சினிமா
Published:Updated:

“அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

அஜித்
News
அஜித்

நம்ம வீட்ல அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ போலீஸா இருந்தா, அவங்க எப்படி இயல்பா இருப்பாங்களோ, அப்படித்தான் படத்துல அஜித் சார் கேரக்டர் இருக்கும்

உள்ளூர் அரசியல்வாதியிலிருந்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் வரை பலரிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு சாதனை படைத்தனர் அஜித்தின் ரசிகர்கள். கடந்த இரண்டு வருடங்களாகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்திருந்த ‘வலிமை’ ரகசியங்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். சென்னையில் உள்ள போனி கபூரின் அலுவலகத்தில் வினோத்தைச் சந்தித்தேன். அஜித்துடன் மீண்டும் கைகோத்த உற்சாகத்தில் புன்னகையுடன் கேள்விகளை எதிர்கொண்டார்.

`` ‘இதுதான் ‘வலிமை’ கதை’ன்னு இங்கே ஏகப்பட்ட கதைகள் சுத்துது. அஜித் இதுல இன்டர்போல் ஆபீசர்னு தகவல்கள் வேறு... எது உண்மை?’’

“இன்னும் சொல்லப்போனா, ‘அஜித் சாருக்கு டபுள் ஆக்‌ஷன்’, ‘இது ரேஸிங் பத்தின படம்’னுகூடத் தகவல்கள் சுத்திட்டு இருந்துச்சு. எதுவுமே உண்மையில்ல. இன்னிக்கு நம்மள சுத்தி நிறைய பிரச்னைகள் இருக்கு. அதுல எனக்கு முக்கியம்னு தோன்றிய ரெண்டு பிரச்னைகளை இந்தப் படத்துல கையில் எடுத்திருக்கேன். அந்த இரண்டு பிரச்னைகளும் ஹீரோ குடும்பத்துக்குள் வந்தால், அதை அவர் எப்படி சமாளிக்குறார் என்பதே கதை. என் முந்தைய ரெண்டு படங்கள்ல ஏற்கெனவே நடந்த குற்றங்கள் குறித்துப் பேசியிருப்பேன். இதுல ‘எதிர்காலத்துல இப்படியெல்லாம் குற்றங்கள் நமக்கு நடக்க வாய்ப்பிருக்கு’ என்பதைக் கற்பனை கலந்து சொல்லியிருக்கேன். நான் வலுவா நம்பற ஒரு சமூகப் பிரச்னையைப் படத்துல பேசியிருக்கேன்.’’

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

`` ‘மங்காத்தா’விலிருந்து அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்ல இருந்தார். இதுல செம உற்சாகமா, இளமைத் துள்ளலா இருக்காரே... இந்த லுக்கிற்கு அவரை மாத்தினது எப்படி?’’

“கதைதான் அவரை அப்படி மாத்த வச்சிருக்கு. நம்ம வீட்ல அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ போலீஸா இருந்தா, அவங்க எப்படி இயல்பா இருப்பாங்களோ, அப்படித்தான் படத்துல அஜித் சார் கேரக்டர் இருக்கும். ரொம்பவே ஜாலியானவரா வர்றார். அதேசமயம், ஒரு பிரச்னைனா அதுக்கான காரணத்தை உடனே கண்டுபிடிச்சு, அந்தப் பிரச்னையோட ஆணிவேர் வரைக்கும் போய் அதுக்கொரு தீர்வு சொல்ற ஆக்டிவ் போலீஸ் ஆபீஸராகவும் நடிச்சிருக்கார். இதான் அந்த எனர்ஜிக்குக் காரணம்!’’

``அஜித் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ படத்தைப் பத்தின தகவல்களை, அவரோட ரசிகர்கள் எதிர்பார்க்கறது நியாயம்தானே? அப்டேட் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்னை?’’

“இந்தக் கேள்விக்கான பதிலைக் கொஞ்சம் விரிவாவே சொல்றேன். ‘கடந்த 2020 தீபாவளிக்குப் படம் ரிலீஸ்’னு முடிவு பண்ணிட்டுத்தான் பூஜையே போட்டோம். ரிலீஸுக்கு 90 நாள்களுக்கு முன்பிருந்து படத்தோட புரமோஷனை ஆரம்பிக்கலாம்னு நினைச்சோம்.

முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது மூணு செட் போட்டிருந்தோம். அங்கே 20 சதவிகிதப் படப்பிடிப்பு முடியறப்ப கொரோனாவால் லாக்டௌன் வந்திருச்சு. அப்புறம் ஏழு மாசத்திற்குப் பிறகு ஷூட்டிங் கிளம்ப ரெடியானா, ஏகப்பட்ட பிரச்னைகள். முக்கியமான மூணு நடிகர்கள், ‘கொரோனா முடியற வரைக்குமே நாங்க ஷூட்டிங் வரமாட்டோம்’னு கறாரா சொல்லிட்டாங்க. அவங்க மூணு பேருமே கதையில முக்கியமான கேரக்டர்கள். லாக்டௌனுக்கு முன்னாடி அவங்கள பிரமாண்டமான செட்ல வச்சு ஷூட் பண்ணியிருந்தோம். அவங்க வரலைன்னதும் எங்களுக்கு பயங்கர ஷாக். திரும்ப செட் போட்டு, மறுபடியும் வேற நடிகர்களை வச்சு ரீஷூட் பண்ணுனா பட்ஜெட் எங்கேயோ போயிடும். அதனால், கதையை மாத்துறதா, நடிகர்களை மாத்துறதா, இல்ல, அந்த மூணு பேருக்காகக் காத்திருந்து மீண்டும் அவங்களையே நடிக்க வைக்கறதான்னு ஒரே குழப்பம்.

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

இன்னொரு பக்கம், நாங்க எந்தெந்தக் கட்டடங்களை எல்லாம் வெளிப்புற மாடலா வச்சு செட் போட்டிருந்தோமோ, அந்த இடங்கள்ல கொரோனா காரணமா ஷூட்டிங் நடத்த அனுமதி மறுத்துட்டாங்க. அந்த வெளிப்புறங்களையும் செட் போடணும்னா, பல கோடிகள் செலவாகும். அது நினைச்சுப் பார்க்க முடியாத பட்ஜெட்டா இருந்துச்சு. அதே மாதிரி வெளிப்புறத் தோற்றம் இருக்கற கட்டடங்கள் எங்காவது இருக்குமான்னு இந்தியா முழுக்கத் தேடினோம். ஆனா, கிடைக்கல.

இன்னொரு விஷயம், படத்துல நடிச்ச சில நடிகைகளுக்கு லாக்டௌன் சமயத்துல திருமணமும் நடந்துடுச்சு. சிலர் கர்ப்பமாகியிருந்தாங்க. அவங்களாலும் ஷூட்டிங் வர முடியல. கொரோனா மாதிரியான ஆட்கொல்லி வைரஸ் பரவும்போது, எல்லோருடைய நலனும் ஆரோக்கியமும் முக்கியம். அதையும் கவனத்துல எடுத்துக்கணும். இதனால படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா, நடக்காதான்னு எங்களுக்கே கொஞ்சம் தெளிவா தெரியலை. இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவுல நாங்க இருந்தோம். மத்தபடி அப்டேட் கொடுக்கக்கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்லை. மக்களுக்காகத்தானே படமே எடுக்குறோம். அவங்களுக்கு மறைச்சு, எங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? ‘கொரோனாவால மக்கள் தங்களோட வாழ்வாதாரத்தையும், சொந்தங்களையும் இழந்து நிக்கும்போது அப்டேட் கொடுக்க வேணாம்’னு அஜித் சாரும், போனிகபூர் சாரும் உறுதியான முடிவுலவேறு இருந்தாங்க!’’

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

``அப்புறம்... எப்படி சமாளிச்சீங்க?’’

“கொரோனா முதல் அலை தீவிரம் குறைய ஆரம்பிச்சதும், ஒவ்வொரு பிரச்னையா சரி பண்ணிட்டே வந்தோம். கதையில மாற்றம் பண்ணினோம். வரமுடியாதவங்களுக்கு ஏத்தமாதிரி சீன்களை மாத்தினோம். சில ஆர்ட்டிஸ்ட்களை மாத்தி, லொகேஷன்களை மாத்தி, ஷூட்டிங் ஆரம்பிச்சோம். ஆயிரம் பைக்ஸ் வச்சு எடுக்க வேண்டிய சீன், முதல் லாக்டௌனால ஐந்நூறாவும், ரெண்டாவது லாக்டௌனுக்குப் பிறகு இருநூற்றைம்பதாவும் குறைஞ்சு, கடைசில நூறு பைக் மட்டும் வச்சு ஷூட் பண்ண வேண்டிய நிலைமைக்கு வந்திருச்சு. ஒருவழியா இப்ப சுபம். முழுப் படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம். அந்த எனர்ஜியில அப்டேட் கொடுக்கறோம்.’’

``அஜித் இப்போது நிஜ ரேஸ்களில் கலந்துக்கறதில்ல. ஆனா, படத்துல சேஸிங் சீன்கள் இருக்குபோல. மறுபடியும் பைக் ரேஸுக்கு அவர் எப்படித் தயார் ஆனார்?’’

‘`இந்தக் கதைல பைக் ஒரு முக்கியமான அம்சம். படத்துல மூணு பெரிய பைக் சேஸிங் காட்சிகள் இருக்கு. அஜித் சார் இப்ப தொழில்முறை ரேஸில் கலந்துக்கறதில்லையே தவிர, அவர் இப்போதும் பைக்கில் லாங் டிரைவ் போய்ட்டுதான் இருக்கார். அதனால அவர் எப்பவுமே பைக் ஓட்டத் தயாராதான் இருக்கார்.

அஜித் சார்கிட்ட ‘இதுல நீங்க ரேஸ் பைக் ஓட்டுறீங்க’ன்னு சொன்னேன். அப்புறம் ஒரு நாள் அவர்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘வினோத் சார், நான் அப்பப்ப ஹைதராபாத், ராஜஸ்தான்னு பைக் ரைடு போவேன். நீங்க என்கூட ஒரு ட்ரிப் வாங்க. ட்ரிப் போகும்போது பாதுகாப்புக்கு ‘ரைடிங் கியர்’ போட்டுக்க வேண்டியிருக்கும். அதுக்கான இடம் ஒண்ணு சொல்றேன். அங்க உங்களுக்கு அதைத் தருவாங்க’ன்னு சொன்னார்.

அவர் சொன்ன இடத்துக்கு நானும் போனேன். நம்ம சட்டைக்குள் டி-ஷர்ட் மாதிரி ஒண்ணு போட்டு, அதுக்கு மேல ஒண்ணு போட்டு, அதுக்கும் மேல சேஃப்டி கோட் போட்டு, பேன்ட், அதுக்கு மேல சேஃப்டி பேன்ட், சேஃப்டி ஷூ, ஹெல்மெட், கிளவுஸ்னு இவ்வளவையும் போட்டு, அதிலுள்ள எல்லா பட்டன்களையும் போட்டு முடிக்கவே எனக்கு நாற்பது நிமிஷம் ஆகிடுச்சு. ஆனா அதுக்கப்புறம் அஜித் சார் என்னை எந்த ட்ரிப்பும் கூட்டிட்டுப் போகலை. ‘பின்ன எதுக்கு நம்மள அந்த டிரஸ் போட்டுப் பார்க்கச் சொன்னார்’னு குழம்பினேன்.

ஆனா, பைக் சேஸிங் படப்பிடிப்பு நடக்கறப்ப, ‘ஹீரோ ரெடியா’ன்னு கேட்குறதுக்கு முன்னாடி, ‘அந்த டிரஸ் போட டைம் எடுக்கும்ல, கொஞ்சம் லேட்டா கூப்டுவோம்’னு தோணுச்சு. அப்பத்தான் பளிச்னு என் மைண்ட்ல ஃப்ளாஷ் ஆச்சு. ‘பைக் காட்சிகளுக்கு அவர் ரெடியா இருந்தார். நானும் ரெடியாகறதுக்காக எனக்குத் தெரியாமலேயே என்னை அவர் தயார் பண்ணியிருக்கார்’னு புரிஞ்சது. ‘ரைடிங் கியர் போட எவ்ளோ நேரம் ஆகும், பைக் ஓட்டும்போது இருக்குற ரிஸ்க்குகள் என்ன’ன்னு பல விஷயங்களை சொல்லாமல் சொல்லிட்டார். இந்த மாதிரி அஜித் சார் நிறையவே பண்ணுவார். அது புரியறதுக்கே நமக்கு நிறைய நாள் ஆகும். பாதுகாப்புக்காக அவர் ரைடிங் கியர் போட்டுட்டுதான் பைக் சேஸிங் பண்ணினார்.’’

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

``அந்த ரேஸ் காட்சிகள் எடுக்கறப்ப மறக்க முடியாத அனுபவங்கள் கிடைச்சிருக்குமே?’’

“ஹைதராபாத்ல புதுசா போட்ட, இன்னும் திறக்காத நெடுஞ்சாலையில சேஸிங் காட்சிகள் ஷூட் பண்ணினோம். ரோட்டுல கல்லும் மண்ணுமா கிடந்துச்சு. ஒரு வீலிங் பண்ற ஷாட்ல ரோட்ல கிடந்த கல்லுல டயர் இடறி, அஜித் சார் கீழ விழுந்துட்டார். வேகமா வந்து விழுந்ததால் ரோட்ல பலமுறை புரண்டு கை, கால்ல எல்லாம் சதை பிய்ந்துபோகிற அளவுக்குக் காயமாகிடுச்சு. நான் ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தேன். விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி அங்கே போனோம். உடைஞ்சு கிடந்த பைக்கையே அஜித் சார் சோகமா பார்த்துட்டிருந்தார். ‘சார், உங்களுக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே’ன்னு பதற்றமா கேட்டேன். அதுக்கு அஜித் சார், ‘எனக்கு ஒண்ணும் இல்ல. பைக்தான் உடைஞ்சுடுச்சு. நாளைக்கு ஷூட்டுக்கு என்ன பண்றது?’ன்னு திருப்பிக் கேட்டார். ரைடிங் கியரைக் கழற்றிய பிறகுதான், அவருக்கு அடிபட்டிருக்கறது எல்லோருக்கும் தெரிஞ்சுது. ரொம்பவே கவலைப்பட்டோம்.

அப்புறம் அவர் யார்கிட்ட பேசினார், என்ன பேசினார்னு தெரியாது. ஒரு மேஜிக் மாதிரி, மறுநாள் காலைல அதே போல புதுசா 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் ஒண்ணு ஸ்பாட்டுக்கு வந்திருச்சு. அவ்ளோ அடிபட்டு காயம் இருந்தும், ரைடிங் கியர் போட்டுக்கிட்டு அஜித் சார் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். ‘சார், நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் டூப் வச்சு சேஸிங்கை எடுத்துக்கிறேன்’னு சொன்னேன். ‘இல்ல... அது சரியா வராது. நானே பண்றேன். என்னால ஷூட்டிங்குக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது!’ன்னு எங்களை வற்புறுத்தி சம்மதிக்க வச்சு நடிச்சார்.

ஷூட்டிங் ஆரம்பிக்குறது முன்னாடி, ‘இவ்ளோ ரிஸ்க் எடுத்து நடிக்கப்போறீங்க... அது நீங்கதான்னு ஆடியன்ஸுக்குத் தெரியணும். ஹெல்மெட்டைக் கழட்டிட்டு பைக் ஓட்டுறீங்களா சார்’னு கேட்டேன். ‘ஹெல்மெட் போட்டுத்தான் பைக் ஓட்டணும். சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது’ன்னு மறுத்துட்டார். ஒரு சீன்ல ஹாரன் அடிச்சிட்டே கார் ஓட்டுற மாதிரி எடுக்கணும்னு சொன்னபோது, அதுக்கும் மறுத்துட்டார். ‘ஹாரன் அடிக்குறது நியூசென்ஸ். ஹாரன் சவுண்ட் கேட்டா குழந்தைங்க, வயசானவங்க பதறுவாங்க. நல்லா டிரைவ் பண்ணத் தெரிஞ்ச யாரும் ஹாரன் அடிக்க மாட்டாங்க’ன்னு சொன்னார். இப்படி மத்தவங்கள பற்றியே அவர் எப்பவும் யோசிக்கறார்.’’

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

``அஜித் தவிர, வேறு கேரக்டர்கள் யார் பத்தியும் வாய் திறக்கலையே?’’

‘`உங்ககிட்ட முன்னமே சொன்னது மாதிரி லாக்டௌன் சூழல்கள்தான் காரணம். எந்த கேரக்டர்ல யார் தொடர்ந்து நடிப்பாங்கன்னே உறுதியா சொல்ல முடியாத சூழல். அதனால எதையும் வெளியில் சொல்லலை. படம் முழுசா முடிஞ்சதும் எல்லா கேரக்டர்களையும், அதுக்கான நடிகர்களையும் இப்ப சொல்லிட்டோம்.’’

 “அஜித் கற்றுத்தந்த ரகசியப் பாடம்!” - ஹெச்.வினோத் தரும் ‘வலிமை’ அப்டேட்

``அஜித் - ஹூமா குரேஷி லவ் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?’’

‘`கெமிஸ்ட்ரியா..? இது லவ் ஸ்டோரி கிடையாது. கொரோனாவுக்கு அப்புறம் கதையை மாத்தியிருக்கோம்னு சொன்னேன்ல. அதன்படி அஜித்துக்கு நண்பியா ஹூமா வர்றாங்க. அதனால காதல் காட்சிகள் வைக்கல.’’

(தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா ‘வலிமை’ வில்லன் ஆனது, அஜித் - வினோத் கூட்டணியில் அடுத்த படம்... வினோத்தின் பதில்கள் அடுத்த இதழிலும் தொடரும்...)