Published:Updated:

`LockUp' ரிப்போர்ட் - ரெண்டு கொலை... மூணு கில்லாடிகள்... செம சஸ்பென்ஸ்!

Lock Up
Lock Up

இரண்டு மரணங்களுக்குமான தொடர்பு, போலீஸ்காரர்களுக்குள் நடக்கும் பதவு உயர்வு போட்டா போட்டி, அதிகார அத்துமீறல் என அத்தனையையும் கலந்து `லாக்கப்' கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.

ஓடிடி நேரடி ரிலீஸ் என்றாலே ``அடப்போங்கப்பா... இது போங்காட்டம்'' என வெப் சீரிஸ்கள் பக்கம் ஒதுங்கிப்போன தமிழ் சினிமா ரசிகர்களின் மனநிலையை ஓரளவுக்கு மாற்ற வந்திருக்கும் படம்தான் `லாக்கப்'. வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, வைபவ், வாணி போஜன் என ஸ்டார் காஸ்ட்டிங்கில் பவர் காட்டியிருக்கும் `லாக்கப்' கதையில் எப்படி? படத்தின் ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட் என்ன?!
ஈஸ்வரி ராவ்
ஈஸ்வரி ராவ்
Lock Up

* ஒருநாள் முதல்வர் போல `லாக்கப்'பில் ஒருநாள் இன்ஸ்பெக்டராக நீலாங்கரை ஸ்டேஷனுக்கு டியூட்டி பார்க்க வருகிறார் ஈஸ்வரிராவ். அதிரடியான, நேர்மையான போலீஸ் ஆய்வாளரான ஈஸ்வரியின் அந்த `நீலாங்கரை'யின் ஒருநாளில் சந்தேகத்துக்குரிய இரண்டு மரணங்கள் அவர்முன் விசாரணைக்கு வருகின்றன. ஒன்று நீலாங்கரையின் ஆய்வாளர் மைம் கோபியின் கொலை. இரண்டாவது நீலாங்கரை குப்பத்துப் பெண் பூர்ணாவின் சந்தேகத்துக்குரிய மரணம். இரண்டு மரணங்களுக்குமான தொடர்பு, போலீஸ்காரர்களுக்குள் நடக்கும் பதவு உயர்வு போட்டா போட்டி, அதிகார அத்துமீறல் என அத்தனையையும் கலந்து `லாக்கப்' கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சார்லஸ்.

வெங்கட் பிரபு - இயக்குநர் சார்லஸ்
வெங்கட் பிரபு - இயக்குநர் சார்லஸ்

* ``ஒருநாள் வேலை பார்த்தாலும் என் வேலையை ஒழுங்கா பார்ப்பேன்'' எனும் கெத்து இன்ஸ்பெக்ட்ராக ஈஸ்வரி ராவ். படத்தின் ஹீரோ அவர்தான். `காலா'வில் குடும்பத் தலைவியாக கலக்கியவர், இங்கே கடுகடு காவல் அதிகாரியாக பர்ஃபாமன்ஸில் மிரளவைக்கிறார். அவரது உடல்மொழியிலும், வார்த்தை உச்சரிப்பிலும் அவ்வளவு கம்பீரம். வாழ்த்துகள் இன்ஸ்பெக்ட்டரம்மா!

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு
Lock Up

* ஜாலி கேலி பார்ட்டியாகவே பார்த்துப் பழக்கப்பட்ட இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு `லாக்கப்'பில் கெட்டவன் கேரக்டர். நடிப்பதே தெரியாமல் நடித்து, மிரட்டுவதே தெரியாமல் மிரட்டி எனப் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது நடிப்பில் அவ்வளவு நம்பகத்தன்மை. குறிப்பாக பூர்ணாவிடம் அவர் டீல் பேசும் அந்த 3 நிமிடக் காட்சியில்... வாவ் வெங்கட்!

* படத்தின் ஹீரோவாக சொல்லப்படும் வைபவுக்கு, நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கக்கூடிய அற்புதமான தருணங்கள் இருந்தும் நடிக்க மனம் இல்லாமல் அத்தனையையும் கோட்டை விட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸில் அவர் நடிக்கிறேன் என்கிற பெயரில் செய்திருப்பதெல்லாம்... போங்க ப்ரோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

* வாணிபோஜன் வீட்டு வேலைக்காரப்பெண்ணாகப் பூர்ணா. கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் அழுத்தமான நடிப்பு. வாணி போஜனுக்கு தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயின் கேரக்டர்தான். இரண்டு, மூன்று காட்சிகளில் வந்துவிட்டு ``அப்பா, எனக்கு வேற மாப்பிள்ளைப் பார்க்கிறார்'' என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

பூர்ணா
பூர்ணா
Lock Up

* ``நிரபராதிய கொல்றதுக்கு நாங்க ஓண்ணும் போலீஸ் இல்லையே?'', ``காக்கிச்சட்டை போட்டா சப்ளையர் வேலை மட்டுமில்ல... அதுக்கு மேலயும் செஞ்சித்தான் ஆகணும்'', ``சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறவன் எதைப்பார்த்தாலும் பயப்படுவான்... ஆனா, ஏன்டா பொறந்தோம்னு நினைக்கிறவன் எதைப்பத்தியும் கவலையே படமாட்டான்'' எனப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பல வசனங்களில் அவ்வளவு யதார்த்தம்.

* அறிமுக இயக்குநர் சார்லஸுக்கு வாழ்த்துகள். முதல் முயற்சியிலேயே கவனம் ஈர்க்கிறார். நடிகர்கள் தேர்விலும், திரைக்கதை அமைப்பிலும், வசனங்களிலும் சார்லஸின் உழைப்பு தெரிகிறது. ஆனால், திரைக்கதையை பக்காவாக செதுக்கியிருக்கும் இயக்குநர் எப்படி லாஜிக் ஓட்டைகளை யாரும் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள் என நினைத்தார்?! போலீஸ் ஸ்டேஷனில் சிறுவனுக்குப் பின்னாடியே நின்றுகொண்டு ``அவங்க அம்மா செத்துடுச்சு... ஆனா, அந்தப் பையனுக்கு எதுவும் சொல்லாம கூட்டிட்டுப்போங்க'' என்கிறார்கள். ஒரு காவல் அதிகாரியின் ரத்தப்பிரிவு என்ன என்பது போலீஸ் ரெக்கார்டிலேயே இருக்கும். இருந்தும், ரத்தம் எடுத்துத்தான் கண்டுபிடிப்பேன் எனத் த்ரில் கூட்டுகிறார் இன்ஸ்பெக்டர். பைக்கில் கொண்டுபோகப்படும் பூர்ணாவை, அவரது மகள் சைக்கிளிலேயே கோவளம் வரை சேஸ் செய்கிறாள் என அபத்தங்கள் நிறைய. அப்புறம் சிகரெட், தண்ணி அடிப்பவர்கள் மட்டும்தான் வில்லத்தனமாக யோசிப்பார்களா இயக்குநரே?!

வைபவ் மற்றும் வெங்கட் பிரபு
வைபவ் மற்றும் வெங்கட் பிரபு
Lock Up

* தேவையில்லாத காட்சிகள் இல்லை என்கிற வகையில் ஆனந்த் ஜெரால்ட்டின் எடிட்டிங் ஓகே. ஆனால், சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருக்கும் விதத்தில் ஷார்ப்னஸ் மிஸ்ஸிங். சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் இல்லை. பின்னணி இசையில் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் அரோல் கொரேலி.

* இரண்டு மரணங்கள், அதை வைத்துப் பின்னப்பட்ட நான் லீனியர் திரைக்கதை என கதை சொல்லலில் கவனம் ஈர்த்திருக்கும் இயக்குநர், சில லாஜிக் ஓட்டைகளையும் அடைத்திருக்கலாம். எனினும் ஆல் தி பெஸ்ட்..!

அடுத்த கட்டுரைக்கு