சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஒரு மகா படைப்புக்கான விதை விழுந்திருக்கிறது!”

வைரமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
வைரமுத்து

தாயும் தந்தையும் கொடுத்த உடல்; மரபணுக்களின் கொடை. சின்ன வயதில் அலைந்த காட்டுவெளி, வயிற்றை அடைக்கிற உணவுக்கு ஆசைப்படுவதில்லை.

அமைதியில் நிறைந்திருக்கிறது கவிப்பேரரசு வைரமுத்துவின் இல்லம். எழுபது வயதை எட்டி, எழுத்தில் 50 ஆண்டுக்காலம் கடந்து அனுபவ சாந்தத்தில் மிளிர்கிறார் வைரமுத்து. தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவருக்குத் தமிழ் இலக்கிய உலகம் சிறப்புச் செய்யத் திரண்டிருக்கிறது. இத்தகைய நல்வேளையில் நடந்தது இந்த உரையாடல்.

“1983 வரையான அனுபவங்களை ‘இதுவரை நான்’ எழுதினீர்கள்? அதற்குப் பிறகான இன்று வரை வைரமுத்து?”

“அது வைரமுத்துவின் வரலாறு மட்டுமில்லை. தங்கள் முகவரியைத் தேடி அலைகிற, தங்களின் நாற்காலியைக் கைப்பற்றத் துடிக்கிற, கனவுகள் கைக்குச் சிக்காதவர்களின் கதையும்தான். வனாந்தரத்தில் தனக்கான பட்டாம்பூச்சியைப் பிடிக்கத் துடிக்கிற கதைதான் முதல் பகுதி. அதில் சில உண்மைகளைச் சொல்லவில்லை என்பது நிஜம். ஆனால், நான் சொன்னதெல்லாம் நிஜம். அதில் நான் பெற்ற துன்பம், உற்ற அனுபவம், கிராமம் சொல்லிக் கொடுத்த மொழி, நம்பிக்கை, கிராமத்து மனிதர்களைப் பதிவு செய்திருந்தேன். அவர்களைப் பதிவுசெய்வதில் எந்தத் தடையுமில்லை; ஏனென்றால் அவர்கள் முகமற்றவர்கள். கலையுலகுக்கு வந்தபிறகு நான் சந்தித்த மனிதர்கள் எல்லாம் முகம் உள்ளவர்கள்; சமூகத்திற்குத் தெரிந்தவர்கள். அவர்களின் பெருமைகள், சிறுமைகள் தெரியும். சிறுமைகளைச் சொல்வதற்கு இந்தச் சமூகம் இடம் தருமா எனத் தெரியவில்லை. பொறுத்திருங்கள், எழுதி விடுவேன். குறிப்புகள் எழுத அவசியமில்லை. அப்படியே நெஞ்சில் சேகரிப்பாய் நிற்கிறது. எழுதினால் சமூகத்தின் அரை நூற்றாண்டு வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்த மாதிரி இருக்கும்.”

“ஒரு மகா படைப்புக்கான விதை விழுந்திருக்கிறது!”

“தமிழாற்றுப்படையை மறுபடியும் தொடர்வீர்களா?”

‘`தொடர்வேன். அரிய செயல் அது. கடலைக் குடத்திற்குள் அடைக்க முடியாது. அது பரந்துபட்ட காற்று மண்டலம். எந்த ஒரு பலூனுக்குள்ளும் நிறையாது. நான் 50 பேரைப் பட்டியலிட்டு 24 ஆளுமைகளாகக் குறைத்தேன். மிச்சமுள்ளவர்கள் இருக்கிறார்கள். காலம் கைகூடி வரும்போது கண்டிப்பாக இரண்டாம் பாகம் எழுதுவேன். எப்போது என்று தெரியாது. சில கனிகள் எப்போது பழுக்கும் என்று மரங்களுக்கே தெரியாது. இதில் எழுத்துச் சீர்திருத்தம் செய்த வீரமாமுனிவர் இல்லை. நவீன இலக்கியத்தில் தி.ஜானகிராமன், கி.ரா போன்றவர்கள் இல்லை. இப்படி விடுபட்டவர்களைக் காலம் ஆசீர்வதித்தால் எழுதுவேன்.”

“உங்களின் இந்த வயது அற்புதமானது. தாகூர் போன்றவர்கள் உச்சபட்சப் படைப்புகளைக் கொடுத்த நல்வயது உங்களுக்கு வந்திருக்கிறது...”

“இந்தக் கேள்வி பிடித்திருக்கிறது. இளமை, உணர்ச்சியை முன்னிலைப்படுத்துகிற பருவம். முதுமை, அறிவை முன்னிலைப்படுத்துவது. இந்த நடுத்தர வயது உணர்ச்சி பாதி, அறிவு பாதி எனப் பின்னிக் கொண்டாடுகிற பருவம். இதுதான் எழுதுவதற்கு ஏற்றது. ஒரு பெரும் படைப்பை நினைவில் நிறுத்தியிருக்கிறேன். மனதில் விழுந்திருக்கிற எல்லா விதைகளும் முளைத்துவிடும் என்று சொல்ல முடியவில்லை. மனிதன் விதைத்த விதைகள் முளைக்காமல் போவதும், பறவை எச்சமிட்ட விதைகள் முளைத்து வருவதும் நிலத்தின் மிகப்பெரிய கூறு; அதுதான் காடு. தானாக உருவாவதே கானகம். ஒரு படைப்புக்கு ஆய்வுக்களமும் காலமும் நிறைய தேவைப்படுகிறது. கல்லூரியில் ‘வைகறை மேகங்கள்’ எழுதும்போது நானும் எழுத்தும் மட்டும்தான். அந்தச் சுதந்திரம் இப்போது இல்லை. பரபரப்பான வாழ்க்கை, எழுதுவதற்கான எனது வெளியைத் திருடிக்கொண்டோடுகிறது. இந்த வயது நல்ல வயதுதான். பல எழுத்தாளர்கள் எழுத்தை நிறுத்தியதும் இந்த வயதில்தான். குடுமி பிடித்து இழுக்கிற தாம்பத்யம், பிள்ளைகளின் திசை மாற்றம், ஒரு வக்கீல் நோட்டீஸ், கடன், சாராயம், சல்லாபம், உடல்நலக்குறைவு, நோய் எனப் பலரைப் படுத்தி எடுத்து, மூத்த எழுத்தாளர் பலருக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இவை ஏதுமற்று காலம் கைகொடுக்கும் என நம்புகிறேன்.”

``ஆனந்த விகடனில் எழுதிய ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என கிராமக் காவியங்கள் சரி; நகரம் பற்றிய புரிதல் என்ன?’’

“கிராமத்தில்தான் பண்பாட்டின் வேர்கள் இருக்கின்றன. அவற்றைப் பதிவு செய்வதே என் விருப்பம். கிராமம் பாதித்த அளவுக்கு நகரம் என்னை பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. கிராமத்தின் ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம். இங்கே அச்சடிக்கப்பட்டது போல ஒரே மாதிரியான அடுக்குமாடிக் கலாசாரம். கிராமத்து வாழ்க்கையில் நித்தம் நித்தம் புதுச் சம்பவங்கள். நகரத்து வாழ்க்கையில் எல்லா வருடங்களுமே ஒரே நாளுக்கான நகல்கள். ஒரே விதமாகப் பணியாற்றி, ஒரே விதமான மனிதர்களைச் சந்தித்து அதில் மாற்றமே இல்லை. என் 17 வயது வரை இருந்த கிராமத்து வாழ்க்கை எனக்குத் தந்தது அதிகம்.”

“சினிமாவில் யாரும் பாடல் எழுதலாம் என்றாகிவிட்டதே?”

“அதில் ஒன்றும் தவறில்லை. பாடல் ஜனநாயகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையைச் சமூக இயங்கியலோடு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். காட்டாறு பிரவாகமெடுத்து வரும்போது அது குடிதண்ணீராக இருக்க முடியாது. அதில் நுரை, காட்டு மரங்கள், பிணங்கள்கூட மிதந்து வரும். ஆடுமாடுகள் அடித்து ஒதுங்கும். வெள்ளம் வடியக் காத்திருக்க வேண்டும். இது காட்டாற்றின் காலம். காட்டாறு இல்லாமல் குடிதண்ணீர் கிடையாது. நல்ல மழை பெய்தால் அதை வரவேற்க வேண்டும். வெள்ளம் வடிந்தபிறகு குடிதண்ணீர் கிடைப்பது மாதிரி தகுதிமிக்க சிலர் நீந்திக் கரையேறுவார்கள். பாடல் தன் கட்டுமானத்தை இழந்திருக்கிறது. அதனால் எல்லோரும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது. பாடலுக்கு இலக்கிய, இதிகாச, வரலாற்று, வாழ்வியல் அறிவு வேண்டும் என்று நினைத்த காலம் சற்றே தளர்ந்திருக்கிறது. இவை எதுவுமற்று சொற்களின் உறவுகளால் பாடல் எழுதிவிட முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. இதுவே நிரந்தரமில்லை; எதுவும் நிரந்தரம் இல்லை; எல்லாம் மாறும். இலக்கியமே படமாகலாம். சினிமாவே திரையில் எழுதப்பட்ட இலக்கியமாகலாம். நடக்கும்; பொறுத்திருங்கள்.”

“ஒரு மகா படைப்புக்கான விதை விழுந்திருக்கிறது!”

“எத்தனையோ இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் நடிக்கிறார்கள். அந்தக் காலத்தில் வாலியே நடித்திருக்கிறார்; உங்களுக்கு ஏன் நடிக்கத் தோன்றவில்லை?”

“நடிப்பது என்பது தனிக்கலை. அது இன்னொருவராக மாறுதல். அது எனக்குச் சாத்தியமில்லை. என் முகத்தின் தசைகள், உடல்மொழி இன்னொருவருக்காக மாறாது. செயற்கையாக அழுவது, கோபிப்பது, கண்ணீர் விடுவது, ஆவேசப்படுவதெல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயம். ‘மண்வாசனை’யில் பாண்டியன் ரோலுக்கு என்னைத்தான் கேட்டார் பாரதிராஜா. பிறகு ‘நிழல்கள்’ ரவியின் வாத்தியார் ரோலுக்கும் அணுகினார். ‘காதல் ஓவிய’த்தின் கதாநாயகன், பார்வை தெரியாத பாடகனின் ரோல் நான் செய்திருக்க வேண்டியது. ‘உங்களிடம் நான் அடி வாங்க முடியாது’ என்று பாரதிராஜாவிடமிருந்து தப்பித்து ஓடிவந்துவிட்டேன். வேறு யாரும் அப்புறம் கேட்கவில்லை.”

“மெலடி காணாமல்போச்சு...”

“மெலடிகள் தீர்ந்தால் மொழியும் தீர்ந்துபோகும். ஒரு மெலடியில் இசையும் மொழியும் வந்து அமர்கின்றன. ‘தூங்காத கண்ணின்று ஒன்று’ பாடல் கேட்டால் உயிர் தாலாட்டப்படுகிறது. ‘மலர்ந்தும் மலராத’ பாடல் கேட்டால் மனம் காற்றில் பறக்கிறது. ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ கேட்டால் மனசு மேகமாகிவிடுகிறது. ‘உயிரே உயிரே’ கேட்டால் உயிர் மெல்ல விண்வெளிக்குச் சென்று பிறகு பூமிக்குத் திரும்புகிறது. இப்போது பாடல்கள் உடம்பின் ஆட்டத்திற்காக, அசைவுகளுக்காக, தாளக்கட்டுகளுக்காக, ஒரு கொண்டாட்டத்திற்காக இடப்படுகின்றன. அதைத் தவறெனச் சொல்ல முடியாது; காலத்தின் சுழற்சி. காலம் இப்படியே போய்விடாது. காலத்திற்கும் தாலாட்டு வேண்டும். அதற்கும் மென் உணர்ச்சி வேண்டும். மயிலிறகால் வருடப்படாமல், கசை எடுத்து அடிக்கப்படுகிற இசை எத்தனை நாள் தாங்கும்? இது கசையடி. இதிலும் ஒரு சுகம் இருப்பதாக நாடு கருதுகிறது. மொழி, இசைவு, அசைவு மூன்றும் கீழே வந்துவிட்டன. இவை சலிக்கும்போது திரை உலகில் பாடல் வரிகள் மீட்டெடுக்கப்படும்.”

“ஒரு நல்ல பாடலைக் கட்டுவது எப்படி?”

“அது ஒரு திட்டமிடல். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மூவரின் கூட்டுப் படைப்புதான் பாட்டு. ஆர்மோனியத்தில் கைதொட்ட உடனே அது நல்ல பாடலா இல்லையா என எனக்குத் தெரிந்துவிடும். ஒரு மெட்டு இதயத்தைக் கவர வேண்டும். அதுவே அந்தப்புரத்தில் இருக்கிற சொற்களை அள்ளி வந்து கொட்டும். ‘காதலே என் காதலே’, ‘கண்ணாளனே’ பாட்டுகளுக்கு சாதாரண வார்த்தைகளைப் போட்டுவிட முடியாது. நல்ல பாடல்களை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்ற எனது பெருமுயற்சிதான் நாட்படு தேறல். நல்ல பல்லவி மொழியில் வந்து விழுந்துவிட்டால் எந்த இசையமைப்பாளரும் அதைச் சிதைத்துவிட முடியாது. `மேற்குத் தொடர்ச்சி மல எளச்சுப் போகும்’, `ஆயிரம்தான் கவி சொன்னேன்’, `கொண்டல் மேகம் ஒன்று’, `ஜென்மம் நிறைந்தது’, `பார்த்துக்கொள் மனிதா’ போன்ற பல பாடல்கள் பொறுக்கு மணிகளாய் வந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். போதிய எல்லைகளை அவை இன்னும் அடையவில்லை; அடைந்தே தீரும். அடையும்போது தமிழ் அருஞ்சொற்களால் தன்னை அலங்கரித்துக்கொள்ளும்.”

“ஒரு மகா படைப்புக்கான விதை விழுந்திருக்கிறது!”

“கலைஞரோடு உங்களுக்கிருந்த காவிய நட்பு முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கிறதா?”

“கலைஞரிடமிருந்தது நட்பல்ல; உறவு. முதல்வர் ஸ்டாலினிடமும் நல்ல நட்பு இருக்கிறது. உரையாடும்போதும் உறவாடும்போதும் அவரின் பேரன்பை உணர முடிகிறது. கலைஞரின் நட்பை நீங்கள் ஸ்டாலினோடு ஒப்பிடக்கூடாது. கூடுதலாக இலக்கியம் எங்கள் இருவரையும் பேச வைத்தது. பல மணி நேரம் பயணப்பட வைத்தது. கலைஞர் மனம் சோர்வுறும்போது எனது இலக்கியம் அவருக்கு ஒத்தடம் கொடுத்தது. ஆனால், ஸ்டாலினுக்கு இலக்கியம் கேட்க நேரமில்லை. அவர் செயல்வாதி. இலக்கியம் பேசுகிற நேரத்தில் இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தலாம் என நினைக்கிறார். கலைஞருக்கு இலக்கியம் - இயக்கம் இரண்டும் முக்கியம். ஸ்டாலினுக்கு இயக்கமே இலக்கியம். ஸ்டாலினுக்கு நேரம் இருக்கும்போது அவ்வப்போது சந்திக்கிறேன். வாரத்திற்குச் சிலமுறை பேசிவிடுகிறேன். நண்பர் ரஜினிகாந்த் என் கார் வரை வந்து வழியனுப்புவார்; ஆச்சரியமில்லை. முதலமைச்சரும் என் கார் வரை வந்து வழியனுப்புகிறார்; அது அவர் பண்பாடு.”

“உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர்கள் விஞ்ஞானிகளாக ஆசைப்பட்டேன். அப்துல் கலாம் அய்யாவிடம் நட்புகொள்ளச் செய்தேன். ஆஸ்திரேலியா வரைக்கும் படிக்க அனுப்பினேன். ஆனால், அவர்கள் கவிஞர்களாக வந்து இறங்கினார்கள். `தம்பிகளா! சினிமாக்காடு வறண்டுவிட்டது. நாங்கள் வேட்டையாடி முடித்துவிட்டோம்; வேட்டையாட இனி விலங்குகள் இல்லை. மொழி என்கிற கச்சாப் பொருள் தேவைப்படாத இடத்துக்குச் சினிமா நகர்ந்துகொண்டிருக்கிறது. பார்த்துப் பயணப்படுங்கள்' என்றேன். அவர்கள் தாய்மொழியைத் தாண்டிப் பயணப்படுகிறார்கள்.''

“நெடுங்காலமாக உங்கள் தோற்றத்தில் வித்தியாசமே இல்லை; என்ன ரகசியம்?”

“தாயும் தந்தையும் கொடுத்த உடல்; மரபணுக்களின் கொடை. சின்ன வயதில் அலைந்த காட்டுவெளி, வயிற்றை அடைக்கிற உணவுக்கு ஆசைப்படுவதில்லை. பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்துவிடுகிறேன். ஆயில் அதிகம் உபயோகித்தால் ஆயுள் குறையும். முக்கியமாக யார் மீதும் பொறாமைப்படுவதில்லை. பொறாமை என்பது பஞ்சுக்குள் வைத்த நெருப்பு; அது பஞ்சையே எரித்துவிடும். இதற்குமேல் உடற்பயிற்சி, யோகா கைவசம் இருக்கிறது. என் நுரையீரல்களுக்கு அதிகாலைக் காற்றை அள்ளித் தருகிறேன்.”