Published:Updated:

`` `இம்சை அரசன்' நின்னதுக்கு நானும் காரணம்னு வருத்தமா இருக்கு!" - காஸ்ட்யூம் டிசைனர் முருகன்

செ.சல்மான் பாரிஸ்
வீ.சிவக்குமார்

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் நின்றது. பிரச்னைகளின் முதல் புள்ளியாகக் கூறப்படும் வடிவேலுவின் காஸ்ட்யூமர் முருகனிடம் பேசினோம்.

இம்சை அரசன் பிரச்னை
இம்சை அரசன் பிரச்னை

தமிழ் சினிமாவில் நடிகர்களின் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அவர்களின் காஸ்ட்யூமுக்கும் முக்கியப் பங்குண்டு. இப்போதெல்லாம் இதற்காக ஃபேஷன் டிசைனிங் முடித்தவர்கள் வந்துவிட்டார்கள் என்றாலும், அனுபவத்தாலும், கற்பனைத் திறனாலும் வளர்ந்த சிலர், பிரபல நடிகர்களுக்குக் காஸ்ட்யூமர்களாக இருந்து வருகிறார்கள். எவ்வளவு பெரிய நிறுவனத்தின் படமாக இருந்தாலும் தங்கள் காஸ்ட்யூமரை விட்டுக்கொடுக்காத நடிகர்கள் உண்டு.

காஸ்ட்யூமர் முருகன்
காஸ்ட்யூமர் முருகன்

அப்படிப்பட்ட ஒரு காஸ்ட்யூமர்தான், முருகன். சோபன்பாபுவில் தொடங்கி சமீபத்தில் வெளியான யோகிபாபுவின் 'தர்மபிரபு' வரை காஸ்ட்யூமராகப் பணியாற்றியவர். முக்கியமாக, நடிகர் வடிவேலுக்கு நீண்ட காலமாக காஸ்ட்யூமராக இருந்து வருகிறார். இவரை, 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து தயாரிப்பாளர் தூக்கியதால்தான், அந்தப் படத்தில் நடிக்கமாட்டேன் என்று வடிவேலு ஒதுங்கிய விவகாரம் இண்டஸ்ட்ரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தளவுக்குப் பிரச்னை வளர்ந்ததற்கும், தன் காஸ்ட்யூமருக்காகப் பெரிய நிறுவனத்தின் படத்தையே டிராப் செய்யும் அளவுக்குக் காரணம் என்ன என்பதை, முருகனிடம் கேட்டோம்.

எப்போது இந்த ஃபீல்டுக்கு வந்தீங்க?

''என் உறவினர் இந்த ஃபீல்டில் இருந்தார். அவர் மூலம் 1980-ல் தெலுங்குப் படங்களில் உதவியாளராகப் பணியாற்றினேன். பிறகு, தெலுங்குப் படங்களுக்கு காஸ்ட்யூமராக வேலை செய்தேன். சோபன்பாபுவுக்கு அதிகமாக காஸ்ட்யூம்ஸ் ரெடி பண்ணினேன். மோகன் பாபு, ஜெயப்ரதா ஆகியோருக்கும் பண்ணினேன். பிறகு தமிழ்ப் படங்களுக்குப் பணியாற்றத் தொடங்கினேன். 'மகாபிரபு' படத்திலிருந்து ஆரம்பித்து இப்போ 'தர்மபிரபு' வரைக்கும் பண்ணிட்டேன்.''

Costumer Murugan
Costumer Murugan

தெலுங்கு படத்திலிருந்து எப்படித் தமிழுக்கு மாறினீர்கள்?

''ஆரம்பத்துல சென்னையிலதான் தெலுங்குப் படங்கள் ஷூட்டிங் நடக்கும். ஆந்திராவில் ஸ்டூடியோக்கள் அதிகமான பிறகுதான் எல்லோரும் அங்கேயே நடத்துறாங்க. அதனால, நான் தமிழுக்கு வந்துட்டேன். 'மகாபிரபு', 'கர்ணா', 'மின்சாரக் கனவு', 'மறுமலர்ச்சி', 'முகவரி', 'சிட்டிசன்' என்று பல படங்களில் வேலை பார்த்தேன்.''

அஜித்துடன் பணியாற்றிய அனுபவம்?

''அஜித் ரொம்ப தங்கமான மனிதர். மனசு விட்டுப் பாராட்டுவார். மற்றபடி எதிலும் தலையிடமாட்டார்."

வடிவேலுவுடன் முருகன்
வடிவேலுவுடன் முருகன்

வடிவேலுக்கு எப்போதிலிருந்து காஸ்ட்யூமராக வேலை பார்க்கத் தொடங்குனீங்க?

" 'வெற்றிக்கொடி கட்டு' அவருடன் எனக்கு முதல் படம். அதில் அவரோட கலர் கலரான ஜிப்பா ரொம்பப் பிரபலமாச்சு. பிறகு, 'சந்திரமுகி' வரை பண்ணேன்."

அதன் பிறகு வடிவேலுவுடன் தொடர்ந்து பயணித்தீர்களா?

'' 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தைப் பற்றி நண்பர் ஒருவர் கூறி, 'நீ நல்லா பண்ணுவ' என ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சாரிடம் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்த பின்புதான் அது வடிவேலு சார் நடிக்கிற படம் என்று தெரியும். அவர் சில ஓவியங்களைக் கொடுத்தார், நான் அதற்குத் தகுந்தாற்போல் சாம்பிள் டிரெஸ்களைத் தயாரித்துக் காட்டினேன். டைரக்டர் சிம்புதேவன், வடிவேலு சார் என எல்லோருக்கும் பிடித்திருந்தது. உடனே, என்னை காஸ்ட்யூமராக கமிட் பண்ணாங்க."

இம்சை அரசன் விழாவில்
இம்சை அரசன் விழாவில்

இம்சை அரசன் காஸ்ட்யூம்களைப் பார்த்து வடிவேலு என்ன சொன்னார்?

''அந்த டிரெஸ் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரைப் பொறுத்தவரை கேரக்டருக்குப் பொருத்தமா மேக்கப், விக், டிரெஸ் அமைந்தால்தான் ஆர்வமா நடிப்பார். அதனால், அந்தப் படத்தில் ரொம்பக் கவனம் எடுத்து காஸ்ட்யூம்ஸ் தயாரித்தேன். அதைத் தொடர்ந்து, 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', 'தெனாலிராமன்' படங்களுக்குக் காஸ்ட்யூம்ஸ் ரெடி பண்ணேன். ஆர்ட் டைரக்டர், வடிவேலு சார், டைரக்டர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு நான் காஸ்ட்யூம்ஸ் பண்ணுவேன். அதனால, வடிவேலு சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.''

அடுத்தடுத்த படங்களில் உங்களையே காஸ்ட்யூமரா வடிவேலு தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

'' 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்துக்கு வேற காஸ்ட்யூம் டிசைனரைத்தான் ஃபிக்ஸ் பண்ணாங்க. அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ண சம்மதிச்சேன். ஆனா, 'நீயே ஹெட் காஸ்ட்யூமரா இருந்து பண்ணு'னு வடிவேலு சார் சொன்னார். தயாரிப்பாளரும் ஓகே சொல்லிட்டார். காரணம், 'புலிகேசி'க்கு நான் கொடுத்த உழைப்புதான்."

காஸ்ட்யூமர் முருகன்
காஸ்ட்யூமர் முருகன்

'இம்சை அரசன்' இரண்டாவது பாகத்தில் என்ன பிரச்னை?

''ஆரம்பத்துல இருந்தே பிரச்னைதான். படத்துக்கு ஸ்டில் எடுக்க எல்லோருக்கும் சாம்பிள் டிரெஸ் தயாரிச்சுக் கொடுத்தேன். அதை வெச்சுத்தான் பேப்பர் பப்ளிசிட்டி பண்ணாங்க. அடுத்து, ஓப்பனிங் சாங்குக்கு டிரெஸ் ரெடி பண்ணச் சொன்னாங்க. நானும் ரெடி பண்ணிட்டேன். ஆனா, அதுக்குள்ள வேற ஒரு காஸ்ட்யூமரை வெச்சு ஷூட்டிங் நடத்துனாங்க. 'முதல் பாகத்துல பண்ணதுனால, இதுக்கும் வொர்க் பண்ண வந்தேன். வேற ஒருத்தரை வெச்சுப் பண்றதுன்னா, பண்ணிக்கோங்க. நான் விலகிடுறேன்'னு நான் வந்துட்டேன். அதுக்குப் பிறகு நடந்த பிரச்னை எனக்குத் தெரியாது."

உங்களால ஒரு படம் நின்னுடுச்சேனு வருத்தப்படுறீங்களா, அது தொடரணும்னு வடிவேலுகிட்டே பேசுனீங்களா?

''என்னால அந்தப் படம் நின்னது எனக்கு வருத்தம்தான். வடிவேலு சார்கிட்ட அதைச் சொன்னேன், 'எனக்காக நீங்க நிற்க வேண்டாம். நடிங்க'னு சொன்னேன். 'அவங்க புது ஆளுங்களா இருக்காங்க. நீ இருந்தா நல்லா இருக்கும். நீ இருந்தாதான் நடிப்பேன்'னு சொல்லிட்டார். நானும் நாலைஞ்சு தடவை பேசிட்டேன். மறுபடியும் கூப்பிட்டா பேசுவேன்."

''உங்களை மறுபடியும் இந்த ப்ராஜ்க்டில் வேலை பார்க்க சொன்னால் போவீர்களா?''

murugan costumer
murugan costumer

மறுபடியும் இந்தப் படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டா கண்டிப்பா பண்ணுவேன். எனக்கு யார்மீதும் வருத்தம் இல்லை. இந்தப் படத்துல இருந்து விலகுனப்போ, எனக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. ஆறு மாசமா இந்தப் படத்துக்காக நிறைய யோசிச்சு, காஸ்ட்யூம்ஸ் ரெடி பண்ணேன். இரண்டாம் பாகம் வரணும்; நானும் வொர்க் பண்ணணும்னு கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன். இன்னைக்கும் வடிவேலு சார் என்கூட பேசிக்கிட்டுதான் இருக்கார். அவர் ஒரு குழந்தை மாதிரி. அவரைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கணும்." என்கிறார், முருகன்.