Published:Updated:

வாலி! #VikatanReview

வாலி
பிரீமியம் ஸ்டோரி
வாலி

அஜீத் வசம் இத்தனை நடிப்பாற்றலா? இரட்டை வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்!

வாலி! #VikatanReview

அஜீத் வசம் இத்தனை நடிப்பாற்றலா? இரட்டை வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்!

Published:Updated:
வாலி
பிரீமியம் ஸ்டோரி
வாலி

து நவீனமயமாக்கப்பட்ட ஒரு ராமாயணக் கதை!

ராமனுக்கு இணையான புகழ் இருப்பினும் `தம்பியின் மனைவியை அபகரித்தவன்' என்கிற ஒரே காரணத்தால் வீழ்ந்த வாலியின் இதிகாசக் கதைக்கு இன்றைய இன்டர்நெட் காலத்துக்கு ஏற்ப ஹைடெக் கலர் கொடுத்திருக்கிறார்கள்!

நேர்கோடு மாதிரியாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதில் குறுக்கீடுகள் இல்லாமல் சீராகப் பயணித்து, திரைக்கதையை அழுத்தமாக அமைத்து, வசனங்களை இயல்பாக எழுதி... அறிமுகமாகும் முதல் படத்திலேயே முத்திரைப் பதித்துவிட்டார் டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா! சாட்சி : தியேட்டரில் அவ்வப்போது எழும்பும் கைத்தட்டல்கள்!

இரட்டையரில் மூத்தவர், வாய் பேசாதவர்... காது கேளாதவர். விளம்பர நிறுவனத்துக்கு உரிமையாளர். எதிராளியின் உதட்டசைப்பை வைத்தே சகலத்தையும் புரிந்துகொள்ளும் அதிபுத்திசாலி. நினைப்பதை அடையத் துடிக்கும் வெறி கொண்டவரும்கூட!

இளையவர் நிறையப் பேசி, நிறையக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளும் நிறைவானவர்.

ஏதோ ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் சிம்ரனைப் பார்த்ததுமே அவர் மீது கண் பதித்துவிடுகிறார் அண்ணன். தம்பியின் காதலிதான் சிம்ரன் என்பது தெரிந்த பிறகும்... இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பிறகும் அண்ணனின் வக்கிரப் பார்வை தொடர்ந்து கொண்டே போவதை விரசம் இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு!

வாலி
வாலி

அண்ணன் மீது இருக்கும் அலாதியான மரியாதை காரணமாக அவர் மீது தம்பியின் மனைவி, சுமத்தும் புகார்கள் எடுபடாமல் போய் விடுவதையும் யதார்த்தமாக சொல்லியிருப்பது கூடுதல் ப்ளஸ்!

முடிவில், அண்ணனின் சுயரூபம் தெரியவரும்போது தம்பி விழித்துக்கொண்டு `வாலி வதம்' செய்வதும் நியாயமாகவே தெரியும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

அடேங்கப்பா! அஜீத் வசம் இத்தனை நடிப்பாற்றலா? இரட்டை வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்! வாயில் சூயிங்கம் மென்றுகொண்டு, வெறும் பார்வையாலும் பாவனைகளாலும் குரூரமான வில்லத்தனத்தை அநாயாசமாக வெளிப்படுத்துகிறார். பலே!

`நான் வெறும் ஷோகேஸ் பொம்மை அல்ல. எனக்கும் நடிக்க வருமாக்கும்’ என்று நிரூபித்திருக்கும் சிம்ரனுக்கும் தனிப் பாராட்டு! வீட்டுக்குள்ளேயே வில்லனை வைத்துக்கொண்டு இவர் படும் அவஸ்தைகள் பல நேரங்களில் உறைய வைக்கின்றன!

வாலி
வாலி

கணவனுடன் கோவாவுக்கு வந்திருக்கும் சமயத்தில் அங்கு அண்ணனும் வந்து தொலைப்பார் என்று சிம்ரன் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், ஓட்டலில் தான் பேசிக் கொண்டே இருக்க, நீண்ட நேரம் கணவன் பேசாமல் இருப்பதைப் பார்த்ததும், ஒருவேளை அது அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் துளியூண்டு கூட சிம்ரனுக்கு ஏற்படாதது வியப்பு!

தனக்கு `சோனா' என்றொரு காதலி இருந்ததாகச் சொல்லி அஜீத் விடும் புருடா கதை ரசிக்க முடிந்தாலும் நீளம் அதிகம்!

`காமெடி டிராக்' விவேக் என்று தடபுடலாகத் தனி டைட்டில் கொடுத்திருந்தாலும் நகைச்சுவை சரக்கு படத்தில் கம்மிதான்!

பின்னணி இசையில் தேவாவின் கைவண்ணம் பளீர்! குறிப்பாக, அண்ணன் அஜீத் தொடர்பான காட்சிகளில் தவில் மற்றும் தபேலாக்களை ஒலிக்கவிட்டிருப்பது நல்ல கற்பனை!

- விகடன் விமரிசனக் குழு

(16.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)