் சரண் எந்தப் படத்தையும் கமிட் செய்யவில்லை. இதன் மற்றொரு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிக்கும் ஆக்‌ஷன் படங்களுக்கு எப்போதும் செம ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இந்தப் படத்திற்கு பிறகு, `கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

5
Allu Arjun

அல்லு அர்ஜுன் :

`நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதால் உடனே எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார் அல்லு அர்ஜுன். நிறைய இயக்குநர்களிடம் கதைகள் கேட்டவர் கொஞ்சம் அமைதி காத்தார். இப்போது த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் `அல வைகுந்தபுரம்லோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதே இயக்குநரின் இயக்கத்தில் `S\O சத்தியமூர்த்தி', `ஜுலாய்' ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் அல்லு. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'ஆர்யா 2', 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதை முடித்துவிட்டு, ஶ்ரீராம் வேணு இயக்கத்தில் `ஐகான்' என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து மூன்று படங்களின் அறிவிப்பு வந்ததால் ஸ்டைலிஷ் ஸ்டாரின் ரசிகர்கள் ச்சால ஹேப்பி!

6
Mahesh Babu

மகேஷ்பாபு :

மகேஷ்பாபுவைப் பொறுத்தவரை நிதானமாகத்தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். 2015-ல் இருந்தே வருடத்துக்கு ஒரு படம்தான் என்று நடித்து வருகிறார். `பரத் அனே நேனு' வெற்றிக்குப் பிறகு இவரின் 25வது படமான `மஹரிஷி' இந்த ஆண்டு வெளியானது. இந்தப் படம் வெளியான பிறகு, தனது சொந்தத் தயாரிப்பில் ஒரு படத்தை கமிட் செய்தார். `சரிலேரு நீக்கேவரு' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் ராணுவ அதிகாரி மேஜர் அஜய் கிருஷ்ணா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அனில் ரவிப்புடி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் காஷ்மிரில் எடுத்து முடித்து, இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு, தேவி ஶ்ரீ பிரசாத் இசை எனத் தயாராகி வருகிறது. இதில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார், தமன்னா. இந்தப் படத்தை ஜனவரி 2020 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் சமயத்தில்தான் இவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

7
Prabhas

பிரபாஸ் :

`பாகுபலி', `பாகுபலி 2' படத்திற்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவான படம், `சாஹோ'. இவரின் `பாகுபலி' புகழ்`சாஹோ' படத்தையும் உலகம் முழுக்க வெளியிடச் செய்தது. எதிர்பார்த்த அளவுக்குப் படத்தின் ரிசல்ட் இல்லை என்றாலும் பிரபாஸின் ரசிகர்கள் இவரின் அடுத்த படத்திற்காகக் காத்திருக்கின்றனர். ராதாகிருஷ்ண குமார் என்பவரின் இயக்கத்தில் ரொமான்டிக் காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு `ஜான்' எனப் பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 1970-களில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் நடக்கும் இந்தக் கதைக்கு பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைக்கிறார். `ஈரம்', `விண்ணைத்தாண்டி வருவாயா', `நண்பன்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக உடலை குறைத்து ரொமான்டிக் ஹீரோவாக மாறியுள்ளார், பிரபாஸ்.

8
Naga Chaitanya

நாகசைதன்யா :

திருமணத்திற்குப் பிறகு நாகசைதன்யா - சமந்தா ஜோடி இணைந்து நடித்த படம், `மஜிலி'. காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என ஃபேமிலி சப்ஜெக்டாக வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வெங்கடேஷுடன் இணைந்து `வெங்கி மாமா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், நாகசைதன்யா. இதில் ராஷி கண்ணா, பாயல் ராஜ்புத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்தை கமிட் செய்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையில் உருவாகும் இப்படத்தை 'ஃபிடா' படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்குகிறார். நாகசைதன்யா - சாய் பல்லவி ஜோடி இந்தப் படத்தின் மூலம் முதன்முறை இணைகிறது. ஹைதராபாத்தில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தவிர, `அதி நுவ்வு அதி நேனு' என்ற படத்தில் ராஷ்மிகாவுடன் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, 'பதாய் ஹோ' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

9
Nani

நானி :

கெளதம் தன்னனூரி இயக்கத்தில் நானி கிரிக்கெட் வீரராக நடித்து சூப்பர் ஹிட்டான படம், `ஜெர்ஸி'. இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரமொன்றில் ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தார். தற்போது இந்தப் படமும் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி இருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, `24' பட இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான படம், 'கேங்க்லீடர்'. இதைத் தொடர்ந்து நானி நடிக்கவிருக்கும் 'V' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் இது நானியின் 25வது படம். நானியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய மோகனகிருஷ்ணா இந்திராகாந்தி இப்படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகும் இப்படத்தில் அதிதி ராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நானி இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

10
Vijay Deverakonda

விஜய் தேவரகொண்டா :

`கீத கோவிந்தம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, `டியர் காம்ரேட்' படத்தில் நடித்தது விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காம்போ. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். `அர்ஜுன் ரெட்டி' படம் விஜய் தேவரகொண்டாவை இந்தியாவுக்கே பரிட்சையமாக்கியது. இப்போது ஆனந்த் அண்ணாமலை என்பவரின் இயக்கத்தில் `ஹீரோ' எனும் மல்ட்டிலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு, புரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தவிர, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 'மீக்கு மாத்திரமே செப்தா' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் `தெய்வமகள்' புகழ் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் வினோத் என்பவரின் இயக்கத்தில் ஃபேமிலி டிராமா கதையில் நடித்து வருகிறார், விஜய் தேவரகொண்டா. இவரை வைத்து பாலிவுட்டில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு