
நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது எனத் தகவல்கள் வந்தன. உண்மை என்ன?
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. சிம்புவுடன் நடித்த `போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமானார்.
`தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து `விக்ரம் வேதா', `சர்கார்', `சண்டக்கோழி-2', `மாரி-2' என முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் விஷாலும் - வரலட்சுமியும் காதலிக்கிறார்கள் என்கிற செய்தி பல ஆண்டுகளாக கோலிவுட்டில் சுற்றிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு விஷாலுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில், இப்போது வரலட்சுமிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்திருப்பதாக அவர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தகவல் சொல்லினர். இந்நிலையில் தனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லையென்றும், இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடிக்கும் அளவுக்கு கைவசம் நிறையப்படங்கள் இருப்பதாகவும் திருமணம் குறித்த செய்திகளை மறுத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.