Published:Updated:

"என்னை அழிக்கறதுக்கு தயாரிப்பாளர் சங்கத்துல முடிவு பண்ணிட்டாங்க!" - வடிவேலு வேதனை

எம்.குணா

"எல்லாப் புகழும் இறைவனுக்கேனு சொல்வாங்களே... அதுபோல, இந்த நேசமணிக்குக் கிடைத்த புகழ் எல்லாமே 'ஃப்ரெண்ட்ஸ்' டைரக்டர் சித்திக்கையே சேரும்."

வடிவேலு
வடிவேலு

சமூக ஊடகத்தை சமத்துவமாக மாற்றியிருப்பவர், டிரெண்டாகிவரும் `நேசமணி'தான். சாதாரண இரண்டு நண்பர்களின் ஃபேஸ்புக் கமென்ட்டில் தொடங்கிய இந்த நேசமணி கலாய் செய்தி தீயாய்ப் பரவ, #pray_for_nesamani ஹேஷ்டேக் தற்போது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

நேசமணி
நேசமணி

தமிழ் சினிமாவில் டாப் லெவலில் இருக்கும் நடிகர் விஜய் எப்போதாவது டென்ஷன் ஏற்பட்டால், `ஃப்ரண்ட்ஸ்' படத்தில் இடம் பெற்ற நேசமணி கேரக்டரின் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரிலாக்ஸ் செய்துகொள்வார். விஜய் மட்டுமல்ல, பல சினிமா பிரபலங்களைச் சிரிக்கவைக்கும் அற்புதமான கலைஞன் வடிவேலுவிடம் பேசினோம்.

``எல்லாப் புகழும் இறைவனுக்கேனு சொல்வாங்களே... அதுபோல, இந்த நேசமணிக்குக் கிடைத்த புகழ் எல்லாமே `ஃப்ரண்ட்ஸ்' டைரக்டர் சித்திக்கையே சேரும். ஏன்னா, நேசமணின்னு ஒரு கேரக்டரை உருவாக்குனதே அவர்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல நடிக்கும்போது, காமெடியில எனக்குத் தோணுற சின்னச் சின்ன ஐடியாக்களை அவர்கிட்ட சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னதில்லை. `ஓகே வடிவேலு. ஓகே வடிவேலு'னு ஏத்துக்கிட்டு, சந்தோஷமா என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டார். அப்படியொரு பெருந்தன்மைகொண்ட டைரக்டர், சித்திக். கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சுராஜ்... வி.சேகர் இவங்க ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நகைச்சுவை மன்னர்கள்." என்றவர் தொடர்ந்து,

வடிவேலு
வடிவேலு

``நான் வாழக் கூடாது, என்னைச் சாகடிக்கணும்னு என்னை அழிக்கறதுக்கு தயாரிப்பாளர் சங்கத்துல முடிவு பண்ணிட்டாங்க. ஏன் இப்படிச் செய்றாங்கன்னே தெரியல. அதைப்பத்தி நான் கவலையும்படல. சினிமாவுல எனக்குக் கிடைச்ச இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகனுக்கு, பொண்ணுக்குக் கல்யாணம் செய்து கடமையை முடிச்சேன், ஒரு வழியா வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமே சினிமாவுல நடிக்கிறது கடவுள் கையிலதான் இருக்கு.

நீங்க நேசமணி டிரெண்ட்ல இருக்குன்னு சொல்றீங்களே, டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதுக்குக் காரணம். அதைப் புரிஞ்சுக்காம இருந்தா எப்படி?!
வடிவேலு

`இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படத்துல மூணுவிதமான கேரக்டர்ல நடிக்கிறேன். என்னோட அவுட்ஃபுட் இல்லாம அந்தப் படத்தை எடுக்க முடியாது. மொத்தப் படத்தையும் நான்தான் முதுகுல சுமந்துக்கிட்டு போகணும். ஆனா, `நான் சொல்றபடி நடிங்க'னு சொன்னா, என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்ட்ல இருக்குன்னு சொல்றீங்களே, டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதுக்குக் காரணம். அதைப் புரிஞ்சுக்காம இருந்தா எப்படி?!

'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி
'இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி

இப்போ உங்களுக்கு என்ன வேணும், நான் நடிக்காம, பேசாம வீட்டுலேயே இருக்கணும், அதானே... இருந்துட்டுப் போறேன். மத்தபடி, நான் நேசமணி டிரெண்டிங்ல இருக்கிறதை இன்னும் பார்க்கல. மோடி பதவியேற்கிறாரே... அந்த நியூஸ்தான் எனக்குத் தெரியும். இந்த நேசமணியை நான் இன்னும் பார்க்கல!" என்று முடித்தார், வடிவேலு.