Published:Updated:

``ஏன்யா... எனக்கு மாச மாசமா பொறந்தநாளு கொண்டாடுவீக!'' - கலாய்த்த வடிவேலு

``ஐயா, இன்னிக்கு காலையிலே இருந்து 100 போன் வந்துடுச்சு. உண்மையிலே என்னுடைய பொறந்தநாளு செப்டம்பர் 12-ம் தேதி. இதை எல்லோருக்கும் சொல்லிச் சொல்லி என்னோட தொண்டை தண்ணி வத்திப்போச்சு'' என்று தடதடக்கிறார், வடிவேலு.

வடிவேலு
வடிவேலு

சினிமா உலகில் உள்ள பலபேருக்கு இரண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில் சோஷியல் மீடியாவில் யாரோ ஒருவர் முழுவிவரம் தெரியாமல் பிரபலத்துக்கு இன்று பிறந்தநாள் என்று கிளப்பிவிட்டால் போதும், அந்தப் பிரபலத்தின் தீவிர ரசிகனுக்கூட அவரது நிஜப் பிறந்தநாள் மறந்துபோகும். உண்மை விவரத்தை விசாரிக்காமல் எல்லோரும் தொடர்ந்து அந்த நட்சத்திரத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் குவித்துவிடுகிறார்கள். இதோ இன்று வடிவேலுவுக்குப் பிறந்தநாள் என்று செய்தியைக் கிளப்பிவிட்டனர்.

வடிவேலு
வடிவேலு

அவ்வளவுதான், சோஷியல் மீடியாவில் வாழ்த்துப் பூக்களை வாரியிறைத்துவிட்டனர். உண்மை என்னவென்று வைகை புயலுக்கே போன்செய்து கேட்டோம். ``ஐயா, இன்னிக்கு காலையிலே இருந்து 100 போன் வந்துடுச்சு. உண்மையிலேயே என்னுடைய பொறந்தநாளு செப்டம்பர் 12-ம் தேதி. இதை எல்லோருக்கும் சொல்லிச் சொல்லி என்னோட தொண்டை தண்ணி வத்திப்போயிடுச்சு. ஒருத்தர் இன்னிக்குத்தான் எனக்கு பிறந்தநாள்னு ஜாதகம் பார்த்திருக்கார், இன்னொருத்தர் இன்னிய தேதியில நீங்க இந்தியாவிலேயே இருக்க மாட்டீங்களேன்னு எடுத்துவிடுறார்.

என்னத்தச் சொல்றது... இப்படியே இவங்களை விட்டா செப்டம்பர், அக்டோபர், நவம்பர்னு மாச மாசமா கொண்டாடுவாங்கபோல. ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டா அதைப்பத்தி தெரிஞ்சுக்காமலே 'டேய் இன்னிக்கு தலைவன் பிறந்தநாளைக் கொண்டாடுடா'னு சொல்லிட்டு ஆடித்தீர்க்குறாங்க'' என்று விளக்கம் சொன்னார், வடிவேலு.