சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

என்று முதல் ரிலீஸ்?

சிக்கலில் சிக்கி ரிலீஸாகாமல்...
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கலில் சிக்கி ரிலீஸாகாமல்...

லிங்குசாமி தயாரிப்பில் ரிலீஸாகாமல் இருக்கும் படங்களையெல்லாம் திரையரங்கில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன

த்ருவ் விக்ரம் நடித்த `வர்மா’ திரைப்படத்தை முதலில் பாலா இயக்கினார். பாலா இயக்கிய படம் தயாரிப்பாளருக்கு திருப்தியாக இல்லை என்றுகூறி அதை ரிலீஸ் செய்யாமல் `ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் அதே படத்தை மாற்றி எடுத்தார்கள். `ஆதித்ய வர்மா’ திரைப்படம் ரிலீஸும் ஆகி கலவையான விமர்சனங்கள் வந்தன. அதேநேரம் பாலா இயக்கிய `வர்மா’ படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவானது. அதை உணர்ந்து `வர்மா’ படத்தையும் சமீபத்தில் ரிலீஸ் செய்துவிட்டார்கள். இதேபோல சிக்கலில் சிக்கி ரிலீஸாகாமல் இருக்கும் சில படங்களின் பிரச்னைகளும் அதன் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகளும் இங்கு!
என்று முதல் ரிலீஸ்?

இடம் பொருள் ஏவல்

ஏன் வெளியாகவில்லை: ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய படம்தான், ‘இடம் பொருள் ஏவல்.’ இதில் வி.சேவுடன் இணைந்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா நடித்திருக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி தயாரித்திருக்கிறார். 2014-ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்தப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருந்தது. இந்தச்சூழலில் லிங்குசாமி தயாரிப்பில் வெளியான சில படங்கள் லாபகரமாக இல்லை. அது, இடம் பொருள் ஏவலையும் பாதித்தது. அதனால் படம் வெளியாகாமல் இருக்கிறது.

எப்போது வரும்: லிங்குசாமி தயாரிப்பில் ரிலீஸாகாமல் இருக்கும் படங்களையெல்லாம் திரையரங்கில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இடம் பொருள் ஏவல் பற்றியும் நல்ல செய்தி வரும் என்கிறார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான `தர்மதுரை’ படம் ரிலீஸாகிவிட்டது; அதன்பிறகு எடுத்த `மாமனிதன்’ திரைப்படமும் கொரோனா வராமல் இருந்திருந்தால் ரிலீஸாகியிருக்கும் என்கிறார்கள்.

என்று முதல் ரிலீஸ்?

நரகாசூரன்

ஏன் வெளியாகவில்லை: ‘துருவங்கள் பதினாறு’ படத்தைப் பார்த்த இயக்குநர் கெளதம் மேனன், அதன் இயக்குநர் கார்த்திக் நரேனை அழைத்து இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தார். படத்தை கெளதம் மேனனோடு இணைந்து பத்ரி கஸ்தூரி என்பவரும் தயாரித்தார். பத்ரி கஸ்தூரி இந்தப் படத்திற்காகக் கொடுத்த பணத்தை கெளதம் மேனன் வேறொரு படத்திற்காகச் செலவு செய்ததால், `நரகாசூரன்’ படம் பணப் பிரச்னையால் பாதியில் நிற்க இயக்குநர் கார்த்திக் நரேன் படப்பிடிப்பு நின்றுவிடக்கூடாது என்பதற்காக தன்னுடைய பணத்தை வைத்து மீதமிருந்த காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் கெளதம் மேனன் இந்தப் படத்தின் செலவுகளுக்கு பணம் தராததால், படம் ரிலீஸுக்குத் தயாரான நிலையில் நிற்கிறது.

எப்போது வரும்: நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் ரிலீஸில் எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பதால், `படத்தை ஓடிடி தளத்திலாவது ரிலீஸ் செய்யுங்கள்’ என இயக்குநர் தரப்பு கெளதம் மேனனிடம் கேட்கிறதாம். `நரகாசூரன்’ படத்தின் ரிலீஸ் கெளதம் மேனனின் கையில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

என்று முதல் ரிலீஸ்?

சதுரங்க வேட்டை 2

ஏன் வெளியாகவில்லை: ஹெச்.வினோத் இயக்கத்தில் `சதுரங்க வேட்டை’ படத்தைத் தயாரித்த மனோபாலா, அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அரவிந்த் சாமி, த்ரிஷாவை வைத்து ஆரம்பித்தார். முதல் பாகத்தை இயக்கிய ஹெச்.வினோத்தான், இந்தப் படத்திற்காகக் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான முதல் பாகம் நல்ல ஹிட். ஆனால் பெரிய எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் பாகம் பணப் பிரச்னையால் ரிலீஸாகாமல் இருக்கிறது. அரவிந்த் சாமிக்குப் பேசிய சம்பளத்தைக் கொடுக்காததால், அவர் டப்பிங் பேசவில்லை என்கிறார்கள். இரண்டாவது, தயாரிப்பாளர் மனோபாலாவுக்கும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் கங்காதரனுக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை என்றும் செட்டில்மென்ட் முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.

எப்போது வரும்: பணச் சிக்கல்கள் தீர்ந்தால் படம் தியேட்டரிலோ, ஓடிடியிலோ ரிலீஸ் ஆகிவிடும் என்கிறார்கள்.

என்று முதல் ரிலீஸ்?

நெஞ்சம் மறப்பதில்லை

ஏன் வெளியாகவில்லை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா காம்போ `நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மூலமாக இணைந்தது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா, பாபி சிம்ஹா என எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்ட படம், பாடல்கள் அனைத்தும் ரிலீஸான நிலையில் ரிலீஸாகாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

எப்போது வரும்: இந்தக் கேள்வியை தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதனிடம் கேட்டோம். “படத்தை முடிச்சு மூணு வருஷம் ஆச்சு. எனக்கு இருந்த பைனான்ஸ் பிரச்னைகள் காரணமாகத்தான் படம் ரிலீஸாகாமல் இருந்துச்சு. இப்போ எல்லாத்தையும் தீர்த்துட்டேன். செலவு பண்ணுன தொகையில 75 சதவிகிதம் கிடைத்தால்கூட படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் பண்ண முடியுமான்னு தெரியல. ஏன்னா, பைனான்ஸ் பிரச்னைகள் இருந்ததால சிக்கல்கள் வரும்னு படத்தை வாங்க மாட்டாங்க. பொது இடங்களில் எஸ்.ஜே.சூர்யா சாரைப் பார்த்தால், அவரை என்னால பேஸ் பண்ண முடியல. சீக்கிரமே படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை ஆரம்பிக்கணும்” என்றார்.

என்று முதல் ரிலீஸ்?

ரெண்டாவது படம்

ஏன் வெளியாகவில்லை: `தமிழ்ப்படம்’ ரிலீஸானதும் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது இரண்டாவது படத்தை ‘ரெண்டாவது படம்’ என்கிற பெயரில் ஆரம்பித்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் நடிப்பில் விறுவிறுவென முடிக்கப்பட்ட படம், ரிலீஸின்போது பிரச்னைகளை சந்தித்தது. படத்தின் தயாரிப்பாளர் தரணி வாசுதேவன் இந்தப் படத்திற்காக வாங்கிய பைனான்ஸ் தொகையை ரிலீஸுக்கு முன் செட்டில் செய்யாததால், படத்தை வெளியிட முடியவில்லை. இன்றுவரை அந்த பைனான்ஸ் தொகையைத் தயாரிப்பாளர் திருப்பித் தரவேயில்லையாம்.

எப்போது வரும்: ‘தமிழ்ப்படம் - 2’ ரிலீஸான சமயத்தில், ‘ரெண்டாவது படம்’ ரிலீஸானால் சரியாக இருக்கும்’ என வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போதும் தயாரிப்பாளர் பைனான்ஸியருக்குப் பணத்தைக் கொடுக்கவில்லை. இத்தனை வருடங்கள் போனபிறகு, இனிமேல் இந்தப் படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையே படக்குழுவிற்குப் போய்விட்டது என்கிறார்கள்.