Published:Updated:

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல்... விஜய் சேதுபதிக்கு வரிசைகட்டி நிற்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இண்டஸ்ட்ரியில் தற்போது ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர், என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். லிஸ்ட் கொஞ்சமில்லை, ரொம்பவே நீளம்தான்.

லைம் லைட்டில் இருக்கும் எல்லா நடிகர்களையும் ஒரு குறிப்பிட்ட ஜானரில் சுருக்கிவிட முடியும். ஆனால், விஜய் சேதுபதியைத்தான் எந்தவொரு ஜானருக்குள்ளும் சுருக்கிவிட முடியாது. காரணம், திரைத்துறையில் தனக்கான இடம் இதுதான் எனத் தெரிந்தவுடன், எப்படியெல்லாம் வெரைட்டியாக நடிக்க முடியுமோ, எவ்வளவு படங்கள் நடிக்க முடியுமோ அவை அனைத்தையும் முயற்சி செய்துவருகிறார்.

தனது ஆரம்ப காலத்து சினிமாக்களில், `Uncredited role' என்றுதான் இவரது கதாபாத்திரத்தை முத்திரைகுத்தியிருப்பார்கள். அதன்பின் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொண்ட விஜய் சேதுபதி, தற்போது படத்தில் வரும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் `Special appearance' என்ற ஸ்பெஷல் மென்ஷன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இண்டஸ்ட்ரியில், தற்போது ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர், என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். லிஸ்ட் கொஞ்சமில்லை, ரொம்பவே நீளம்தான்.

‘லாபம்’ படக்குழுவினர்
‘லாபம்’ படக்குழுவினர்

ஜனநாதன் இயக்கும் `லாபம்', `காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கும் `கடைசி விவசாயி', வெங்கட் கிருஷ்ணா ரோகந்த் இயக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளிர்', தெலுங்கில் ஹீரோயினுக்கு அப்பா மற்றும் வில்லனாக நடிக்கும் `உப்பென்னா', சீனு ராமசாமி இயக்கிய `மாமனிதன்', டெல்லி பிரசாத் இயக்கும் `துக்ளக் தர்பார்', விருமாண்டி இயக்கும் `க.பெ.ரணசிங்கம்', முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என இந்தப் படங்கள் தவிர அமீர் கான் நடிக்கும் `ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் இந்தி ரீமேக்கான `லால் சிங் சத்தா', அல்லு அர்ஜூன் நடிக்கும் 20-வது படத்தின் வில்லன் என அறிவிக்கப்படாத சில படங்களும் இவரது லிஸ்ட்டில் இருக்கிறது.

முதலில் `லாபம்'. தனக்கு மிகவும் நெருக்கமான இயக்குநரான ஜனநாதனைப் பல முறை இவர் மேடையில் புகழ்ந்து பேசியிருக்கிறார். இதற்கு முன், `புறம்போக்கு' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். நண்பரான ஆறுமுககுமாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் விஜய்சேதுபதி. கௌதம் கார்த்திக் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கியவர்தான் ஆறுமுக குமார்.

தவிர, ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் எனப் பலர் இதில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விகடன் விருது விழா மேடையில் வெளியிடப்பட்டது. `லாபம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தற்போது பிஸியாக இயங்கி வருகிறது படக்குழு. இன்னும் 20 நாள்கள் மட்டும் ஷூட்டிங் மிச்சமிருப்பதாகவும், படத்தை மார்ச்சில் முடித்துவிட்டு, மே மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் இயக்குநரான ஆறுமுக குமார், ஒரு வருடத்திற்கு முன்பே விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி ஓகே செய்துவிட்டாராம். இதற்கிடையில், வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் அப்படியே நின்றது. இதைத் தொடர்ந்து, தற்போது ஆறுமுக குமார் - விஜய் சேதுபதி காம்போ, 2-வது முறையாக இணையும் செய்தி, கூடிய விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்திற்காக, விஜய் சேதுபதி உடம்பைக் குறைக்க வேண்டுமென்பதால், ஆறுமுக குமார் வெயிட்டிங் என்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி விவசாயி
கடைசி விவசாயி
``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

`காக்கா முட்டை' படத்தின் இயக்குநரான மணிகண்டனின் அடுத்த படம்தான், `கடைசி விவசாயி'. இப்படத்தில், நல்லாண்டி என்பவர் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தவிர, விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவர், முருக பக்தர் என்று நம்முடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் இயக்குநர் மணிகண்டன். படத்தின் மொத்தப் பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும், படம் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸாகலாம் என்றும் கூறுகின்றனர்.

`நாளைய இயக்குநர்' வெளிவந்த சமயத்திலிருந்தே விஜய் சேதுபதியும் மணிகண்டனும் நண்பர்கள்தான். இதனால் இருவருக்கும் நெருங்கிய வட்டாரம், படத்தைப் பார்த்து சிலாகித்துவருகிறதாம். `படம் ரிலீஸானதும் கட்டாயம் வேற லெவலில் இருக்கும்' என்றும் பாராட்டுகின்றனர். படத்தின் ரிலீஸ் தொடர்பாக விசாரித்தபோது, இயக்குநரும் தயாரிப்பாளருமே இதை முடிவெடுக்க முடியும் என்றார்கள்.

இதையடுத்து, விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் படம், `யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இயக்குநர் ஜனநாதனின் துணை இயக்குநரான ரோகந்த் என்பவர்தான் இதை இயக்குகிறார். மேகா ஆகாஷ், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், கனிகா, இயக்குநர் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அது மட்டுமின்றி, முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார், விவேக்.

உப்பென்னா
உப்பென்னா

`மாஸ்டர்' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். விஜய் - விஜய் சேதுபதியின் சில காம்பினேஷன் போர்ஷன்கள் சென்னையில் தற்போது படமாக்கப்பட்டுவருகிறது. அதை முடித்தபின், `யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்திலும், `துக்ளக் தர்பார்' படத்திலும் விஜய் சேதுபதி பிஸியாகிவிடுவார். இயக்குநர் பாலாஜி தரணிதரனின் உதவி இயக்குநரான டெல்லி பிரசாத் இதை இயக்குகிறார். பார்த்திபன், அதிதி பாலன், மஞ்சிமா மோகன், பக்ஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர்.

இதற்கிடையில், தெலுங்கில் `உப்பென்னா' படத்தில் இவருடைய லுக் வெளியானது. ஹீரோயினுக்கு அப்பா மற்றும் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. சிரஞ்சீவியின் சொந்தக்காரரான வைஷ்ணவ் தேஜ், இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். `உப்பென்னா' படத்தின் தயாரிப்பாளரான சுகுமார்தான் அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் 20-வது படத்தை இயக்குகிறார். அதனால், அந்தப் படத்தின் வில்லனாகவும் விஜய் சேதுபதியை கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப் பரபரப்புக்கு நடுவில், ஐஷ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடிக்கும் `க.பெ.ரணசிங்கம்' படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார், வி.சே. `மாஸ்டர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு இதன் டப்பிங் பணிகளையும் கையோடு முடித்துவிடுவாராம் விஜய் சேதுபதி. டைட்டிலில் இருக்கும் ரணசிங்கம் கதாபாத்திரத்தில்தான் இவர் நடிக்கிறார். தவிர, படத்தில் இவருக்கான போர்ஷன் குறைவாகவே இருக்கும். மேலும், யோகி பாபு, சமுத்திரக்கனி, `பூ' ராம் ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி - ஐஷ்வர்யா ராஜேஷ்
விஜய் சேதுபதி - ஐஷ்வர்யா ராஜேஷ்

இந்தப் படங்களைத் தவிர, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இதுவரை பேச்சு வார்த்தைகளாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளிவந்ததும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள், ஈழப் பிரச்னையை முன்னிறுத்தி `இதில் நடிக்க வேண்டாம்' என்று அன்புக் கட்டளை விடுத்திருந்தனர். அதனால் வெறும் பேச்சுவார்த்தை வரையில்தான் இப்படம் இருக்கிறது.

காரைக்குடியில், `சங்கத் தமிழன்' படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, அமீர் கான் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துவிட்டு வந்தார். டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான `ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்கில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அமீர் கான். படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அவரோடு வரும் நண்பரான ரப்பா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. எல்லாம் ஓகேவாக அமைந்தால், அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கிவிடும்.

இவையே விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த அப்டேட்ஸ். இதற்கிடையில், நாளைக்கே இதில் இல்லாத ஒரு படத்தின் அப்டேட் வந்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால், விசே பிஸியோ பிஸி!

பின் செல்ல