மாஸ்டர் தவசிராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள `காத்து' படத்தில், நடிகை வனிதா விஜயகுமார் இடம்பெற்றிருக்கும் பாடல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை, கானா பாலா எழுதி பாடியுள்ளளார். இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவும் யூடியூபில் வெளியாகிவுள்ளது. இந்தப் பாடல் மட்டுமன்றி, `தில்லு இருந்தா போராடு' , `அந்தகன்' என வரிசையாகப் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் வனிதா. 1995-ம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான வனிதா, குறுகிய காலத்திலேயே சினிமாவிலிருந்து வெளியேறினார்.

பல ஆண்டுகள் கழித்து பிக்பாஸ், குக் வித் கோமோளி என சின்னத்திரையில் ஒரு ரவுண்டு வந்தவர், மறுபடியும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம்.
``பிக்பாஸிஸிருந்து வெளிவந்தவுடன் ஒப்பந்தமான முதல் படம் `தில்லு இருந்தா போராடு'தான். ஆண்களே மிரளும் `பஞ்சாயத்து பரமேஸ்வரி' என்ற பவர்ஃபுல்லான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கொரோனாவால மூணு வருஷம் திண்டாடி, ஒருவழியா அந்தப் படத்தோட ஆடியோ லாஞ்ச் சமீபத்துலதான் நடந்துச்சு. சீக்கிரம் படம் வெளியாகும்னு எதிர்பார்க்கலாம்.
தேசிய விருது வாங்கி, பல மொழிகள்ல வெளியாகி, தற்போது தமிழ்ல உருவாக்கப்பட்டிருக்கிற `அந்தகன்' படத்துல முக்கிய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். நடிகர்களைத் தட்டிக் கொடுத்து வேலைவாங்குறது சீனியர்களுக்கே உள்ள திறமை. அந்தவகையில தியாகராஜன் சிறந்த தயாரிப்பாளர்.

பிரசாந்த், பிரியா ஆனந்த், கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார்னு சிறந்த நடிகர்கள், திறமைசாலிகள் பட்டாளமே இருக்கிறதால பிற மொழிகளைவிட தமிழ்ல இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும்னு நம்புறேன். படம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாசத் தொடக்கத்துல ரிலீஸ் ஆகும். தியேட்டர்ல படம் வெளியாகணும்றதுதான் எங்க எதிர்பார்ப்பும் ஆசையும். அதுக்காகக் காத்திருக்கோம்" என்றவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசினார்.
``முன்னாடி எல்லாம், ஷூட் செய்த உடனே மானிட்டர்ல பார்க்கிற வசதியெல்லாம் கிடையாது. முழு ஷூட்டும் முடிச்சிட்டு, டெவலப் செய்து பார்த்தாதான், அதுல உள்ள குறைநிறைகளே தெரியும். `மாணிக்கம்' படத்துல, `சந்தனம் தேச்சாச்சு'ன்ற பாட்டு தொழில்நுட்பக் கோளாறால மறுபடி ஷூட் பண்ண வேண்டி வந்தது. இன்னைக்கு அவ்ளோ டைம் வேஸ்ட் ஆகிறதில்லை. நடிகர்களோட மதிப்பு, சம்பளம்னு எல்லாம் உயர்ந்தது மட்டுமல்லாம, அவங்வங்க போக்குல வாழும் சுதந்திரமும் கிடைச்சிருக்கு" என்றவர், தன் முதல் பட அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

``அன்னைக்கு நான் நடிகர் விஜய்யை அணுகிய முறைக்கும், இன்னிக்கு அவர் இருக்கும் உயரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வியப்பா இருக்கு. அன்னைக்கு நான் எப்படி பேசிப் பழகினேனோ அப்படியே இன்னைக்கும் என்னால பேசமுடியும். இன்னைக்கு திடீர்னு `அவர்', `இவர்'னு மாத்திப் பேச முடியாது. இன்னைக்கு நான் பேசுறதைக் கேட்கிறவங்களுக்கு நான் ஏதோ மரியாதைக்குறைவா பேசுறது போல தெரியும். ஆனா, நான் ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் பேசிப் பழகியிருக்கேன்.
விஜய்யோட ரசிகர்கள் எனக்கும் ரசிகர்கள்தான். ஆரம்பகால `தளபதியின் கதாநாயகி'ன்ற அந்தஸ்து எனக்கு இருக்கு, அவரோட ரசிகர்கள் மத்தியில எனக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தரும்னு நம்புறேன்" என்றவர் சின்னத்திரை வாய்ப்புகளையும் தவறவிடப்போவதில்லை என்கிறார்.
``ரியாலிட்டி ஷோக்கள் மூலமா மக்களுக்கு அதிகமா பரிச்சயமானதால, என்னை மக்கள் வரவேற்கறாங்க. சின்னத்திரைதான் மக்களோட நீடிச்ச தொடர்பை ஏற்படுத்தும் கருவி. தொடர்ந்து மக்களுடன் இணைப்பில் இருக்கும் வாய்ப்பை சின்னத்திரை ஏற்படுத்திக்கொடுக்குது" என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் தயாரித்து இயக்கி விரைவில் வெளியாக உள்ள `அநீதி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர, `மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், `சாச்சாரியாயுடே கர்ப்பிணிகள்' என்ற சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான `வாசுவின் கர்ப்பிணிகள்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது தவிர கருணாகரனுடன் இணைந்து `அனல்காற்று' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறாராம். அடுக்கடுக்காகப் படங்கள், ரியாலிட்டி ஷோ, பொட்டிக் ஷாப் பிசினஸ், யூடியூப் சேனல் என வனிதா நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்.