Published:Updated:

தம்பிக்காக டப்பிங் பேசும் சிவராஜ்குமார்... புனித் ராஜ்குமாரின் கடைசி படங்களின் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் புனித் ராஜ்குமார்
News
நடிகர் புனித் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படங்களின் ரிலீஸ் அப்டேட்!

கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமார் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நடிகர். 46 வயதேயான இவர், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பு கன்னட சினிமா உலகை மட்டுமின்றி இந்திய சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் திரண்டனர். அவர் நடிப்பில் இரண்டு படங்கள் இன்னும் வெளியாகாமல் இருந்தன. அதில் 'த்வித்வா' என்ற திரைப்படம் ஆரம்பக்கட்ட பணிகளில் இருந்தது. 'ஜேம்ஸ்' என்ற மற்றொரு படத்தின் படப்பிடிப்பை முடித்த புனித், அதற்கு டப்பிங் செய்யவில்லை. எனவே, அதற்கு அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசுவார் என தகவல்கள் வெளியாயின.

அந்த 'ஜேம்ஸ்' திரைப்படத்தை புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். புனித் நடிப்பில் கடைசியாக வெளியான படம், 'யுவரத்னா'. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் ஆனந்த் ராமை ட்விட்டரில் டேக் செய்து, புனித் ராஜ்குமாரின் பயோபிக் எடுக்க சொல்லி அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு அவரும் 'I will try my level best to bring this idea on screen' என்று ட்வீட் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் கரியரில் முக்கிய படமான 'ராஜகுமாரா' படத்தையும் இயக்கிவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், 'Wild Karnataka' என்ற ஆவணப்படத்தைப் பார்த்துட்டு பயங்கரமாக இம்ப்ரஸான புனித், அதன் இயக்குநர் அமோகவர்ஷாவுடன் இணைந்து கர்நாடக கடற்பகுதியைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தானே தயாரிப்பதாகவும் கூறி அந்த ப்ராஜெக்ட் ஆரம்பமானது.

'ஜேம்ஸ்'
'ஜேம்ஸ்'

புனித் அவருடன் சென்று கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிகளுக்கும் கடற் பகுதிகளுக்கும் சென்று ஆவணப்படமாக எடுத்தனர். அதனை தன் கனவாக வைத்திருந்தார் புனித். தற்போது, அந்த ஆவணப்படத்திற்கு 'கந்தட குடி' எனப் பெயரிட்டு அதனை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். ஏற்கெனவே, 'கந்தட குடி' என்ற பெயரில் ராஜ்குமாரின் படமொன்று 1973ல் வெளியானது. வனப்பகுதிகளையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல் இந்திய திரைப்படம் இதுதானாம். ராஜ்குமார் இதில் வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். படமும் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 1994ல் சிவராஜ்குமார் 'கந்தட குடி 2' என்ற பெயரில் ஒரு அட்வெஞ்சர் படமொன்றில் நடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரு படங்களின் சென்டிமென்ட் காரணமாக, இந்த ஆவணப்படத்திற்கு 'கந்தட குடி' என்றே பெயரிடுள்ளனர். புனித் குடும்பம் மட்டுமல்லாது கன்னட திரையுலகமே இன்னும் அவர் மறைவிலிருந்து மீளவில்லை. அதேபோல, பவன் குமார் இயக்கத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பதாக இருந்த 'த்வித்வா' படத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் ஆர்வமும் கன்னட சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

நடிகர் புனித் ராஜ்குமார்
நடிகர் புனித் ராஜ்குமார்
இந்த ஆவணப்படமும் 'ஜேம்ஸ்' திரைப்படமும் தியேட்டரில் வெளியாகும் அந்த நாளில், புனித் ரசிகர்கள் தியேட்டர்களில் நிரம்பி வழிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. புனித் எனும் கலைஞன் இந்த உலகில் இல்லாவிட்டாலும் அனைவரின் மனதிலும் நினைவுகளாக என்றென்றும் நிச்சயம் இருப்பார்.