‘நீ சந்திக்கும் ஒவ்வொரு வரும் உன் வாழ்க்கையை மாற்று வார்கள்’ என்ற கருத்தின் அடிப்படை யிலான படம், ‘வாழ்’.
வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யங்களும் இல்லாது இருத்தலியல் சிக்கலில் உழலும், ஐ.டியில் வேலை பார்க்கும் இளைஞன் பிரகாஷ். தன்னைச் சுற்றிக் காதல் நிகழும்போது அதை ஏளனமாகப் பார்ப்பவன் தனக்கு நிகழும்போது அதில் உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கிறான். காரணம், அவன் உறவுப்பெண்ணான யாத்ராம்மாவும் அவர் மகனும். மூவரையும் வாழ்க்கை அதன்போக்கில் கடல், வயல் என இழுத்துச் சென்று இறுதியாய் நடுச்சாலையில் நிறுத்துகிறது. அப்போது பிரகாஷ் சந்திக்கும் பொலிவியப் பெண் வாழ்க்கையில் நிகழ்த்தும் மாற்றங்களைத் தொட்டுத்தொடர்கிறது கதை.
பிரகாஷின் கதாபாத்திர வரைவிற்கு உடல்மொழியிலும் உணர்ச்சி வெளிப்பாடிலும் அப்படியே பொருந்திப் போகிறார் அதில் நடித்திருக்கும் பிரதீப். கண்களிலேயே சோகம் தேங்கிப் போன முகம் டிஜே பானுவுக்கு. அதை சில காட்சிகளில் இயல்பாகவும் சில காட்சிகளில் மிகை நடிப்பாகவும் வெளிப்படுத்து கிறார். குறைந்த கதா பாத்திரங்கள், அவர்களுக்கும் மிகக் குறைந்த திரை நேரம் என்பதால் மற்றவர்கள் கவனத்திலேயே இல்லை. கதையின் பலமும் பலவீனமும் அதன் ஒழுங்கற்ற தன்மைதான்.

பிரதீப்பின் இசை படம் நெடுகிலும் பயணத்தின் போதான ஜன்னல் காற்றாய் தழுவியபடி வருவது பலம். ஷெல்லி கேலிஸ்ட்டின் ஒளிப் பதிவு ஒரு சின்ன இருட் டறையில் தொடங்கி பூமிப்பந்தின் பிரமாண்டப் பரப்புகள் வரை பாய்ந்து நம்மை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒழுங்கற்றவற்றின் அழகியல் எனச் சொல்லும் படியே இருக்கிறது ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவின் படத் தொகுப்பு. இந்த மூவரும்தான் ‘வாழ்’ படத்தை வாழ்க்கை அனுபவமாக மாற்ற முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக் கிறார்கள். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு இந்தப் படத்தில் முழுமையான வெற்றியில்லை. நாளை பற்றிய கவலையின்றி இன்றைய கணத்தில் வாழ்வது, பயணத்தில் மனம் தோய்வது எல்லாம் நல்ல நோக்கங்கள் தான். ஆனால் கொலை செய்துவிட்டுப் பயணம் மேற் கொள்வது, கள்ளபாஸ் போர்ட்டில் பயணம் செய்வது என்னும்போது அந்த நோக்கங்கள் அடிபட்டு விடுகின்றன. காதலின்மீதான அதீத வெறுப்பு, கும்பகோணம் தாத்தாவின் ஒட்டாத கதை ஆகியவை நெருடல்கள்.
முழுமையடையாத ‘வாழ்’, பாதியில் நிற்கும் பயணம்.