Published:Updated:

''கொரோனா ஊசி ரெண்டும் போட்டுட்டேன்... இன்னும் 40 போடச்சொன்னாலும் போடுவேன்... ஏன்னா?!''- வடிவேலு

வடிவேலு
வடிவேலு

''ராம்நாடுனு ஒண்ணு இருக்கு. ஒரத்தநாடுனு ஒண்ணு இருக்கு... இப்படி நிறைய போய்க்கிட்டு இருக்கு. நல்லா இருக்கற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல. எனக்கு அது வேண்டாம்.''

கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்ற வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் சென்னை திரும்பியிருக்கிறார். வந்ததும் முதல் வேலையாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சத்திற்கான நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்.

முதல்வரை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசினார் வடிவேலு. ''முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களை மரியாதை நிமிர்த்தமா சந்திச்சேன். ரொம்ப எளிமையா, குடும்பத்துல ஒரு ஆள் மாதிரி பேசினார். இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். உற்சாகமாக பதில் சொன்னார் வடிவேலு.

வடிவேலு
வடிவேலு

''முதலமைச்சரின் செயல்பாடுகள் எப்படியிருக்கு?''

''அதாவது, ஆட்சிக்கு வந்த ஒரே மாசத்துல உலகமே உத்துப் பார்க்கற அளவுக்கு கொரோனாவை கட்டுப்படுத்தியிருக்கார் முதல்வர். உண்மையிலேயே மக்களுக்கு மகிழ்ச்சியளிக்குது. அதுவும் தெருத்தெருவா போய் எல்லாருக்கும் ஊசிப் போட்டு... 'ஜனங்களை கெஞ்சி கேட்குறேன். எல்லாரும் தைரியமா இருங்க. அரசுக்கு ஒத்துழைப்பு குடுங்க. குழந்தைகள் படிக்கணும். உங்க எதிர்காலம் நல்லா இருக்கணும்'னு மக்களை கெஞ்சி கேட்டு அழகா பண்ணியிருக்கார். யாருக்குமே நெடி இல்லாமல், யார் மனசும் புண்படாம மக்கள் தாங்களே முன்வந்து ஊசி போடும் அளவுக்கு முதல்வர் பேசினது எங்களுக்கு நெகிழ்ச்சியா இருக்கு. மக்களோடு மக்களா வீட்ல இருந்து டிவியில நானும் கவனிச்சேன். வீடு வீடா காய்கறி கிடைக்க வைக்கிறதுனு ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டிருகாங்க. இது ஒரு பொற்கால ஆட்சி.''

வடிவேலு
வடிவேலு

''ஒருசிலர் மாஸ்க் அணிய மாட்டேங்குறாங்களே?''

''ஒரு சிலர் அப்படி இருக்காங்க. நாங்களும் சொல்லத்தான் செய்யுறோம். 'நாங்கள்லாம் தேக்குண்ணே'னு சொல்லிட்டு போய்ட்டே இருக்காங்க. 'அடேய் தேக்கையும் அரிச்சிடும்டா... மாஸ்கை போடுங்க'னு சொன்னாலும் கேட்குறதில்ல.''

''நீங்க கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டாச்சா?''

''நான் ரெண்டு ஊசி போட்டுட்டேன். இன்னும் நாற்பது ஊசி போடச்சொன்னாலும் போடுவேன். ஏன்னா, இன்னும் பீதியா இருக்கே... அதனால, மக்கள் முன்வந்து ஊசி போடணும்.''

வடிவேலு
வடிவேலு

''தியேட்டர் திறக்காத சூழல். ஒடிடி, திரைத்துறை ஒரு மாறுபட்ட சூழலுக்கு போயிட்டதா நினைக்கிறீங்களா?''

''சினிமாவுல இருந்து சீரியல் வந்துச்சு. இப்ப ஒடிடினு அடுத்தடுத்த டெக்னாலஜிக்கு போயிட்டுத்தானே இருக்கு. சினிமா பேரன் பேத்தி கொள்ளுப் பேத்தினு போய்க்கிட்டே இருக்கு. இது இன்னொரு குட்டி போடும். ஒடிடி அது இன்னொரு குட்டி போடும். அப்படியே போய்க்கிட்டேதானே இருக்கும். காலத்திற்கு தகுந்த மாதிரி நாமளும் நடிச்சிட்டே போக வேன்டியதுதான்.''

''கொங்குநாடு தனியா பிரிக்கணும்னு ஒரு விஷயம் இப்ப சர்ச்சையா போயிட்டு இருக்கே?''

''ராம்நாடுனு ஒண்ணு இருக்கு. ஒரத்தநாடுனு ஒண்ணு இருக்கு. இப்படி நிறைய போய்க்கிட்டு இருக்கு. நல்லா இருக்கற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல. எனக்கு அது வேண்டாம். எம் பொழப்பு அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு. நல்லா இருக்கு. நீங்க சொல்றதை கேட்கும் போது தலை சுத்துது. விட்டுடுங்க.'' என சிரிக்கிறார் வடிவேலு.

அடுத்த கட்டுரைக்கு